பாரம்பரிய நோன்பு!

நம்பிக்கையுடையோரே! உங்களின் முன்னோர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று திருக்குர்ஆன் (2-183) கூறுகிறது
Updated on
1 min read

நம்பிக்கையுடையோரே! உங்களின் முன்னோர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'' என்று திருக்குர்ஆன் (2-183) கூறுகிறது.

உலகம் படைக்கப்பட்டு ஆதிநபி ஆதம் - ஹவ்வா (ஏவாள்) வழியே மக்கள் சமுதாயம் உருவானதிலிருந்து ஒவ்வொரு இறைத்தூதரைப் பின்பற்றும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக்கப் பட்டதைக் குர்ஆன் கூறுகிறது.

கால சூழ்நிலை, வளர்ச்சிக் கேற்ப முந்திய விதிகளிலிருந்து பிந்திய சட்டங்களும் நடைமுறைகளும் மாறுபடுவது உலக நியதி. இந் நியதிக்கேற்ப இஸ்லாமிய நோன்பு முந்திய நோன்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

இஸ்லாமியர்களின் ஹிஜ்ரி ஆண்டின் 9- வது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆண் பெண் இருபாலருக்கான கட்டாய கடமையாகும். நோன்பு நோற்போர் சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு உணவு உண்ணுவதையும் நீர் பருகுவதையும் நிறுத்த வேண்டும்.

"இதனையே பஜ்ருக்கு (வைகறை தொழுகை) முன்பே நோன்பு வைக்க எவர் எண்ணவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்ததை இப்னு உமர் (ரலி) எடுத்துரைப்பது அபூதாவூத் நூலில் காணலாம்.

சூரியன் மறைந்து 15 நிமிடங்களுக்குப் பிறகு நோன்பு திறக்க வேண்டும். ஒரு நாளில் 14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும்.

நோன்பிருப்போர் பொய், புறம், கெட்ட பேச்சுக்கள் பேசக்கூடாது. அறிவீனமான பழிவரும் பாவச் செயல்களில் ஈடுபடக்கூடாது. சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) புகன்றது புகாரி முதலிய கிரந்தங்களில் காணப்படுகிறது.

மாதங்களில் சிறந்த ரமலானில்தான் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குர்ஆன் அருளப் பட்டது என்று எழில் மறைக்குர்ஆனின் 2-185 வது வசனம் கூறுகிறது.

இச்சிறப்புடைய மாதத்தில் சிறப்பிற்குரிய செயல்களையே செய்ய வேண்டும். வெறுக்கத் தக்கவற்றை வெறுத்தொதுக்க வேண்டும். மறுமையில் மகத்தான பலனைத் தரும் இந்நோன்பில் இம்மை பயன்களும் பல உள.

புசியாதிருப்பது புனிதம் மட்டுமல்ல, பல நோய்களுக்கும் நல்ல மருந்து. அதனால் ஆயுர்வேத மருத்துவம், ""லங்கணம் பரம ஒளஷதம்'' என்றுரைக்கிறது.

சித்த மருத்துவமும் சிரத்தையாய் உண்ணா நோன்பை ஊக்குவிக்கிறது. இன்றைய நவீன அலோபதி மருத்துவமும் உணவு கட்டுப்பாட்டைக் கட்டாயப் படுத்துகிறது.

ஆண்டில் 11 மாதங்களும் பசியறியாது புசித்தோர் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழைகளுக்கு வாரி வழங்க நோன்பு வழிகாட்டுகிறது.

அதனாலேயே இம்மாதத்தில் "ஜகாத்' என்னும் ஏழைவரி கணக்கிட்டு இல்லாதோருக்கு இன் முகத்துடன் ஈயப்படுகிறது.

பள்ளி வாசல்களில் ஒவ்வொருவரும் கொண்டு வரும் பழம், சிற்றுண்டிகளைப் பலருக்கும் வழங்கி ஒன்றாய் அமர்ந்து சமபந்தி போஜனம் போல் நோன்பு திறக்கும் பழக்கம் பகுத்துண்ணும் பண்பைப் பறைசாற்றுகிறது. ஏற்றத் தாழ்வு இல்லாமையை எடுத்தியம்புகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com