

தொழிலாளர் தினத்தன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர் சூசையப்பர் (இயேசுவை வளர்த்த தந்தை) திருவிழாவையும் இணைத்துச் சிறப்பிக்குமாறு 1955 ஆம் ஆண்டில் போப் அறிவித்தார். அவ்வாண்டு முதல், "மே தினம் சூசை தினம்' என்று விவிலியம் குறிப்பிடும் சூசையின் புகழை, தேம்பாவணி போன்ற காப்பியங்கள் விரித்துரைக்கின்றன.
இறைவனின் பணியாளராக வாழ்வதில் இனிய நிறைவு கண்ட சூசை, நிகழ்வுகள் தோறும் இறைத்திருவுள்ளம் அறிந்து செயல்பட்டார். தன் கனவின் வழியாக இறைத்திட்டம் அறிவிக்கப்பட்டாலும் உடன் உவப்புடன் செயலாற்றினார். இறைத் திட்டத்தின் படியே, தனது இல்லற வாழ்வையும் வகுத்துக் கொண்டார்.
சூசையின் கனவில் இறைத்தூதர் தோன்றி, கடவுளின் தூய வல்லமையினால் மரியாள் கருவுற்றிருக்கிறாள் என்றும், அவள் பெற்றெடுக்கும் மகனுக்கு இயேசு என்று பெயரிடுமாறும் அறிவித்தார். விழித்தெழுந்த சூசை, "கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார்' என்று மறை நூல் மொழிவது, தன் மனைவி கன்னி மரியாள் வழியாகவே நிறைவேறுகின்றது என்று தெளிந்தார்.
இறைத்தூதர் பணித்தவாறு, தெய்வீகம் திகழும் மரியாளைத் தன் இல்லத்தரசியாக ஏற்றார்.
பெத்லகம் ஊரில் திருக்குழந்தை பிறந்த பின்னர், மரியாள் இறைவனின் தாய் என்று முழுமையாக சூசை அறிந்து கொண்டார். இயேசு என்னும் பெயரை குழந்தைக்குச் சூட்டினார். பகைவரிடமிருந்து பாலகனை மிகக் கவனத்துடன் பாதுகாத்து வளர்த்தார். திருமகனை செல்வச் சுரங்கமாகக் கருதாமல், ஊர் போற்றும் நல்ல தச்சராக விளங்கினார்.
முப்பது வயது நிரம்பியவராக இயேசு இருந்த பொழுது இயேசுவின் நெஞ்சத்தில் தலை சாய்த்து, சூசை உயிர் துறந்தார். முப்பது வயது வரை பெற்றோருக்குப் பணிந்து நடந்து, தந்தையிடம் தச்சுத் தொழிலிலும் தாயிடம் நூல் நூற்பதிலும் துணையாக நின்றிருந்த இயேசுவும் கடவுளின் சித்தப்படி மக்களிடம் பணியாற்றச் சென்றார்.
உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றும் திருக்குடும்பத்தின் தலைவர், "வளம் தரும் வளன்' சூசையின் வழியில், நம் பணிகளைப் பொறுப்புடன் நிறைவேற்றி, இறைவனின் மகிமையில் மன நிறைவடைவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.