மனதை பக்குவப்படுத்தும் பருவதமலை!

தென்கயிலாயமான தமிழகத்தில் இறைவன் கால்பதித்திட்ட, இந்தப் பருவதமலைக்குச் சென்றபொழுது இறைவன் பெரியவன் என்பதை உணர முடிந்தது.
Updated on
2 min read

தென்கயிலாயமான தமிழகத்தில் இறைவன் கால்பதித்திட்ட, இந்தப் பருவதமலைக்குச் சென்றபொழுது இறைவன் பெரியவன் என்பதை உணர முடிந்தது. உடலை அச்சுறுத்தும் உள்ளத்தைத் திருத்தும் உயர்வான மலை பருவதமலை. காரணம் மலைப்பயணம் ஆரம்பித்ததில் இருந்தே செங்குத்தாகவே செல்கிறது. மரங்கள் இருந்தாலும் பாறைகளின் எண்ணிக்கையே அதிகம். படிகள் கட்டியுள்ளனர். அதாவது, 2623 படிகள் உள்ளன!

அதன்பிறகு பாறைகள் மீதே நடக்கும் பயணம். தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரம்! உயரே செல்லச் செல்ல மனிதர்களாகிய நாம் சிறிய எறும்பு போல் தெரிகிறோம். அதிக உயரத்தில் இறைவனோடு இருப்பதால் மனம் ஏகாந்தத்தில் திளைக்கிறது.

மலைப்பயணம் தொடரும் பாதையில் முதலில் ஒளிவீசுகின்ற கண்களுடன் தனி ஆலயத்தில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு பச்சையம்மன்! பச்சையம்மனை வணங்கி, அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவு மேலே நடந்தால், தனி ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் வீரபத்திரரை தரிசனம் செய்யலாம். உண்மையில், இங்கிருந்துதான் மலைப் பயணம் ஆரம்பிக்கிறது. இந்தப் பகுதியில் மட்டுமே தண்ணீர் வசதியுள்ளது. மலையில் வேறெங்கும் தண்ணீர் வசதி கிடையாது என்பதால், தண்ணீரை, இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கும் சேர்த்தே உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

செங்குத்தாக மலை..! மலையின் உச்சிக்குச் செல்ல, மலையை சுற்றியுள்ள ஒரு பகுதியில் இரும்பு ஏணிகளை மலையிலேயே ஓட்டைப்போட்டு பொருத்தியுள்ளனர். சற்று குனிந்துப் பார்த்தாலும் கீழே அதளபாதாளம்! உடல் நடுங்கிப் போகிறது. அதுபோல கடப்பாறை கம்பிகள் வைத்தும் ஒரு பாதை. அதுவும் மிகக் கடினமான பாதைதான்! அந்த இடத்தைக் கடக்க, இறைவன் அருள் இருந்தால்தான் முடியும் என்பதைக் கண்கூடாகக் காணலாம்.

பருவதமலை மொத்தம் ஏழு பிரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாரைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி என ஆகாயப்படிகளைக் கொண்ட இந்த அதிசய மலையில் எப்போதும் மூலிகைக் காற்று வீசிக்கொண்டிருப்பதால் தீராத நோயும் தீர்ந்துவிடும்.

கடலாடி மெத்தமலை, குமரி நெட்டுமலை, கடப்பாரை மலை, கணகச்சி ஓடைமலை, புற்று மலை, கோயில் உள்ள மலை ஆகிய ஆறு மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ. சுற்றளவுள்ள இந்த மலையை பௌர்ணமி தினத்தில், ஒருமுறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

மலைக்கு வருபவர்கள், உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றும் எண்ணெய், பூஜைப் பொருள்களை வாங்கி வருவது முக்கியம்.

வாழ்வில் ஒருமுறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம்!

சென்னையிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு. திருவண்ணாமலை சென்றும் அங்கிருந்து பருவதமலையை அடையலாம்.

வந்தவாசி, சேத்துப்பட்டை கடந்து வந்தால், "தென்மாதிமங்கலம்' வரும். இந்தப்பகுதியில்தான் பருவதமலை உள்ளது.

கடலாடி என்ற இடத்திலிருந்தும் மலைப்பாதை செல்வதால் அந்த வழியாகவும் மலை ஏறலாம்.

அந்தக் கடப்பாரைப் பாதையை கடந்து விட்டால்... மனம் புத்துணர்வு பெறுகிறது. நாம் யார் என்பதை நமக்கே உணர வைக்கிறது! அகத்தியரின் சீடர்களுள் ஒருவரான போகர் (பழநி முருகனை உருவாக்கியவர்) சிவபெருமானை தென்பகுதியில் காண விரும்பினார். அதற்காக சிவபெருமானிடம் வேண்டி முறையிட, சிவபெருமான் விரும்பிச் சொன்ன அமைதியான இடமே இந்தப் பருவதமலை என்கிறது தலப்புராணம். அதற்குச் சான்றாக அம்மை அப்பன் சந்நிதி அருகே வலப்பக்கத்தில் போகரும் அகத்திய மாமுனிவரும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.

ஆலயத்தின் உள்ளே முதலில் நாம் காண்பது, விநாயகப்பெருமான். அடுத்து, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான். தனி சந்நிதியில் சுயம்பு திருமேனியுடன் மல்லிகார்ஜுனர் எழுந்தருளியிருக்க, எதிரில் நந்தியப்பர் சிறிய திருமேனியுடன் காணப்படுகிறார். இறைவனுக்கு பக்தர்களே தங்கள் விருப்பப்படி அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். அம்மையும் பிரம்மராம்பிகையாக தனிச்சந்நிதியில் அமைந்துள்ளார்.

சிவபெருமானின் அழைப்பில்லாமல் அவன் தரிசனத்தை எவரும் பெறமுடியாது என்பதை, செங்குத்தாக இருக்கும் மலையில் பயணத்தைத் தொடர முடியாமல் பாதிவழியிலேயே திரும்பும் பக்தர்கள் பலரைக் காணும்போது புரிந்துக் கொள்ளமுடிகிறது.

அமாவாசை, பௌர்ணமியின் போது பக்தர்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். ஆனாலும், அனைத்து நாட்களிலும் பக்தர்கள் இறைவனைத் தரிசிக்க வருகிறார்கள்.

சித்தர்கள் வாழும் மலையான இந்த பருவதமலையில் பலருக்கு சித்தர்கள் தரிசனமும் கிடைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com