திருமணம், புத்திர பாக்கியம் அருளும் தாடிக்கொம்பு ஸ்ரீ சௌந்திரராஜப் பெருமாள்!

திருமணம், புத்திர பாக்கியத்திற்கான தலம், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது,
Published on
Updated on
3 min read

திருமணம், புத்திர பாக்கியத்திற்கான தலம், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது, திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்திரராஜப் பெருமாள் திருக்கோயில். இத் திருக்கோயில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், விஜய நகர பேரரசின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகவும் இருவேறு கருத்துகள் இருப்பினும், சுமார் 500 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாகும்.

முன்பாக நாம் தரிசிப்பது சுமார் 30 ஆடி உயரத்திலான கொடி மரம்! அதனை தரிசித்து, கோயில் நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் அமைந்திருக்கும் பெருமாளின் படைத்தளபதியான அருள்மிகு விஷ்வக் சேனரை வழிபட வேண்டும். மூலவரான சுவாமிக்கு அமைக்கப்பட்டுள்ளது போல் அர்த்த மண்டபம், மஹா மண்டபத்துடன் கூடிய தனி விமானம் விஷ்வக் சேனருக்கும் உள்ளது. அருகிலேயே தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது.

அடுத்து கோயிலின் இடதுபுறத்தில் நம்மாழ்வார் சந்நிதியும், ஆனந்த விநாயகர் என்ற நாமத்துடன் இரட்டை விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளன. இரட்டை விநாயகர், தாடிக்கொம்பு கோயிலுக்கு தனிச் சிறப்பு சேர்க்கிறார்.

தசாவதார மண்டபம்: கலியுகத்தில் பெருமாள் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தையும் சேர்த்து தசாவதார மண்டபத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு லட்சுமி நரசிம்மர், அருள்மிகு சந்தான வேணுகோபால சுவாமி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஹயக்ரீவர், சரஸ்வதி, ஸ்ரீராம, லட்சுமணரின் திருமேனிகள் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன.

அருள்மிகு தன்வந்திரி பெருமாள்: திருவோணம் நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கல்வி கடவுளாகவும், ஞாபக சக்தி அளிப்பவராகவும் போற்றப்படும் ஹயக்ரீவருக்கு தேன் அபிஷேகம் செய்தும், ஏலக்காய் மாலை சாத்துப்படி செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மூலவருக்கு நேர் பின்புறத்தில் சர்வ நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு, அனைத்து விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழ, அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. உள்நோய்களை நீக்குவதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, தேன், நெய் கலந்த லேகியமும், சந்தனாதி தைலமும் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப் பெற்று வெளிநோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது.

அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள்: பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், கடன் தொல்லை நீங்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு கிடைக்கவும், மன அழுத்தம் நீங்கவும் 12 புதன்கிழமை தொடர்ந்து 2 நெய் தீபம் ஏற்றி, லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும் என்பது ஐதீகம். பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை வதம் செய்தது பிரதோஷ காலம் என்பதாலும், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாலும், பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அருள்மிகு ஆண்டாள்: மூலவருக்கு பின்புறத்தில் வடமேற்கு திசையில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் சூடி கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள். திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக்

கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை ஆண்டாள் சந்நிதியில் நடத்தப்படுகிறது. ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.

அருள்மிகு ருக்மணி, சத்ய பாமா சமேத வேணு கோபால சுவாமி: சுவாமி அஷ்ட புஜங்களுடன் காட்சி அளிக்கும் திருக்கோலம் தென் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று பசு வெண்ணெய், அவல், சர்க்கரை நிவேதனமாக கொடுத்து வழிபடுவது சிறப்பு! குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த பூஜையில் பங்கேற்க நல்ல பலன் கிடைக்கும்.

மூலவரின் இடது பாதத்தில், வெண்ணெய் வைத்துக் கொண்டு நர்த்தனம் ஆடுவது போன்ற வேணுகோபால சுவாமியின் சிறிய விக்ரகம், ரோகிணி நட்சத்திர பூஜையில் பங்கேற்கும் பெண்களின் மடியில் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

ராம பக்த ஆஞ்சநேயர்: ஆஞ்சநேயருக்கு மூலம் மற்றும் சதயம் நட்சத்திரத்தின்போது அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. அருள்மிகு சௌந்தரவல்லி தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ கார்த்த வீர்ய அர்ச்சுனர், ஸ்ரீவைகுண்ட நாதர், கல் கருட வாகனத்தில், ஸ்ரீ ராமரை அனுமன் சுமந்து செல்லும் காட்சி, ஸ்ரீ அகோர வீரபத்திரர், ஸ்ரீ ஊர்த்தவ ஆண்டவர், ஸ்ரீ தில்லை காளி, ஸ்ரீ இரண்ய யுத்தம், இரண்ய சம்ஹாரம், ஸ்ரீ மன்மதன், ஸ்ரீ ரதி, ஸ்ரீ உலக அளந்த பெருமாள், ஸ்ரீ வேணு கோபாலர் ஆகியோருக்கு கலைநயமிக்க சிலைகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பமும் ஒரு கதையை விளக்குவதாக அமைந்துள்ளது.

அருள்மிகு கல்யாண செüந்தரவல்லித் தாயார் சமேத சௌந்தரராஜப் பெருமாள்: பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும், அருள்மிகு செüந்தரராஜப் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டுமே தாயாரையும், பெருமாளையும் ஒருசேர பிரார்த்திக்க முடியும். இதுதவிர, ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் தாயாருடன் சேர்ந்து பெருமாளின் ஊஞ்சல் சேவையை தரிசிக்கலாம்.

நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அருள்மிகு செüந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதுரை அருள்மிகு கள்ளழகர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வைபவங்களும் இத் தலத்தில் நடைபெறுகிறது. கள்ளழகருக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சௌந்தரராஜப் பெருமாளுக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சொர்ண ஆகர்ஷண பைரவர்: வெளி பிரகாரத்தின் வடகிழக்கில் சொர்ண ஆகர்ஷண பைரவர் காட்சி அளிக்கிறார். சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் சந்நிதி, தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும், பைரவருக்கு 6 கால சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அமைவிடம்: திண்டுக்கல் நகரிலிருந்து சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் சேலம் செல்லும் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு. திண்டுக்கல் நகரிலிருந்து தாடிக்கொம்பு செல்வதற்கு தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது. பஸ் நிறுத்தத்திலிருந்து, கிழக்கு நோக்கி சிறிது தூரம் நடந்தாலே, அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலைக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.