
அருணகிரிநாதர் சந்தப் பாடல்களைப் பாடுவதில் ஈடு இணையற்றவராக விளங்கியவர். 3000 பாடல்களைக் கொண்ட அந்தச் செவ்விய நூல் முழுவதும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் புகழைப் பாடுகின்ற பக்திப் பனுவல்கள். இப்பாடல்களின் முன் பகுதியில் உலகியல் வாழ்விலுள்ள இன்பங்களை வெறுத்தும், அதே பாடல்களின் பின்பகுதியில் முருகப்பெருமானின் அற்புதங்களையும் அருள் விளையாட்டுகளையும் பாடலுக்குரிய அந்தத் தலப்பெருமையையும் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
அவர், பழமுதிர்சோலை முருகனைப் புகழந்து பாடிய பாடல் பக்தி மட்டுமல்லாது, அவரது எல்லையில்லா மருத்துவ ஞானத்தையும் உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
தலைமயிர் கொக்குக் கொக்கநரைத்துக்
கலகலெ னப்பற் கட்டது விட்டுத்
தளர்நடைபட்டுத் தத்தடியிட்டுத் - தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட்
டசனமும்விக்கிச் சத்தியெ டுத்துச்
சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் - பலகாலும்
திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத்
தெளிய வடித்துத் துய்த்துடல் செத்திட் - டுயிர்போமுன்
திகழ்புகழ் சற்றுச் சொற்கள்ப யிற்றித்
திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச்
செனனம றுச்கைக் குப்பர முக்திக் - கருள்தாராய்
கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப்
புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகந டத்தித் திட்டென எட்டிப் - பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டறவிட்டுத்
திரைகட லுக்குட் புக்கிட எற்றிக்
களிமயி லைச்சித் ரத்தின டத்திப் - பொருகோவே
குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக்
குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் - றிரிவோனே
கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச்
சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் குலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப் - பெருமாளே
என்பது பழமுதிர்ச்சோலை முருகப் பெருமானின் மீது அவர் பாடிய இனியபாடல்.
வயது முதிர்ச்சியினால் தலைமயிரானது கொக்கின் உடலைப் போன்று வெளுத்து நரைத்துப்போயின. பல் வரிசைகள் கலகலவெனக் கட்டுவிட்டன. நடையும் தளர்ந்து தடுமாறிப் போனது.
அந்த நிலையில் தடியைக் கையில் ஊன்றிக்கொண்டும், சிறு குழந்தையைப் போன்று தத்தித் தத்தி நடந்து கொண்டும் உணவு உண்ண முடியாது துயர் பட்டேன். ÷விக்கல் வேறு முன்னின்று வந்து, வாந்தியெடுத்துச் சளியும் மிக்கு பித்தமும் அதிகரித்தன. அனல் பட்டால் ஏற்படும் எரிச்சல் போன்று ஏற்பட்ட எரிச்சல் மிக்குத் துன்புறுத்தியதால் தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றுடன் சுக்கு திப்பிலி முதலானவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தெளிய வடித்துப் பருகினேன். அதனால் உடல் மடிந்து விடாதவாறு காத்து உனது புகழைக் கற்றேன். அந்தப் புகழுக்குரிய சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறி உனது திருவடியைப் பற்றி வணங்கி முறையிட்டு எனது பிறப்பை அறுத்து உனது திருவடிப்பேறு பெற்று முக்தி இன்பத்தினைப் பெற்று நான் உய்ய அருள் செய்வாயாக என்று முருகப் பெருமானை வேண்டி உருகுகிறார்.
இந்தப் பாடல் முருகனின் புகழைப் பாடுவதோடு முடிந்துவிடவில்லை. உடல் வெளுத்து, பல் வரிசைகள் கட்டுவிட்டு நடையும் தளர்ந்த நிலையில் தடியை ஊன்றிக் காலத்தைக் கழித்துவரும் நிலையில், நெஞ்சிலே சளி மிகுந்து அதனால் பித்தமும் அதிகரித்துவிட்டால், அப்பிணி தீர்வதற்குத் தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் எனும் திரிபலாவோடு சுக்கையும் திப்பிலியையும் சேர்த்துக் காய்ச்சித் தெளியவடித்து உட்கொள்ள இந்த நோய்களெல்லாம் தீரும் என்பதை இப்பாடலின் வழியே கூறியுள்ளார்.
மருத்துவம் மட்டுமே நோய்க்குத் தீர்வாகாது என்பதையும் இம்மருந்துகளை உட்கொள்வதோடு அவன் மீது பக்தி கொண்டு மருந்தினைஉட்கொள்வதும் நோய்க்குத் தீர்வாகும் என்பதையும் எடுத்தியம்பியுள்ளார். மேலும் முருகப் பெருமான் மீது பக்தி கொள்ளும் திறத்தையும் அதன் வழியேதான் அறிந்துள்ள மருத்துவ ஞானத்தையும் நமக்கெல்லாம் கற்றுத் தருகிற பாங்கும் வியப்புக்குரியதாகும்.
11.7.2014 ஆனி மூலம் அருணகிரிநாதர் குருபூஜை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.