அழியாச் செல்வம் கல்வி. கல்வியைக் கற்கும் முறையில் கற்று பெறுவது அறிவு. செல்வங்களில் சிறந்த அறிவு அழிவற்றது மட்டுமல்ல, முடிவும் இல்லாதது. முயன்று பெற்று அறிவைப் பெருக்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அறிவை ஆன்றோர்களோடும் சேர்ந்து வாழவைக்கும் என்பதைத் திருக்குர்ஆனின் 26-83வது வசனம் ""என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத் திறனை வழங்குவாயாக! என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!'' என்று இறைவனை இறைஞ்ச இயம்புகிறது.
வானவர் ஜிப்ரயீல் ஆதி நபி ஆதமிடம் அறிவு, நாணம், ஈமான் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கூறிய பொழுது ஆதம் நபி அறிவைத் தேர்ந்தெடுத்தார்கள். அறிவோடு மற்றிரண்டையும் பெற்றார்கள் முதல் நபி ஆதம்.
இது போலவே சுலைமான் நபியிடம் கல்வி, பொருள், அரசு ஆகிய முன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க பணிக்கப்பட்ட பொழுது, சுலைமான் நபி கல்வியைத் தேர்ந்தெடுத்தார்கள். அல்லாஹ் அந்நபிக்குக் கல்வியோடு பொருளும் அரசும் சேர்த்தே வழங்கினான்.
"இதனைக் குறித்தே, அல்லாஹ் விரும்பியவர்களுக்கு அறிவைக் கொடுக்கிறான். எவர் அவ்வறிவைப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்று விடுவார்'' என்று குர்ஆனின் 2-269வது வசனம் கூறுகிறது.
கல்வி இருதயத்திலும், நாணம் கண்ணிலும், அறிவு மூளையிலும் அமைந்ததாக குர்ஆன் விரிவுரையாளர்கள் விவரிக்கின்றனர்.
சட்ட மேதை ஷாபியீ வரை (ரஹ்) அவர்கள், ""அடுப்பில் சூடிருக்கும் வரை சூடாகும் பாத்திரம் நான்'' என்று கூறினார்கள். எரியும் அடுப்பில் உள்ள பாத்திரம் சூடாகியதும் சூடாவதை நிறுத்திக் கொள்வதில்லை. அடுப்பில் நெருப்பிருக்கும் வரை சூடாகிக் கொண்டேயிருக்கும். அது போல அறிவும் அடங்காது கிடைக்கும் இடத்தில் கிடைப்பதைத் தேடி பெறும். ஷாபியீ (ரஹ்) சொன்னது போல் அவர்களின் நூற்களைத் தேடி பெற்ற சுவையான நிகழ்ச்சி.
அறிஞர் இஸ்ஹாக் இப்னு நானவஹி(ரஹ்) எகிப்துக்குச் சென்றார். அங்கு ஒரு விதவையிடம் சட்ட மேதை ஷாபியீ (ரஹ்) எழுதிய எண்ணற்ற நூல்கள் இருப்பதை அறிந்தார். அப்பெண் அந்நூற்களை அரிய சொத்தாக போற்றிப் பாதுகாத்தார். அப்பெண் அப்புத்தகங்களின் உரிமையைவிட்டுவிட விரும்பவில்லை. அறிஞர் இஸ்ஹாக் அந்நூற்களைப் பெற்று கற்றிட விரும்பி அப்பெண்ணை மறுமணம் செய்தார். அறிவு பெற வாழ்க்கையையே அர்ப்பணித்த அரிய செயல்.
நாமும் கற்க வேண்டியவற்றைக் கசடற கற்று, கற்றதனால் பெற்ற அறிவினால் நாடும் மக்களும் உயர்வு பெற உழைப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.