

சப்த ரிஷிகளில் ஒருவர் ஆங்கீரஸ முனிவர். அவரது மகன் பிரகஸ்பதி எனும் வியாழபகவான் ஆவார். பிரகஸ்பதி நான்கு வேதங்களையும் கற்று பல யாகங்களும் ஹோமங்களும் செய்தார். அஸ்வமேத யாகம் போன்ற நூற்றுக்கும் மேலான யாகங்களைச் செய்தார். இப்படி சிறப்பான ஹோமங்களைச் செய்து தேர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே தேவர்களுக்குக் குருவாக முடியும்.
இவ்வாறு தேர்வு பெற்ற பின்னரே பிரகஸ்பதியும் தேவர்களுக்கு குருவானார். ஆனாலும் அவர் திருப்தி அடைந்து விடவில்லை. தேவகுருவை விட சிறப்பான இடத்தை அடைய, மேலும் பல சிறப்பான யாகங்கள், ஹோமங்கள் செய்ததுடன் திட்டைக்கு வந்து, இங்குக் கோயில் கொண்டுள்ள வசிட்டேஸ்வரரைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவ பெருமான், அவருக்கு நவக்கிரகப் பதவியை வழங்கினார். அதன்படி நவக்கிரகங்களில் குருபகவானாக சுபக்கிரகமாக மாற்றம் பெற்றார். திட்டையில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையில் குரு பகவான் தனிச் சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
ஆதிகுரு என்று அழைக்கப்படும் சிவபெருமானின் ஞானவடிவான தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்கள் அருளையும் ஞானத்தையும் பெறுவார்கள். அனைத்து சிவன் கோயில்களிலும் தென்கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியும், நவக்கிரகங்களில் ஒருவராக அமைந்திருக்கும் குருபகவானும் வேறு வேறு என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் திட்டையில் தனிச் சந்நிதி கொண்டு விளங்குகிறார். குருவால் வரும் தோஷங்களுக்கு இவரையே வழிபட வேண்டும். பொன், பணம் போன்றவற்றுக்கு இவரே அதிபதி. எனவே நமது பொருளாதாரம் உயர வேண்டுமானால், குருபகவானை வழிபடவேண்டும்.
ஒருமுறை பார்வதி தேவியானவள் பூவுலகில் பிறந்து சிவபெருமானை மணம்புரிந்துக் கொள்வதற்காக கடும் தவம் மேற்கொண்டார். ஆனால் திருமணம் கைகூடி வரவில்லை. தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முறையிட்டனர். ""தேவியைத் திருமணம் புரிந்து கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் தட்டிக் கொண்டே போகிறது. என்ன செய்வது, தேவிக்கு இன்னும் குருபலம் வரவில்லையே!'' என்று பதிலளித்தார் பெருமான்.
அப்படிப்பட்ட தேவிக்கே குருபலன் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்றால், சாமான்யர்களான நம் நிலை என்ன? எனவே திருமணம் தடைபடுபவர்கள், அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திட்டைக்கு வந்து அம்பாளை தரிசனம் செய்து, குருபகவானை அபிஷேகம், அர்ச்சனை செய்து வணங்கினால், திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம்!
குருபகவான் புத்திரக்காரகர் எனப்படுவதால், திருமணம் மட்டுமல்லாது, குழந்தைப் பேற்றுக்கும் குருபகவானையே வழிபடவேண்டும். அவர் அருள் இருந்தால்தான் குழந்தைப்பேறு வாய்க்கும். பொன், பொருள், திருமணம், குழந்தைப் பேற்றுக்காக குருபகவானை வணங்கும் நாம், குழந்தைகளின் கல்வி மேம்படவும் வித்யாகாரகரான குருபகவானை வணங்க வேண்டியது அவசியம். கல்வியில் முன்னேற்றம், வேத வேதாந்த சாஸ்திர அறிவு, நல்ல புத்தி, ஞாபக சக்தி அனைத்தையும் வழங்குபவர் குருபகவான். அவர் அருளால் அரசியல் தொடர்பான உயர் பதவிகள் கிடைக்கும். அதுபோலவே, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வங்கிகள் மற்றும் நிர்வாகத் துறைகளில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் குரு அருள் பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
நவக்கிரகங்களில் முழுமையான சுபக்கிரகம் குருபகவான் ஒருவரே ஆவார். சந்திரன் சுபரானாலும், வளர்பிறையில் மட்டுமே சுபராகக் கருதப்படுகிறார். புதன் சுபக்கிரகங்களோடு சேரும்போது மட்டுமே சுபராவார். அசுப கிரகங்களோடு சேரும்போது பாபத்தன்மை அடைந்து விடுகிறார். சுக்கிரன் சுபரானாலும் அவர் அசுர இனத்தில் பிறந்ததால் அவரை முழுச்சுபராக ஏற்பதில்லை. எனவே, தேவகுருவான குருபகவானே முழுச்சுபராகக் கருதப் படுகிறார்.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்து கிரகங்களும் முழுப் பாபக்கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்துள்ளது. இந்த ஐந்து கிரகங்களினால் வரும் தோஷங்களைக் கட்டுப்படுத்துகிற சக்தி முழு சுபகிரகமான குரு பகவானுக்கு உண்டு. தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை செழிப்படையச் செய்யும் சக்தியும் குருபகவானுக்கு உண்டு.
குருவின் 5,7,9 ஆம் பார்வைகள் சிறப்பாக சொல்லப்படுகின்றது. இப்பார்வையின் விசேஷத்தால், பாபக்கிரகங்களினால் வரும் தீயப்பலன்களை கட்டுப்படுத்தும் சக்தி குருபகவான் ஒருவருக்கே உண்டு. எனவே, "குருபார்க்க கோடி தோஷம் விலகும்' என்றும், "குருபார்க்க கோடி நன்மை' என்றும் பழமொழிகள் உருவாயின.
திட்டைத் திருக்கோயில் மற்றும் திருக்குளம் திருப்பணி வேலைகள் சிறப்பாக நிறைவடைந்து, கடந்த, 2013 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வரும் ஜுன் மாதத்தில் அற்புதமான மூன்று கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. 13.06.2014 ஆம் தேதி குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 21.06.2014 ஆம் தேதி ராகு பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும், கேது பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் பெயர்ச்சியாக இருக்கிறார்கள்.
இந்த முப்பெரும் கிரகப் பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், திட்டையில் உள்ள அருள்மிகு வசிட்டேஸ்வரர் திருக்கோயிலில் (19.06.2014 - 23.06.2014) நான்கு தினங்களுக்கு நவக்கிரக பரிகார ஹோமங்கள் நடைபெற இருக்கின்றன. பக்தர்கள் இந்த ஹோமங்களில் கலந்து கொண்டு அருள்மிகு வசிட்டேஸ்வரர் மற்றும் குருபகவானின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
தொடர்புக்கு: 04362-252858 / 94434 45864.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.