
"வரைத்தடங் கொங்கை யாலும்'' என்று ஆரம்பிக்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்ப் பாடலில் பாரிஜாத மரம் பூமிக்கு வந்த கதை!"செருக்கெழுந்தும்பர் சேனை துளக்கவென்றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே'' என்று வரும் அடிகளில் கண்ணபிரான் இந்திரன் முதலான தேவர்களை வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொண்டு வந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
துவாரகையில் கண்ணபிரான், ருக்மணி, சத்யபாமா சகிதம் ரெண்டு பொண்டாட்டிக்காரராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாரதர் வீணை சகிதம் ""நாராயண, நாராயண'' என்று குரல் கொடுத்தபடி கண்ணபிரானைக் காண வருகிறார். அவர் இன்னொரு கையில் மணம் கமழும் மலர் மாலை. அது இந்திரன் தோட்டத்திலிருக்கும் பாரிஜாத மரத்திலிருந்து பறித்த மணம் மிக்க மலர்களால் தொடுக்கப்பட்டது. அந்த மாலையை கண்ணபிரானிடம் தந்து அதன் அருமை பெருமையைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கம் செய்துவிட்டுப் போகிறார். கண்ணன் அந்த மாலையைக் கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் ருக்மணி வருகிறாள். அந்த மாலையை வியப்புடன் பார்த்த ருக்மிணியிடம் அதைக் கொடுத்து அதன் பெருமையைக் கூறி அணிந்து கொள்ளச் சொல்கிறார்.
ருக்மிணி உடனே அதை எடுத்துக்கொண்டு அந்தப்புரத்திற்குச் சென்று அந்த மலர் மாலையை அணிந்துகொண்டு பெரிய கண்ணாடி முன் நின்று அப்படியும் இப்படியும் திரும்பி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. அந்த நேரம் பார்த்து சத்யபாமா வருகிறாள். ருக்மணி கழுத்தில் மாலையைக் கண்டு ""இது ஏது?'' என்று வினவுகிறாள். அந்தக் கேள்விக்காகவே காத்துக் கொண்டிருந்த ருக்மணி, ""இது இந்திரனுடைய தோட்டத்தில் இருக்கும் பாரிஜாத மரத்திலிருந்து கொய்த மலர்கள். இதை மாலையாகக் கட்டி அணிந்து கொண்டால் வெகுகாலம் இளமையாகவே ஜொலிக்கலாம். பகவான் இதை எனக்காக ஆசையுடன் கொடுத்திருக்கிறார்'' என்று கண்களைச் சிமிட்டியபடி புளகாங்கிதமாகச் சொல்கிறாள் ருக்மணி!
அவ்வளவுதான். சத்யபாமா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க தனது இல்லத்திற்குச் சென்று அணிந்து கொண்டிருந்த நகைகளையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு தரையில் விழுந்து விம்மி விம்மி அழுகிறாள். அந்த நேரம் பார்த்து நாரதர் அங்கே வருகிறார்.
தான் கிருஷ்ணனுக்குக் கொடுத்த பாரிஜாத மாலை தன் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறதா என்று பார்க்கத்தான்! ஒன்றும் அறியாதவர்போல சத்யபாமாவிடம் விஷயம் என்னவென்று கேட்க, வெடிக்கிறாள் சத்யபாமா!
"பாரும் நாரதரே! இந்த மாயக்கிருஷ்ணனின் ஓரவஞ்சனையை! அவருக்கு அவள்தான் ஒசத்தியாகப் போய்விட்டாள்.
பாரிஜாத மாலையை அவளுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த அநியாயத்தை நீராவது கேட்கக் கூடாதா? நரகாசுர வதத்தின்போது என் உயிரைப் பணயம் வைத்து எப்படியெல்லாம் சாமர்த்தியமாகத் தேர் ஓட்டி இவர் வெற்றி பெற உதவியிருக்கிறேன்? அதையெல்லாம் துளியாவது சிந்தித்துப் பார்த்தாரா இந்த மனுஷன்? இன்றைக்கு மாலை வருவார் அல்லவா?'' என்று கருவுகிறாள் சத்யபாமா!
"நீ வருத்தப்படாதே அம்மா... அவருக்கு எப்போதும் ருக்மணி என்றால் ஒரு படி மேல்தான் என்பது தெரியாதா உனக்கு? குறைந்தபட்சம் பாரிஜாத மாலையைத் தரவில்லையென்றாலும் ஒரு பூவையாவது உனக்குத் தந்திருக்கலாம்! ம்ம்.. பரவாயில்லை. விடு! நான் வருகிறேன்'' என்று எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெயையும் வார்த்துவிட்டுக் கிளம்புகிறார் நாரதர்.
இரவு வழக்கம்போல் கண்ணபிரான் சத்யபாமாவின் மாளிகைக்கு வந்தபோது சத்யபாமாவின் அலங்கோலத்தைக் கண்டு திடுக்கிட்டு பலவாறு நல்ல வார்த்தைகள் சொல்லி அழுகைக்குக் காரணம் கேட்கிறார்.
சத்யபாமா அவரைக் கடிந்து பேசி பாரிஜாத மலர் மாலையை எவளுக்குக் கொடுத்தாரோ அவள் வீட்டிற்கே போகச் சொல்லிக் கடுகடுக்கிறாள்.
கிருஷ்ணர், ""ப்பூ.. இவ்வளவுதானா? இந்த அல்ப மாலைக்கா நீ இப்படிக் கண்ணீர் வடிக்கிறாய்? உனக்குப் பாரிஜாத மலர் என்ன, அந்த மரத்தையே கொண்டு வந்து உன் தோட்டத்தில் நடுகிறேன் பார்!'' என்று ஜம்பமாகக் கூறிவிட்டு நாரதரை அழைக்கிறார்.
நாரதரிடம் ""இந்திரனிடம் சென்று, நான் கேட்டதாய் அந்தப் பாரிஜாத மரத்தை இங்கு அனுப்புமாறு கூறும்'' என்கிறார்.
நாரதரும் அவ்வாறே இந்திரனிடம் சென்று கண்ணபிரானின் கட்டளையைக் கூறுகிறார். ஆனால் இந்திரனோ, ""என்ன நாரதரே.. அவர்தான் கேட்டார் என்றால் நீரும் அதை வந்து என்னிடம் சொல்கிறீரே.. இந்தப் பாரிஜாத மரத்தை பூவுலகிற்கு அனுப்புவதாவது? இது பாற்கடலில் அமிர்தத்தோடு வந்தது. இதனுடைய மகிமையை எவராலும் மதிப்பிட முடியாது. அதனால் அதை இந்த தேவலோகத்தை விட்டு எங்கும் அனுப்ப முடியாது. வேண்டுமானால் பாரிஜாத மலர்கள் சிலவற்றை அனுப்புகிறேன்'' என்றார்.
நாரதர் இந்த விஷயத்தைக் கண்ணபிரானிடம் சொல்ல, கண்ணபிரான் வெகுண்டு எழுகிறார்.
"நன்றி கெட்ட இந்திரா.. நரகனைக் கொன்று விண்ணுலகை உனக்குத் தந்த எனக்கு இதுதான் நீ தரும் பதிலா. இரு வருகிறேன்'' என்று இந்திரன் மீது போர் தொடுத்து விட்டார்.
தேவேந்திரனுக்கு உதவியாகத் தேவர்கள் போரிட்டனர். எனினும் கிருஷ்ணபரமாத்மாவின் முன் அவர்கள் எம்மாத்திரம்? எல்லோரும் ஓடி ஒளிய இந்திரனை அழிக்க கண்ணபிரான் தனது சக்கராயுதத்தை எடுத்தார். நிலைமை விபரீதமாக மாறுவதைக் கண்ட காஸ்யப முனிவர் கண்ணபிரான் முன் தோன்றி இருவருக்கும் சமாதானம் சொல்லிப் போரை நிறுத்துகிறார்.
இந்திரன் கண்ணபிரானைத் தொழுது பாரிஜாத விருட்சத்தைக் கொண்டுபோய் சத்யபாமா அரண்மனைத் தோட்டத்தில் வைக்கிறார். சத்யபாமா மனம் மகிழ்ந்து கண்ணபிரானைக் கட்டிக் கொள்கிறார்! நாரதரும் விஷமப் புன்னகையோடு தான் செய்த கலகத்தால் பூவுலகிற்குப் பாரிஜாத மரம் வந்ததை எண்ணி மகிழ்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.