

முக்கிய தினம் வரிசையில், ஜூன் மாதத்தின் மூன்றாம் ஞாயிறு அன்று, தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்படுகிறது. தந்தையரின் முக்கியப் பங்கினை, விவிலியத்தில் இடம் பெற்றுள்ள நூல்கள் பல எடுத்துரைக்கின்றன.
தொடக்க நூலில், எண்ணற்ற நாடுகளின் தந்தையாக, ஆபிரகாமை கடவுள் ஆசீர்வதிக்கிறார். எனவே, முதுபெரும் தந்தை என்று ஆபிரகாம் அழைக்கப்படுகிறார். தந்தை வழி மரபை, பல இடங்களில் விவிலியம் எடுத்துரைக்கிறது.
தந்தையரின் சீர்மையை, சீராக்கின் ஞானம் நயம்பட உரைக்கின்றது. பிள்ளைகளைவிடத் தந்தையரை மிகுதியாக மேன்மைப்படுத்தும் கடவுள், தந்தையரை மதிப்போரின் பாவங்களை மன்னித்து, வேண்டுதலையும் கேட்கின்றார் என்று கூறுகிறது. தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும் என்றுரைக்கும், சீராக், "தந்தையரை மதிப்போர் நீடு வாழ்வார்' என்றும் கூறுகிறது. "தந்தையரைக் கைவிடுவோர், பழிப்புக்குரியவர்' என்றும் அந்நூல் எச்சரிக்கிறது.
தந்தையர் தம் மக்களை நன்னெறியில் வழி நடத்தும்படியும் விவிலியம் அறிவுறுத்துகிறது. கடவுள் கட்டளையிட்ட வாழ்வின் நெறிகளை வாழ்நாளெல்லாம் கடைப்பிடிக்கும்படி பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், அறிவுறுத்தி வரும்படி இணைச்சட்ட நூல் எடுத்துரைக்கிறது. முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் இறை அன்பில் திளைத்திருக்கும்படியும் அந்நூல் நவில்கிறது.
பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மனம் தளர்வடையும்படி செய்யாதீர்கள் என்று தந்தையரை தன் திருமடல் வழியாக, வேண்டுகின்ற பவுலடியார், ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்து, திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வரும்படி அறிவுறுத்துகிறார்.
கடவுளை தம் தந்தை என அழைத்து வேண்டுதல் செய்வதையும் விவிலியம் விவரிக்கிறது:
"நம் அனைவருக்கும் தந்தை! நம்மைப் படைத்த கடவுள்' என்று மலாக்கி என்னும் இறைவாக்கு நூல் அறிவுறுத்துகிறது.
"எங்கள் தந்தையரின் இறைவா! உமக்கே நன்றியும் புகழும்!'' என்று தானியேல் முழங்குகிறது. ""விண்ணில் இருக்கும் எம் தந்தையே!'' என்று தொடங்கும் இறை வேண்டுதலை அமைத்து தந்துள்ளார் இயேசுபிரான். ஊதாரி மகன் உவமை வழியாக, பரம தந்தையின் பாசத் தவிப்பையும் உணர்த்தியுள்ளார். "நல்லவை அனைத்தும் ஒளியின் பிறப்பிடமான, விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன' என்று யாக்கோபு தன் திருமடலில் பறை சாற்றுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.