
கலைச் சிறப்பும், ஆன்மிகச்சிறப்பும் வாய்ந்த அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர் அருகில் உள்ள கருந்தட்டான்குடி என்று அழைக்கப்படுகின்ற கரந்தையில் உள்ளது. புராண வரலாற்றுப்படி சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட மகரிஷியினால் ஸ்தாபிதம் செய்யப்பட்டு வழிபட்டு வந்ததால் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் வழங்கப்படலாயிற்று.
காலப்போக்கில் காட்டுப் பகுதியில் புதர்கள் மண்டி அதன் நடுவே தன்னை மறைத்துக் கொண்டான் இறைவன். பிற்காலத்தில் சோழன் கரிகாலனுக்கு ஏற்பட்ட கருங்குஷ்டம் என்னும் நோயை நீக்கவும், அவனுக்கு அருள்புரிவதற்கும் ஒரு சமயம் வேலங்காட்டில் வேங்கை ரூபமாய் வந்த இறைவன் அந்த வேங்கையை மன்னன் துரத்தி வந்த தருணத்தில் தன்னை புலித் தோலுடன் கூடிய சிவனாகக் காட்சி தந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அருள் புரிந்தான்.
மன்னன் ஆனணப்படி கருந்திட்டாய் இருந்த இடம் குடிமக்கள் வாழும் இடமானது. அங்கேயிருந்த இறைவன் அனைவருக்கும் கருணை செய்ததால் "கருணாசாமி' எனவும் "கருந்திட்டைக்குடி கருணாசாமி' எனவும் அழைக்கப்பட்டார்.
இவ்வாலயத்தில் காலம்காலமாக பங்குனி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாள்களில் சூரியபகவான் வசிஷ்ட முனிவரிடம் வேண்டிக் கேட்டபடி தன் கிரணங்களால் மூலவர் லிங்க வடிவான சிவபெருமான் மீதும், அம்பிகையின் திருவடிகளிலும் "சூரியபூஜை' செய்யும் அற்புதம் நிகழ்ந்து வருகிறது. அந்நாட்களில் கருணாசாமியையும், பெரியநாயகியையும் வழிபடுவோர் சகல தோஷமும், வேகமும் நீங்கப் பெறுவதாக ஐதீகம்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைவிட பழமையும், சிறப்பும் வாய்ந்த இத்திருக்கோயில் இராஜ இராஜசோழனின் மூதாதையர்களால் கட்டப்பட்டு பிற்காலத்தில் நாயக்க மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்து பராமரிக்கப்பட்டுள்ளது. தற்போது அரண்மணை தேவஸ்தான கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சுமார் 24 வருடங்களுக்கு பிறகு ராஜகோபுரம், மதில்சுவர், திருக்குளம் சீர் அமைத்தல் உட்பட பல திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புக்கு : 98948 49381.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.