பேரழிவு தரும் பேராசை!

விருப்பம் என்ற பொருளை உணர்த்தினாலும், அன்பைத் தெரிவிப்பதற்கும், ஆசை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
பேரழிவு தரும் பேராசை!
Updated on
1 min read

விருப்பம் என்ற பொருளை உணர்த்தினாலும், அன்பைத் தெரிவிப்பதற்கும், ஆசை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். அன்பைப் பெரியதாகக் கூறுமிடத்து, பேரன்பு என்கிறோம். இயல்பான, ஏற்கத்தகுந்த ஆசையைக் கடந்து, தன்னலம் மட்டுமே கொண்ட பேராசையை பெரும் தீங்காக கருதுகிறோம். அப்பெரும் தீமையை வன்மையாக, விவிலியம் கண்டிக்கிறது.

ஏமாறுபவர்களின் உடமையை எடுத்துக் கொள்ள பேராசைக்காரர்கள் துடிப்பர் என்று யோபு நூல் (5.5) கூறுகிறது. கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எசாயா, பேராசை என்னும் தீமையை முன்னிட்டு இஸ்ராயலேர் மீது கடவுள் சினமடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பேராசை பெரும் நஷ்டம் என்று நாம் சொல்வதை இன்னும் அழுத்தமாக, அபக்கூக்கு (2.5) என்னும் இறை வாக்கினர், பாதாளத்தைப் போல் பரந்து விரியும் பேராசையினால் ஆணவக்காரர் அழிவர் என்கிறார்.

சீர்மிகு சீராக்ஞானம் (14:9) பேராசைக்காரர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், உள்ளது கொண்டு நிறைவு அடையாதவர்கள் என்கிறது.

சீராக்கின் அதிகாரம் 13 பேராசையுடன் விருந்தில் அமராமல், அடுத்திருப்பவரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு பண்புள்ள மனிதராக உணவருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. பேராசை கொண்ட ஆட்சியாளர்கள் பதவி மோகத்தில் தம் சொந்த மக்களுக்கு எதிராகவும் சூழ்ச்சி செய்வர் என்று மக்கபேயர் (24:50) எச்சரிக்கிறது.

லூக்கா நற்செய்தி அதிகாரம் 12 ல் இடம் பெற்றுள்ள நிகழ்வு குறிப்பிடத்தக்கது. இயேசு பெருமானின் அருட்பொழிவைக் கேட்க மக்கள் கூடியிருந்தனர்.

தனக்கு அதிக பங்கை எதிர்பார்த்திருந்த செல்வந்தன் ஒருவன், குடும்பச் சொத்தை பங்கிடுவதில், தனது முடிவைத் தன் சகோதரன் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டுமென்று இயேசுவிடம் வேண்டினான்.

தான் பாகப் பிரிவினை செய்பவரல்லர் என்றுரைத்த இயேசு, பேராசைக்கு இடங்கொடாதபடி, எச்சரிக்கையாக இருக்கும்படி மக்களை எச்சரித்தார்.

உடமைகளை மிகுதியாகக் கொண்டிருப்பதால், உயர்ந்தவராகமாட்டார் என்று மேலும் உரைத்த இயேசு, மரண வேளையை அறிந்துணராது, செல்வம் சேர்ப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட செல்வந்தன் உவமையை கூறினார்.

மார்க்ஸ் 7 ஆம் அதிகாரத்தில், மனித உள்ளத்திலிருந்து வெளிவருகின்ற பேராசை போன்ற தீய எண்ணங்களே, மனிதரை தீட்டுப்படுத்துகின்றன என்று எடுத்துரைத்தார்.

நெறிகேடுகளில் ஒன்றாகப் பேராசையை குறிப்பிடும் பவுலடியார், பேராசைக்காரர்களின் உறவு வேண்டாம் (கொரி. 1:5:4) என்கிறார். "ஆவல்' என்ற சொல்லை நல்லவற்றின் மீதான ஆர்வத்திற்குக் குறிப்பிடுவதுண்டு. பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், கிறிஸ்துவோடு இருக்க வேண்டுமென்று தான் ஆவல் கொண்டுள்ளதை, பவுலடியார் கூறுகிறார்.

பிறர் மனைவியை விரும்பாதே! பிறர் பொருள்களை பறித்துக் கொள்ள முயலாதே! என்று பத்துக் கட்டளையின் இறுதி இரு கட்டளைகள் அறிவுறுத்துகின்றன. பேராசையின் காரணமாக விளையும், இவ்விரு தீய நாட்டங்களுக்கும் பல தீமைகளுக்கும் அடிப்படையாகவும் அமைந்துள்ள பேராசையை விட்டொழிப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com