ஜகாத் என்னும் ஏழை வரி!

குர்ஆனில் தொழுகையைத் தொழ பணிக்கும் பொழுது ஜகாத்தையும் கொடுக்க ஏவப்படுகிறது.
Updated on
2 min read

குர்ஆனில் தொழுகையைத் தொழ பணிக்கும் பொழுது ஜகாத்தையும் கொடுக்க ஏவப்படுகிறது. குர்ஆனின் 2-43, 2-110 மற்றும் 2-277 வது வசனங்கள் முறையே அறிவிப்பது. "நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஜகாத் கொடுத்து வாருங்கள்.'' ""தொழுகையைக் கடைபிடித்து ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள்,''

"எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்து தொழுகையைக் கடைபிடித்து ஜகாத் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குக் கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குண்டு''

"அவர்களின் பொருளில் கேட்பவருக்கும் கேளாதவருக்கும் பங்குண்டு'' என்று பகர்கிறது குர்ஆனின் 51-19 வது வசனம். கேளாதவர் யார்? அவரை எங்கே, எப்படி கண்டுபிடிப்பது? என்று குழம்பாமல் இருக்க ஜகாத் பெற தகுதியுடையவர் என்று எட்டு பிரிவினரைத் தொட்டு காட்டுகிறது குர்ஆனின் 9 -60 வது வசனம்.

அதாவது வறியவர், ஏழை, ஜகாத்தை வசூலிப்பவர், விடுதலைப் பெற்ற கொத்தடிமைகள், கடனாளிகள், பொது நல பணியாளர்கள்,அவசிய அனுமதிக்கப்பட்ட பயணம் மேற்கொண்டு எதிர்பாராத இடையூறுகளால் இன்னலுற்று ஆதரவற்று நிற்போருக்கு அபயமளித்து ஆவன செய்திடல் வேண்டும்.

ஓர் ஆண்டு என்பதை ஹிஜ்ரி ஆண்டிலோ காலண்டர் ஆண்டிலோ, அல்லது அவரவர் வாழும் நாட்டில் நிலவும் நிதி ஆண்டிலோ கணக்கிடலாம். பெரும்பாலோர் நோன்பு நோற்கும் சிறப்பு மிக்க ரமலான் மாதத்தில் நற்செயல்களுக்கு நற்கூலி அதிகம் (70 மடங்கு) கிடைப்பதால் ரமலானில் ஆண்டு கணக்கிட்டு ஜகாத் கொடுக்கின்றனர். ஜகாத்தைக் கணக்கிடுவதற்கு முன்னோடியான முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நன்மொழியை அலி (ரலி) அவர்கள் அறிவிப்பது ஸþனன் என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

"190 திர்ஹம் வரை ஜகாத் இல்லை. 200 திர்ஹம் வந்து விட்டால் 5 திர்ஹம் (40க்கு 1 வீதம்) ஜகாத் கொடுக்க வேண்டும்.'' இதன் அடிப்படையில் வங்கிகளிலும் நகைக் கடையிலும் சேமித்து வைத்துள்ள தங்கம் 86 கிராம் அளவிற்கு அதிகமாக இருந்தால் 2 1/2 சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.

அணிந்து கொள்ளும் பயன்பாட்டில் உள்ள தங்க நகைகளின் அளவு 860 கிராமும் அதற்கு மேலும் இருந்தால் 2 1/2 சதவீத ஜகாத் கடமை ஆகிறது. அணியும் நகைகளின் ஜகாத்தை வலியுறுத்தியே வான்மறை குர்ஆனின் 33- 33 வது வசனம், ""பெண்களும் ஜகாத் கொடுக்க வேண்டும்'' என்று அறிவுறுத்துகிறது.

உங்கள் வங்கி கணக்கில் ஆண்டின் இறுதியில் உள்ள இருப்புத் தொகைக்கு 2 1/2 சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். பல வங்கிகளில் பல கணக்குகள் வைத்திருப்போர் ஒவ்வொரு கணக்கிலும் உள்ள ஆண்டின் இறுதி இருப்புகளைக் கூட்டி கூட்டுத் தொகைக்கு 2 1/2 சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும்.

சேமிப்பு ஜகாத் கணக்கிடுவதற்கும் குழும பங்கு ஜகாத் கணக்கிடுவதற்கும் வேறுபாடு உள்ளது. சேமிப்பு ஒருவர் சேமித்த தொகை. பங்குகளின் மதிப்பு சந்தையில் நாலுக்கு நாள் ஏறி இறங்கிக் கொண்டேயிருக்கும். கணக்கிடும் ஆண்டின் இறுதி நாளில் ஒரு கம்பெனியின் பங்கு விலை என்னவோ அந்த விலைக்குரிய ஒருவரின் பங்கின் மதிப்பிற்கு 2 1/2 சதவீதம் ஜகாத் கொடுக்க வேண்டும். பல குழும பங்குகளை வைத்திருப்போர் கணக்கிடும் ஆண்டு முடிவு நாளில் ஒவ்வொரு பங்கின் சந்தை விலைகளைக் கணித்து கூட்டி மொத்த தொகைக்கு 2 1/2 சதவீத ஜகாத் கொடுக்க வேண்டும்.

வியாபாரத்தில் பெற்ற இலாபத்திற்கு ஜகாத் கொடுக்க அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிப்பவர் - சமுராபின் ஜூந்துப் (ரலி) நூல் - அபூதாவூத். ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வியாபாரத்தில் வரும் இலாபத்திற்கும் அந்த வியாபாரத்தில் உள்ள இலாபம் ஈட்டும் சொத்திற்கும் ஜகாத் உண்டு.

"ஜகாத் பரிசுத்தப்படுத்தி தூய்மைப் படுத்தக் கூடியது'' என்று எழில் மறை குர்ஆனின் 9 -103 வது வசனம் கூறுகிறது. கொடுப்பவர் பெறுபவர் ஆகிய இருவரின் செல்வத்தை ஜகாத் பெருக்கி உருக்கும் வறுமையை விரட்டுவதை விரிவாக சொல்கிறது அல்லாஹ்வின் அருமறை குர்ஆனின் 30 -39 வது வசனம், ""அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுத்தாலும் கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாகப் பெறுவர்.''

"ஒருவர் ஒரு பொருளை ஈட்டினால் ஒரு வருடம் கழிந்த பின்புதான் அப்பொருளின் மீது ஜகாத் கடமையாகிறது'' என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை நவில்பவர் -இப்னு உமர் (ரலி) நூல் -திர்மிதீ.

இவ்வாறு ஆண்டு முடிவில் ஆனந்தமாய் ஜகாத் கொடுப்பவர் ஈமானுடைய ருசியை உணர்வார் என்று அறிவிப்பவர் -முஆவியா (ரலி) நூல் -அபூதாவூத்.

ஏழை வரியாம் ஜகாத்தை வெளிப்படையாக பிறர் அறிய கொடுப்பது பிறரையும் ஜகாத் கொடுக்கத் தூண்டும் என்ற செய்தி புகாரியில் பதிவாகியுள்ளது.

குர்ஆனின் கூற்றைப் புறக்கணித்து புறந்தள்ளி நிறைந்த செல்வத்தைப் பதுக்கி வைத்து பாதுகாப்பவரின் பரிதாபத்தைப் பகரும் குர்ஆனின் வசனங்கள். ""எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்கிறார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.'' (9-34) அத்தண்டனை விவரம் ""ஜகாத் கொடுக்காதவர் மறுமையில் நிராகரிப்பவர்களோடு இருப்பவர்'' (41-7) ""நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகம்'' (9-73)

நாம் குர்ஆன் கூறுகிறபடி குர்ஆன் வழிநடந்து வழிகாட்டிய நந்நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி நோன்பு நோற்கும் ரமலான் மாதத்தில் 2 1/2 சதவீத ஜகாத்தைக் கொடுத்து பொருளைப் பரவலாக்கி இல்லாமையை இல்லாமல் ஆக்கி, அடிப்படை வசதியற்ற ஏழைகள் எங்குமில்லை என்ற சமதர்ம சமூகநீதியை நிலை நிறுத்தி பெருவாழ்வு நல்கும் பேரிறைவன் அல்லாஹ்வின் திருவருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com