சிவச்சமய தத்துவக் கொள்கையான சைவச் சித்தாந்தத்தை முழுமையாக எடுத்துரைகக்கும் முதல்
செந்தமிழ் நூல், "சிவஞான போதம்!' இதனை அருளியவர், திருக்கயிலாய பரம்பரையில் வந்த மெய்கண்டார் ஆவார். நடுநாடு - திருமுனைப்பாடி நாடு என அழைக்கப்படும் இப்பகுதியில் சைவ சமயம் போற்றும் திருப்பெண்ணாகடம் என்னும் தலத்தில் வேளாள குலத்தோன்றலாக வாழ்ந்து வந்தார் அச்சுத களப்பாளர். தனக்கு பிள்ளை இல்லாக் குறையைப் போக்க திருவெண்காடு திருத்தலம் சென்று இறைவனை வழிபட்டார். இறை அருளால் திருஞான சம்பந்தர் போன்று மகன் பிறந்தார். அவருக்கு சுவேதவனப் பெருமான் எனப் பெயரிட்டார்.
குடும்பத்துடன் பெண்ணாகடத்திலிருந்து திருவெண்ணெய் நல்லூர் சென்று வாழ்ந்தனர். அங்கே பரஞ்சோதி முனிவரால் சுவேதனப் பெருமானுக்கு மெய்யுணர்வு அருளப்பட்டு "மெய்கண்டார்' என்று திருநாம் கொண்டருளினாaர். சிவஞானபோதம் செய்தருளினார். அவரிடம் பாடம் கேட்டு பயின்றவர்கள் 49 பேர். குலகுருவான அருள்நந்தி சிவாச்சாரியாரே மெய்கண்டாரின் முதல் மாணாக்கனார் ஆனார். சிவஞான போதம் 12 சூத்திரங்கள் சைவ சித்தாந்தப் பேருண்மைகளைப் புலப்படுத்துகிறது.
மெய்கண்டாரின் மரபில் வந்த திருவாவடுதுறை ஆதீனத் திருக்கூட்டத்து முனிவர் பிரானாகிய ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் செய்தளித்த "சிவஞான போதமாபாடியம்' வந்த பின்பே, பன்னிரு திருமுறைகளுக்கும் மெய்பொருள் கண்டு, சிவ வரம்பினைக் காத்துகொள்ள இயன்றது. திருமுறைகளின் சாரம் சைவசித்தாந்தமே என்ற தெளிவும் பிறந்தது.
சென்னை - திருச்சி ரயில் பாதையில் பெண்ணாகடம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவிலும்; விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் 17 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
புராண வரலாறு: உயர்ந்த மலர் சோலையாகிய இத்தலத்தில் இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவ கன்னியர்கள், காமதேனு, ஐராவதம் என்ற யானை ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து இத்தலத்திலேயே இருந்து விட்டன. பின்னர், இந்திரன் தானே வந்து இறைவனைக் கண்டு வழிபட்டான் எனப் புராண வரலாறு கூறுகிறது. தேவக்கன்னியர்கள் (பெண்) + காமதேனு (ஆ) + ஐராவதம் (கடம்) ஆகிய மூன்றும் இறைவனை வழிபட்டதால், "பெண்ணாகடம்' எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
வாயிலை நோக்கிய நந்தி பெருமான்: உலகத்தை அழிக்க வந்த பிரளயகால வெள்ளத்தை இறைவன் நந்தி தேவர் மூலமாக தடுத்து அருள்புரிந்த திருத்தலமாக விளங்குகிறது. இதனால் இக்கோயிலில் நந்தியெம்பெருமான் இறைவனை நோக்கியில்லாமல், கோயில் வாயிலை நோக்கி அமர்ந்த கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம். இதனால் இங்கு எழுந்தருளி அருள்புரியும் இறைவன் "பிரளயகாலேசுவரர்' என அழைக்கப்படுகிறார்.
திருமுறை சிறப்பு: ஞான சம்பந்தர் பெருமான், நாவுக்கரசர் பெருமான் இருவராலும் போற்றிப் பாட பெற்ற தலமாக
விளங்குகிறது.
"மறையின் ஒலி தொடங்குங் கடந்தைத்
தடங் கோயில் சேர்
தூங்காணை மாடம் தொழுமின்களே''
என, ஞானசம்பந்தர் பெருமான் போற்றுவதைக் காணலாம்.
பொன்னார் திருவடிக்கு ஓர் விண்ணப்பம்: திருநாவுக்கரசர் பெருமான் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு, ""பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்'' என்று துவங்கி சூலக்குறியும் - இடபக்குறியும் (ரிஷபம்) தனக்கு பொறித்தருளுமாறு கனிவுடன் வேண்டுகிறார். இறைவனும் தனது கருணையால் அன்பு உள்ளத்துடன் சிவபூத கணம் ஒன்றினை ஏவ, அது அப்பர் பெருமானின் திருத்தோள்களில் சூலக்குறியும் - இடபக்குறியும் பொறித்த நிகழ்ச்சி நடைபெற்றது இத்தலத்தில். இதனை,
"வாகீசர் திருத்தோளில் சேடுயர் மூவிலை ச்சூலம் சினவிடையுடன் சாத்த'' எனச் சேக்கிழார் பெருமான் புகழ்ந்து போற்றுகிறார்.
இக்கோயிலில், சித்திரை மாத சதய விழாவில் அப்பர் பெருமான் வேண்டிய விண்ணப்ப நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
திருக்கடந்தை புராணம்: இத்தலத்தின் சிறப்பினை சிவஞானயான் பிள்ளை என்பவர் அருளிய திருக்கடந்தை புராணம் எடுத்துக் கூறுகிறது.
கலிக்கம்ப நாயனார்: சைவசமயம் போற்றும் நாயன்மார்களில் கலிக்கம்ப நாயனார் அவதரித்த தலம் இதுவே. கலிக்கம்பர் நாள்தோறும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பார். அப்பொழுது சிவனடியாரக்களின் திருவடிகளை, அவர் மனைவி நீர்வார்க்க, தூய்மை செய்வார். ஒருநாள், இவரிடம் முன்பு பணி செய்த பணியாளர் சிவனடியார் வேடம் கொண்டு வந்தார். வழக்கம்போல் கலிக்கம்பர் அவரது திருவடிகளைப் பற்றினார். ஆனால் அவரது மனைவியார், இவன் நமது வேலைக்காரனாயிற்றே என்பதை நினைத்து நீர் வார்க்காமல் கால தாமதம் செய்தார். இதனால் கலிக்கம்பர் கோபம் கொண்டு தனது மனைவியின் கையை வெட்டினார்.
சிவனடியார்களைப் போற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு விளங்கிய கலிக்கம்பர் இறைவன் அருள் பெற்றார். மனைவிக்கும் இறைவன் அருளியதால், "கைவழங்கீசர்' என்ற பெயரும் உண்டு. கோயில் கோபுரம் அருகே கலிக்கம்பர் சந்நிதி அமைந்துள்ளது. அருகில் மெய்கண்டார்க்கும் சனி சந்நிதி அமைந்துள்ளது சிறப்பானது.
இறைவன் - இறைவி: இத்தலத்தில் கோயில் கொண்டு விளங்கும் இறைவன் சுடர்க் கொழுந்தீசர், பிரளய காலேஸ்வரர் என்றும்; இறைவி, கடந்தை நாயகி, அழகிய காதலி என்றும் பெயர் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
இறைவன் சதுரவடிவமான ஆவுடையாரில் உருவில் பெரிய சிவலிங்க வடிவாகக் காட்சிதரும் அற்புதக் கோலத்தைக் கண்டு தரிசிக்கலாம்.
இக்கோயில் கருவறை விமானம் தூங்கானை மாட வடிவில் அமைந்துள்ளது. விமானத்தில் காமதேனு, ஐராவதம் வழிபடும் காட்சிகளைக் காணலாம். கருவறை நுழைவாயிலில் துவாரபாலகர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று அல்லாமல், ஒருவரையொருவர் நேராகப் பார்த்து கொண்டிருப்பது போல் அமைந்துள்ளார்கள். கருவறையின் சுவரில் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் (ஜன்னல்) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் வழியே இறைவனை தரிசிக்கலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் ஸ்ரீ மெய்கண்டார் திருக்கோயிலுக்கு, ஜூன் 22 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற்று நலமடைவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.