அழகுக் அழகு

செயலில் அழகு என்பது செம்மையான நன்மை விளையும் நற்செயல். அழகிற்கழகு என்பது வரம்பிற்கு அப்பாலும் தப்பில்லாது செயல்பட்டு...
Updated on
1 min read

செயலில் அழகு என்பது செம்மையான நன்மை விளையும் நற்செயல். அழகிற்கழகு என்பது வரம்பிற்கு அப்பாலும் தப்பில்லாது செயல்பட்டு அதன் பயனை எல்லையின்றி எல்லாரும் துய்ப்பது. இதனையே அல் குர் ஆனின் 39-18வது வசனம், ""அவர்கள் சொல்லைச் செவியேற்பார்கள். அதிலுள்ள மிக அழகானதைப் பின்பற்றுவார்கள். அத்தகையோரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான். இன்னும் அவர்கள் அறிவுடையவர்கள்'' என்று கூறுகிறது.

அதே அத்தியாயத்தில் 55வது வசனம், ""உங்களுடைய ரப்பிடமிருந்து உங்கள் பால் இறக்கி வைக்கப்பட்டதில் மிக அழகானதை நீங்கள் பின்பற்றுங்கள்'' என்றும் கூறுகிறது.

இவ்வசனங்களுக்கு கஷ்ஃபுல் அஸ்ரார் என்ற விரிவுரை நூலில் மிக அழகானது என்பதற்கு மிக அழகிய விளக்கம் தரப்பட்டுள்ளது.

கொலைகாரனுக்குக் கொலைக்குக் கொலை என்ற ரீதியில் நீதி வழங்குவது அழகு. குற்றவாளியை மன்னித்துக் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வாங்கிக் கொடுப்பது அழகினும் அழகு. பிறருக்குத் தீங்கிழைத்தவனுக்கு அத்தீங்கின் அளவுக்குத் தீங்கான தண்டனை தருவது அழகு. மன்னித்துவிடுவது உன்னத அழகு. ஒரு பொருளைச் சரியாக அளந்து நிறுத்து கொடுப்பது அழகு. அளவைக்கும் நிறுவைக்கும் மேல் சற்று கூட கொடுப்பது மேலும் அழகு. ஒருவருக்கு முகமன் கூறும் பொழுது சாந்தி உண்டாவதாக என்று கூறுவதும் உங்களுக்கும் அவ்வாறே சாந்தி உண்டாகட்டும் என்று பதிலுரைப்பதும் அழகு, உங்களுக்குச் சாந்தியோடு அல்லாஹ்வின் அருளும் கிடைக்கட்டும் என்று விடை பகர்வது அழகினுக் கழகு. தொழுகைக்கு முன் உடலுறுப்புகளை ஒரு முறை கழுவிச் சுத்தம் செய்வது அழகு. மும்முறை கழுவிச் சுத்தம் செய்தல் அம்முறையிலும் மேலான அழகு, அநீதி செய்தவருக்குச் செய்த அநீதி அளவுக்கு அநீதி செய்வது அழகு. அத்தீமைக்குப் பதில் நன்மைச் செய்வது பேரழகு.

நான்காம் கலீபா அலி (ரலி) அவர்களின் மன்னிப்பு உன்னிப்பாய்க் கவனித்தால் அழகுக்கழகாய் அமைந்ததை அறியலாம். ஒரு போரில் பகைவீரன் அலி (ரலி) அவர்களைக் கடுமையாகத் தாக்கினான். அவனின் வாள் முறிந்துவிட்டது. கையறு நிலையில் மெய் விதிர்த்து நின்றான், தலையைக் கொய்திட பாய்ந்த கொடுங்கோல் பகைவன். பகைவனின் பலவீனத்தைப் பயன்படுத்தி அவனை வெட்டி வீழ்த்தவில்லை. அலி(ரலி) அவர்கள். அவனுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார்கள். தொடர்ந்து போரிட ஒரு வாள் கேட்டான் பகைவன். அலி(ரலி) அவர்கள் கையிலிருந்த வாளைத் தயங்காது பகைவனிடம் கொடுத்துவிட்டு நிராயுதபாணியாக நின்றார்கள். அலி(ரலி) அவர்களின் அழகுக்கழகான அருஞ்செயலால் ஈர்க்கப்பட்ட அந்த பகைவன் பகை மறந்து தகையுடைய தலைமையை அலி(ரலி) அவர்களின் தலைமையை ஏற்றான்.

ஒழுகுதற்குரிய அழகுக்கழகான செயல்கள் பகைவர்களையும் பழகுதற்குரிய பண்பட்ட நண்பர்களாக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com