

அருள் என்பது இறைவனது உண்மை அன்பும் கனிவும் கலந்தது. மரியன்னை பற்றி விவிலியம் தரும் செய்திகளில், முதலில் இடம் பெறுவது, லூக்கா நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இறைவனின் அழைத்தலை அன்னை ஏற்றுக் கொள்ளும் அருள் நிகழ்வு!
கபிரியேல் என்னும் வானதூதர், நாசரேத்து ஊரிலிருந்த மரியாளின் முன் தோன்றி, "அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!' என்று அகமகிழ்வுடன் வாழ்த்தினார். மறை நூலில் கூறப்பட்டிராத, வலிமையான அவ்வாழ்த்து, தனக்கு அருளப்பட்டது ஏன்? என்று எண்ணிய எளிய மணம் கொண்ட மரியாள் கலங்கினாள்.
அஞ்ச வேண்டாம் என்றுரைத்த தூதர், மரியாள் ஓர் மகனைப் பெறுவார் என்றும்,""இயேசு என்று பெயரிடப்படும் அத்திருமகனே, கடவுளின் மகன்'' என்றார்.
சூசை என்பவருக்கு மண ஒப்பந்தமாகி இருந்த மரியாள் தான் கன்னியாக இருக்கும் நிலையில், தாய்மை எவ்வாறு நிகழும் என்று விவரமாக வினவினார். உன்னத கடவுளின் தூய வல்லமை மரியாளை நிரப்பும் என்றுரைத்த தூதன், ஆதலினால் பிறக்கும் தூய திருக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும் என்று மேலும் பதிலளித்தார். வியப்பூட்டும் செய்தி ஒன்றையும் கூறினார்.
மரியாளின் உறவினரும் மலடி என அழைக்கப்பட்டவருமான எலிசபெத் அம்மையார் ஆறு மாதம் கர்ப்பிணியாக உள்ளார் என்றுரைத்த தூதன், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்று உறுதி கூறினார்.
தன்னை ஆண்டவரின் அடிமை என்று தன்னுரிமையுடன் கூறிய மரியாள், தூதர் உரைத்த வார்த்தையின்படியே தனக்கு ஆகட்டும் என்று அடக்கத்துடன் பதிலளித்தார். வானதூதரும் மறைந்தார்.
மரியன்னையின் பதிலுரைகள், இறை இயல் அறிஞர்களின் இறை சிந்தனையை வளர்த்து வந்துள்ளது. உண்மையில் உறுதி கொண்ட மரியாள், சூசையின் மனதை அறிந்து இருக்கவில்லை என்றாலும், இறைவனுக்குரியவராக சூசையும் விளங்குவார் என்று நம்பிக்கை கொள்கிறார்.
அனைத்தும் அருளுபவராக, யாவுமாக இருக்கின்றவர் என்று தெரிவிப்பதற்கு, ஆண்டவர் என்ற சொல் மறைநூலில் பயன்பட்டு வந்துள்ளது.
இறைவனை வேண்டும் திருப்பாடல் ஒன்று, அனைவரும் இறைவனுக்கே அடிமை! என்று அறிவிக்கின்றது. மரியாளும் இறைவனைச் சரணடைந்துள்ளார். மறை உண்மைகளை கடைபிடித்து வாழ்ந்த மரியாளிடம் வார்த்தையாம் இறைவன் இருந்தார். "ஆகட்டும்' என்று திருவுள்ளத்தை ஏற்றதும் கடவுளின் வல்லமையால் மரியாளின் திருவயிற்றில் உருவிலான் உருவாகத் தொடங்கினார்.
வாழ்த்து கூறி, தூதன் அறிவித்த கடவுளின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட மரியன்னையைப் போற்றி "வாழ்த்து' என்னும் பொருளில் "மங்கலம்' என்னும் சொல்லைச் சேர்த்து மங்கல அன்னை திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 ஆம் நாள் நடக்கின்றது. (கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு ஒன்பது மாதங்களுக்குமுன்) சென்னை ஆவடி காமராஜ் நகரிலுள்ள மங்கல அன்னை ஆலயத்தில், மரியன்னை வணக்க மாதமான மே மாதம் இறுதியில் மங்கல அன்னை திருவிழாவைச் சிறப்பிக்கின்றனர்.
மரியன்னையிடம் விளங்கிய தன்னடக்கம், தெளிவு, இறைவனில் அடைக்கலமாகின்ற அன்பு முதலான நற்பண்புகளை நாமும் வளர்த்து, இறைவன் நம்மில் செயல்படச் செய்வோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.