தட்சிணாமூர்த்தி சந்நிதிகளில் குருபெயர்ச்சி விழா!
வக்கிரகங்களில் ஒருவரான வியாழனுக்கு (பிரகஸ்பதி) தேவகுரு பதவியையும், கிரகபதத்தில் வீற்றிருக்கும் சிறப்பையும் அளித்தவர் சிவபெருமான். சிவபெருமானின் வடிவங்களில், குரு வடிவம் தட்சிணாமூர்த்தியாகும். எனவே, இவரை குருவாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். நவக்கிரக குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளில், ஆலங்குடி உட்பட பல்வேறு ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி சந்நிதிகளிலும் விசேஷ வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில், ஜூன் 13 ஆம் தேதியன்று சிறப்பு குருபெயர்ச்சி வழிபாடு நடைபெறும் சில
முக்கிய ஆலயங்கள்...
தக்கோலம்: வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகில் உள்ள தக்கோலத்தில் பாடல்பெற்ற அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஸ்ரீ ஜலநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகிறது. இத்தலத்தில் "உத்கடிக' ஆசனத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியை வேறு எங்கும் காணமுடியாது. அந்த அருட்கோலத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். தமிழ்நாட்டில் மூன்றாவது குருபரிகாரத் தலமாகக் கருதப்படும் இவ்வாலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மேஷம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பரிகாரம் செய்யப்படுகிறது.
தொடர்புக்கு: 99947 86919.
கோவிந்தவாடி அகரம்: காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோவிந்தவாடி அகரம். இங்கு அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று ஏகதின லட்சார்ச்சனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. இத்தலம், தமிழ்நாட்டின் சிறப்புமிக்க குருபரிகார ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
தொடர்புக்கு: 94447 54773.
பரமேஸ்வரமங்கலம்: காஞ்சிபுரம், செய்யூர் வட்டத்தில் (வேப்பஞ்சேரி வழி) பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்! இங்கு சமீபத்தில் சுமார் 9 அடி உயரத்தில் விஸ்வரூப தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். குருபெயர்ச்சியன்று மாலை 101 குடத்தில் பால் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 97890 56615.
வரும் குருபெயர்ச்சி, கடக ராசியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு உச்சம் பெறும் அபூர்வ குருபெயர்ச்சி ஆகும். எனவே அந்நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதால், கஜகேசரி யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ச யோகம், சகட யோகம் ஆகியவற்றை நல்கும் என்பது ஐதீகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

