நம்மைப் பேணும் அம்மை காண்!

தமிழகம் செய்த தவப்பயனாய் பக்தி உலகிற்குக் கிடைத்த எழுஞாயிறு காரைக்காலம்மையார்.
நம்மைப் பேணும் அம்மை காண்!
Updated on
2 min read

தமிழகம் செய்த தவப்பயனாய் பக்தி உலகிற்குக் கிடைத்த எழுஞாயிறு காரைக்காலம்மையார். இவருடைய வரலாறு அனைவரும் அறிந்ததே! சைவத் திருமுறையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழ்பவர். நாயன்மார்களுள் ஒருவராக, ஆடும் பெருமான் திருவடிக்கீழ் என்றும் அமர்ந்து இசை பாடும் பேய்வடிவ உருவினராக வழிபடப்படுபவர்.

இவர், தத்துவச் செறிவும், மெய்ஞ்ஞான உணர்வும் இணைந்த இலக்கிய நயம் வாய்ந்த எளிய, இனிய பக்திப் பாடல்களைப் பரமன் கேட்டு இன்புறும் வண்ணம் பாடி இறைவனை மகிழ்வித்தவர். நாயன்மார்களுள் காலத்தால் முற்பட்ட இவ்வம்மையார் தமிழ் இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியத்திற்குப் பல புதுமைகளைச் செய்துள்ளார். இவர் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூல்தான் அந்தாதி நூல்களுக்கெல்லாம் முதல் அந்தாதி நூலாகத் திகழ்கிறது.

இசையால் இறைவனைப்பாடும் பதிகம், அந்தாதி போன்றவற்றைத் தொடங்கி வைத்தமை, பதிகத்தின் திருக்கடைக் காப்புப் பாடலில் பாடுபவர் பெயர், பாடியோர் பெறும் பலன்கள் - நலன்கள் ஆகியவற்றைக் கூறும் முறை அமைத்தமை, முதன் முதலாகத் தோத்திரப் பாடல்களில் சிவபெருமான் திருக்கூத்தைக் கூறியமை, ஆன்ம அனுபவ பக்தி இலக்கியமாக எந்தப் பெண்ணுமே அடைய விரும்பாத "பேய்' வடிவத்தை இளமையிலேயே விரும்பிப் பெற்று, இறைவனின் ஊழிக் கூத்தைக் கண்டு இடுகாட்டில் பேய்கள் புடைசூழ அவன் ஆடும் அற்புதக் காட்சியைப் பாடியமை ஆகியவை இவர் பக்தி இலக்கியத்திற்குத் தந்த அருட்கொடைகளாகும்.

மாங்கனி விளையாட்டு: இறையருள் ஒருவருக்கு எப்போது, எந்த உருவில் வந்து கூடும் என்பதை யாராலும் கூற இயலாது. இறைவன் ஆடிய பல திருவிளையாடல்களில் மாங்கனியை வைத்து விளையாடிய விளையாட்டு இரண்டு. ஒன்று, உலகமும் அம்மையப்பரும் வேறல்ல; ஒன்றே என்பதை உலகத்தாருக்கு உணர்த்துவதன் பொருட்டு கயிலையில் ஒரு மாங்கனியை வைத்து கணபதியோடு விளையாடியது. மற்றொன்று, கருவிலே திருவினரான காரைக்கால் அம்மையார் பொருட்டு விளையாடியது.

அனைத்தும் சிவமயம்: சிவனடியார்களைச் சிவமாகவே பாவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் குணம் இளமையிலேயே வாய்க்கப் பெற்றவர் அம்மையார். பிறந்து கல்வி கற்கத் தொடங்கும் பருவத்திலிருந்தே சிவபெருமான் மீது காதல் கொண்டவர் - பக்தி கொண்டவர் என்பதை அவரே ""பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்; சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்'' என்று பாடியிருப்பதிலிருந்து அவர், இளமையிலேயே சிவபக்தியில் சிறந்தவர் என்பதைக் காட்டுகிறது. அனைத்தையும் சிவமாகக் காணும் உணர்வு இளமையிலேயே கைவரப்பெற்றவர் அம்மையார்.

காரைக்கால் அம்மையார் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே, அதாவது, மற்றச் சிறுமியருடன் "வண்டல்' என்ற மகளிர் விளையாட்டுக்களில் எல்லாம் பிறையணிந்த சடையை உடைய தேவதேவரின் திருவார்த்தைகள் பொருந்த வருவனவாகப் பயின்று சிவனடியார்கள் வந்தால் அவர்களை வணங்கினார் என்பதை சேக்கிழார் பெருமான், ""வண்டல் பயில்வன எல்லாம், வளர் மதியம் புனைந்த சடை'' என்பார்.

காரைக்கால் அம்மையார் இறைவன் மேல் கொண்டது ஆறாக் காதலாகும். காதல் என்பது அன்பின் முதிர்ச்சி. இதனை "தலையன்பு' என்று கூறுவர். அம்மையார் உடலுக்கு நாயகனான கணவன் மேல் கொண்ட அன்பைவிட, ஆத்ம (உயிருக்கு) நாயகனாகிய சிவபெருமானிடத்தில் சொல்லொணாக் காதல் கொண்டிருந்தார். இக்காதலின் முதிர்ச்சியே அம்மையாருக்கு வேண்டியவை அனைத்தையும் பெற்றுத்தரச் செய்தது.

காரைக்கால் அம்மையார் தாய்மை உணர்விலும் மேலோங்கியே இருந்தார். ""கங்கையையும், கொன்றையையும் வைத்திருக்கின்ற வேதியனே! அப்படிப்பட்ட சடையின் மேல் கொல்லும் தன்மையுடைய பாம்பை என்றும் அணியாதே!'' என்று அன்போடு, தாய்மையுணர்வு பொங்க வேண்டுகிறார். இவ்வுணர்வு அற்புதத் திருவந்தாதியிலும், திருவிரட்டை மணிமாலையிலும் சிவனைப் போற்றுவது போல வெளிப்பட்டுத் தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, சிவபெருமான் ""நம்மைப் போணும் அம்மை காண்'' என்றார். ஆம்! திருக்கயிலாயம் வந்தடைந்த அம்மையாரைப் பார்த்து, "இவர் யார்?' என்று பார்வதி தேவி கேட்க, சிவபெருமான் இவ்வாறு கூறுகிறாராம்,

"வரும் இவள் நம்மைப் பேணும் அம்மைகாண்! உமையே - மற்றுஇப்

பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பிற்றை

அருகு வந்தணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை

ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்''

என்ற காரைக்கால் அம்மையார் புராணத்தில் வரும் 58-ஆவது பாடலின் வழி, ""தேவியே! இவள் நம்மைப் பேணும் அம்மை காண்'' என்கிறார். இது காரைக்கால் அம்மையாருக்குக் கிடைத்த பெரும் பேறல்லவா! இறைவனுக்கே தாயாகும் பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்? அத்தகைய பேற்றை அடைந்தவர் காரைக்கால் அம்மையார். பசுஞானம், பாசஞானம் இரண்டினையும் நீங்கிப் பதிஞானம் ஒன்றிலேயே மனம் ஒன்றி இருந்தவர். பக்தியில் ஆண்களுக்குப் பெண்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்த பெண்ணடியார் இவர்.

பக்தியிற் சிறந்த அம்மையாரை, "அம்மையே!' என்று சிவபெருமான் அழைக்க, "அப்பா! உன் அடிக்கீழ் இருக்கும் வரம் தா!' என்று அம்மை வேண்டிப் பெற்ற வரத்தினால், எப்போதும் கூத்தனின் திருக்கூத்தைக் கண்டு களித்து இன்புறும் பாக்கியத்தைப் பெற்றவர். அவ்வாறு இறைவனின் திருவடியை அடையும் பேறுபெற்ற நாள் பங்குனி சுவாதி (மார்ச் 19) நன்னாள், சிவபெருமானுக்கே அம்மையான காரைக்கால் அம்மையாரின் குருபூஜை திருநாள்.

அப்பனை வணங்குவதைவிட, அப்பனின் அம்மையை வணங்குவதும், அடியார்களை வணங்குவதும் கிடைத்தற்கரிய சிவபதவியை விரைவில் பெற்றுத்தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com