ஈத்துவக்கும் ஈகை பெருநாள்!

ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலானில் தப்பாது முப்பது நாட்களும் பகலில் நோன்பு நோற்று இரவில் இறைவனை விழிதிறந்து விழித்திருந்து வழிபட்ட....
ஈத்துவக்கும் ஈகை பெருநாள்!
Updated on
1 min read

ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலானில் தப்பாது முப்பது நாட்களும் பகலில் நோன்பு நோற்று இரவில் இறைவனை விழிதிறந்து விழித்திருந்து வழிபட்ட இஸ்லாமியர்கள் பத்தாவது மாதமான ஷவ்வால் பிறை ஒன்றில் நன்றியோடு ஒன்றுகூடி இறைவனைப் போற்றி புகழும் தக்பீர் முழங்கி மகிழ்வோடு மசூதிகளில், ஈத்காவில் தொழுது மங்களம் கூறி ஆரத் தழுவி அன்பினை வெளிப்படுத்தும் இன்ப நாளே இனிய நோன்பு பெருநாள்.

இந் நந்நாளில் நோன்பு நோற்று நோகாது தொழுது வணங்கியவர்களின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் நற்கூலி வழங்குகிறான் என்பதை ""என்னை நீங்கள் திருப்தி படுத்தினீர்கள். நான் உங்களைக் கொண்டு திருப்தியுற்றேன்'' என்ற இறை வசனம் உறுதிபடுத்துகிறது.

பெருமாள் பிறை கண்டதும் நாம் உண்ணும் உணவு தானியத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு படிகள் என்று கணக்கிட்டு இல்லாதவருக்கும் இரந்து வருபவருக்கும் ஈவதே பித்ர். பெருநாள் அன்று கொடுக்கப்படும் இத்தானிய தருமத்திற்கு ஈதுல் பித்ர் என்று பெயர். நோன்பில் வாகை சூட வழங்கும் ஈகையே ஈதுல் பித்ர். இத் தருமத்தை அருகிலுள்ள ஏழைகளுக்கு முதலில் கொடுக்க வேண்டும்.

நோன்பு நோற்கையில் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக அமைந்து நோன்பு அல்லாஹ்வை அடைய உதவுவது பித்ரா என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்தார்கள்.

இஸ்லாமியர்கள் ஆணோ, பெண்ணோ, பெரியவரோ, சிறியவரோ ஒவ்வொருவரும் நோன்பு பெருநாள் பிறை கண்டதிலிருந்து பெருநாள் பகல் பொழுது முடிவதற்குள் ஒரு ஸாஃ (இரு கைகளில் அள்ளி எடுப்பது) பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ தொலிக் கோதுமை பித்ர் கொடுப்பதைக் கடமையாக்கியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதி, நஸயீ நூற்களில் காணப்படுகிறது.

இந்த பித்ர் தருமத்தை வழங்குமாறு மக்கத்து தெருக்களில் முரசொலித்து முழங்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பியதை அம்ருப்னு ஷீஐபு (ரலி) அவர்கள் அறிவிப்பதைத் திர்மிதீ தெரிவிக்கிறது.

ஜகாத் என்னும் ஏழைவரி கடமையாவதற்கு முன்னரே பித்ரா தருமம் அளிக்கப்பட்டது. ஜகாத் கடமையானபின்னும் பித்ரா தொடர்ந்தது என்பதை கைஸீப்னு ஸஃதுப்னு உபாதா (ரலி) அவர்கள் எடுத்துரைப்பது நஸயீ -யில் தொகுக்கப்பட்டுள்ளது. இன்றும் நோன்பு பெருநாள் பிறை கண்டதும் பித்ரா கொடுக்கும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது.

இந்த பித்ராவை முன்னிறுத்தி முக்கியப்படுத்தி ரமலான் நோன்பு முடிந்து கொண்டாடப்படும் பெருநாளைக்கு ஈதுல்பித்ர் என்ற பெயர் ஏற்பட்டது. இப் பெருநாளில் இன்முகத்துடன் பித்ரா ஈயப்படுவதோடு தாயன்போடு தாராளமாய் புத்தாடைகளும் பணமும் பலகாரங்களும் தடையில்லாது கொடை கொடுக்கப்படுவதால் இந்நாள் ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு இப்பெருநாள் 29-07-2014 அன்று கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com