ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

தமிழ் மண்ணில் கோயில்கள் நிறைந்த பகுதி என்றால், காவிரி பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சை, குடந்தைப் பகுதியைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பரிகாரத் தலங்களும்,

தமிழ் மண்ணில் கோயில்கள் நிறைந்த பகுதி என்றால், காவிரி பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சை, குடந்தைப் பகுதியைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பரிகாரத் தலங்களும், சிறப்பான கோயில்களும் நிறைந்த பகுதி இது. காவிரிக் கரையில்தான் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர், யானை வழிபட்ட திருவானைக்கா, பாம்பு வழிபட்ட திருப்பாம்புரம், ஈ வழிபட்ட ஈங்கோய்மலை என ஜீவராசிகளெல்லாம் வழிபட்ட தலங்கள் உள்ளன. ராகுவுக்கான பரிகாரத் தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக் கரையில் அமைந்திருக்கிறதென்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத் தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது. இது பாம்புகள் வழிபட்ட தலம் என்பது சிறப்பு.

கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பஸ்ஸில் பயணிக்கிறோம். வழியில் கொல்லுமாங்குடி என்ற முக்கிய சந்திப்புச் சாலைக்கு முன்னர் கற்கத்தி என்ற நிறுத்தம் அருகே திருப்பாம்புரம் ஆர்ச் என்று நடத்துநர் இறக்கி விடுகிறார். அருகில் ஆட்டோ தயாராக நிற்க, அதில் ஏறி கோயிலுக்கு பயணிக்கிறோம். சுமார் 3.5 கி.மீ. தொலைவு. ஒற்றையடி கிராமத்துப் பாதை. வறண்டு கிடந்த வயல்வரப்பில் ஆட்டோ செல்கிறது. சற்று தொலைவில் தெரியும் குளமும் கோபுரமும் தலத்தின் இருப்பைப் பறை சாற்றுகின்றன.

குளத்தில் கால் நனைத்து, தீர்த்தம் எடுத்து தலையில் தெளித்து, சுற்றுமுற்றும் பார்க்கிறோம். இதுதான் தலத்தின் தீர்த்தம் என்கிறார் ஒருவர். நடுவில் சேஷ நாக சிற்பம் அதன் புனிதத்தை எடுத்துக் காட்டுகிறது. கையெடுத்துக் கும்பிட்டு சிறிய கோபுரத்தின் வழியே கோயிலில் நுழைகிறோம். அறநிலையத்துறை பணியாளர் வழிகாட்டலில் ஆலய பட்டர் கெüரிசங்கர் நம்மை சந்நிதிகளுக்கு அழைத்துச் சென்று கோயில் சிறப்புகளை விளக்கினார்.

முதலில் அழைத்துச் சென்றது அஷ்ட நாகங்களின் கூட்டணியாக விளங்கும் சந்நிதி. இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும் சிற்பம். அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த ஸர்ப்பக் கோலம். இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோயிலில் பரிகாரம் என்று என்ன செய்வார்கள் என்று கேட்டோம். அவர் 7 இடங்களில் விளக்கு ஏற்றிவைப்பது ஒரு பரிகாரம் என்றார். அஷ்ட மகா நாக சந்நிதியில் முதல் விளக்கு வைத்து, பின்னர் ஸ்வாமி, மலையீஸ்வரர், வன்னீஸ்வரர், அம்பாள், கண்ணாடிப் பெட்டி, ராகு-கேது சந்நிதி முன் என 7 விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவது ஒரு பரிகாரம்.

அடுத்தது, இந்தத் தலத்தில் ராகுவும் கேதுவும் இணைந்த ஒரே ரூபமாக விளங்கும் வடிவில் சர்ப்பக் கோலத்தில் ராகு-கேது விளங்க, அதன் மத்தியில் ஒரு லிங்கம் திகழ தனி சந்நிதி உள்ளது. இதன் முன் ஒரு வெள்ளி நாகத்தினை தாம்பாளத்தில் வைத்து சாந்தி பரிகார மந்திரங்களைச் சொல்லி, அதற்கு அபிஷேகம், பூவினால் பூஜை செய்து, ஒரு பெரியவருக்கு தானிய தானம் அளித்து, அந்த நாக வடிவை உண்டியலில் சேர்த்து விடுகிறார்கள். இதற்கு திருக்கோயிலில் தனிக் கட்டணம் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தோஷம் கழித்துச் சென்றவர்களுக்கு ராகு- கேதுவினால் உண்டாகும் தடைகள் அனைத்தும் நீங்குகிறதாம். கால சர்ப்ப தோஷம், களத்ர தோஷம், புத்ர தோஷம், 18 வருட கால ராகு திசை, ராகு புத்தி, கேது புத்தி, லக்னத்தில் 2 அல்லது 8ல் ராகு கேது இருந்தால், 7 வருட கேது திசை, திருமணத் தடை, கடன் உபாதைகள் இருந்தால் இந்தத் தலத்துக்கு வந்து ராகு-கேது சாந்தி பரிகார பூஜை செய்து பலர் பலன் பெறுகிறார்கள் என்றார் கெüரிசங்கர். மேலும், இங்கே போதைப் பழக்கம் உள்ளவர்கள் ஞாயிறுகளில் மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுவராம்.

இவ்வளவு பலன் தரும் சந்நிதி என்றால் அதற்கென்று சிறப்பு தனிச்சிறப்பு இருக்குமே! ஆமாம்.

சிவபெருமான் இருப்பிடமான கயிலாய மலை. சிவபெருமானை வணங்குவதற்காக வரும் அனைவரும் தம்மைத் தான் வணங்குகின்றனர் என்று பெருமானின் மீதிருந்த சர்ப்பங்களுக்கு கர்வம் ஏற்பட்டது. ஒரு முறை விநாயகப் பெருமான், தம் தந்தையை வணங்கியபோது, சிவனார் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனார் தன் உடல் மீதிருந்த நாகங்களை எல்லாம் உதிர்க்கத் தொடங்கினார். இதனால் நாகங்கள் வலிமை இழந்தன. பொலிவு குன்றிய அவற்றை பூலோகம் செல்லுமாறும், நாக இனம் முழுவதுமே வலிமை இழக்கும்படியும் சபித்தார் பெருமான். அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் சர்ப்ப இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லோரும் சாபம் பெறுதல் தகாது என்று பெருமானை மன்றாடின. பெருமான் அவற்றுக்கு மனமிரங்கி, திருப்பாம்புரத்தில் தன்னை பூஜித்தால் சாப விமோசனம் பெறலாம் என அருளினார். அதன்படி, அஷ்ட மகா சர்ப்பங்கள் உள்பட அனைத்தும் இங்கே பெருமானை வழிபட்டு விமோசனம் அடைந்தன.

ஒரு முறை வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. வாயுபகவான் தன் வலிமையால் மலைகளைப் புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனைத் தடுத்து நிறுத்தியது. இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராண வாயுவைத் தடுத்தார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோள்படி ஆதிசேஷன் அந்தப் போரில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, பின்னர் தம் தவறுக்கு மனம் வருந்தி, திருப்பாம்புரத்தில் லிங்க பூஜை செய்து விமோசனம் அடைந்தது.

இதனாலேயே பெருமான் சேஷபுரீஸ்வரர் என்றும் தலம் சேஷபுரி என்றும் வழங்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே சர்ப்பங்களின் நடமாட்டம் இருக்கும் என்கிறார்கள். இவை அந்நேரம் இறைவனை வந்து வழிபடுகின்றனவாம்.

இந்தக் கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற தலம். இங்கே ஆதிசேஷனுக்கு உத்ஸவர் விக்ரகம் உள்ளது சிறப்பு.

இங்கே மூலவர், பாம்புரநாதர் என்றும் ,ஷேசபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அம்பிகை, பிரம்மராம்பிகை என்ற திருப்பெயருடன் திகழ்கிறார். வண்டுசேர்குழலி,வண்டார் பூங்குழலி எனவும் அழைக்கப்படுகிறார் .

தலவிருட்சமாக வன்னி மரம் திகழ்கிறது. தல தீர்த்தமான ஆதிசேஷ தீர்த்தம் கோயிலின் எதிரில் உள்ளது. தீர்த்தத்தின் நடுவே, ஆதிசேஷன் சுதை வடிவம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 59 வது தலம் இது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

இங்கே சிவனின் சாபம் நீங்க ஆதிசேஷன் சிவராத்திரி முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து பெருமானையும் வழிபட்டு, விமோசனம் பெற்றாராம்.

இங்கே திருப்பாம்புரத்தில் ஒரு சிறப்பு உண்டு என்றார் கெüரிசங்கர். இந்தத் தலத்தின் எல்லையில் உள்ள எந்தப் பாம்பும் யாரையும் தீண்டுவதில்லை. அதன் விஷம் யாரையும் ஒன்றும் செய்யாது. இங்கே உள்ள ஆலமரத்தின் விழுது பூமியைத் தொடாதாம். திருக்கோவிலின் உள்ளே 2002ஆம் ஆண்டில் ஸ்வாமி லிங்கத்தின் மீது நல்லபாம்பு சட்டை உரித்து வைத்த நிகழ்வை புகைப்படமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்ப்ப வழிபாட்டை அண்மையில் கண்டவர்களின் சாட்சி இது என்கிறார்கள்.

அமைவிடம் : கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி எனும் ஊரில் திருப்பாம்புரம் ஆர்ச் என்ற வளைவு உள்ளது. இங்கே இறங்கி சுமார் 3.5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் கோயில். பஸ் வசதி கிடையாது. ஆட்டோக்கள். உள்ளன. அல்லது, பேரளம் வந்து, அங்கிருந்தும் வரலாம். மினி பஸ் வசதி உண்டு.

தரிசன நேரம்: காலை 7 -12.30 வரை, மாலை 4 -8 வரை

தகவலுக்கு : 0435-2469555

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com