
நூற்றெட்டு வைணவத் திருப்பதிகளுள் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர்.
பன்னிரண்டாழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களைப் பெற்ற தலம்! விஷ்ணு சித்தர் பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடிப் பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார். அவர் மகளான கோதை நாச்சியார் அரங்கனுக்குப் பாமாலை சூடிக் கொடுத்து அரங்கனையே ஆட்கொண்டதால் ஆண்டாள் என்ற பெயர் பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்திரசாயி கோயிலில் உள்ள நந்தவனத்தில் மலர்களை எடுத்து மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்துத் தொண்டு செய்து வந்த பெரியாழ்வார், ஓர் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வைணவம் தழைக்க, அந் நந்தவனத்தில் உள்ள துளசிச் செடியின் அருகில் பூமிதேவியின் அம்சமாகப் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தைக்கு "கோதை' என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
அந்தத் தெய்வக் கொடியை பக்தி என்னும் கொம்பிலே படரவிட்டார். குழந்தைப் பருவத்தில் ஆண்டாளுக்குக் கண்ணன் கதைகளைக் கூறினார். கண்ணன் கோபியர்களுடன் லீலைபுரிந்ததையும் பிருந்தாவனத்தில் பசுக்கள் மேய்த்ததையும் கதைகளாகக் கூறினார். பெரியாழ்வார் ஆண்டாளின் உள்ளத்தில் விதைத்த பக்தி விதை முளைத்து வளரத் தொடங்கிவிட்டது. தந்தை கூறிய கண்ணன் கதைகள் வெறும் கதைகளாகத் தோன்றாமல் ஆண்டாளின் பக்திக் கண்களுக்கு நேரில் காணும் காட்சிகளாகத் தோன்றின. கண்ணன் கோபியர்களுடன் லீலை புரிந்ததும் சாகசங்கள் செய்ததும் ஆண்டாள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. கண்ணனையே மணாளனாக மனத்தில் வரித்துக்கொண்டு விட்டாள். திருமணப்பருவம் அடைந்தபின்பும் கண்ணனையே மணப்பதாக உறுதி கொண்டாள்.
பெரியாழ்வார், "மானிடப்பெண்ணான நீ, திருமால் அவதாரமான கண்ணனை எவ்வாறு மணக்க முடியும்?' என்று கூறியும் அதை மனத்திற் கொள்ளாமல் கண்ணனையே நினைத்துவந்தாள். ஆண்டாளின் பக்திக் கற்பனையால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோகுலமாயிற்று. வடபத்திரசாயி கோயில் நந்தகோபன் மனையானது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெண்கள் கோபியர்களானார்கள். கோபியர்களுடன் கண்ணனை அடைவதற்குப் பாவை நோன்புக்கான திருப்பாவை முப்பது பாடல்களைப் பாடினாள். ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் முப்பதும் அரங்கனுக்கு அணிவிக்கும் பக்திமனம் வீசும் வாடாத மாலையாகும். பாமாலையோடு பூமாலையும் சாற்றி அரங்கனைக் கைத்தலம் பற்றி, ஆண்டாளும், ரங்கமன்னாருமாக சேவை சாதிக்கிறார்கள். (ஆடிபூரம் - ஜுலை 30)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.