ஆளுவோரினும் அதிக மதிப்புடையது நூல்!

அப்பாஸிய அரசர் ஹாரூன் ரசீது பாக்தாதைத் தலைநகராகக் கொண்டு ஒரு பேரரசை ஆண்டார்.
Updated on
2 min read

அப்பாஸிய அரசர் ஹாரூன் ரசீது பாக்தாதைத் தலைநகராகக் கொண்டு ஒரு பேரரசை ஆண்டார். அவரின் அவையில் அறிஞர்களும் கல்வியாளர்களும் கலைஞர்களும் நிறைந்திருந்தனர்.

ஒரு சமயம் ஹாரூன் ரசீது மதீனா சென்றார். அறிஞர்களை அவரின் அவைக்கு அழைத்து வரும் தேடலில் "கிதாபுல் முஅத்தா' (நேரான பாதையை சீராய் போதிக்கும் நூல்) என்ற மாபெரும் நூலைத் தொகுத்த இமாம் மாலிக் (ரஹ்) மதீனாவில் இருப்பதை அறிந்தார். இந்நூல் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. இந்நூலுக்குப் பலர் விரிவுரையும் எழுதி உள்ளனர். இந்நூல் இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.

முஅத்தாவின் கையேட்டு பிரதிகளில் ஒன்று மக்காவிலுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட மகா நூலகத்தில் உள்ளது. 2002 இல் ஹஜ் புனித பயணத்தில் இக்கட்டுரையாசிரியர் இந்நூலைக் காணும் பேறு பெற்றார்; அல்ஹம்து லில்லாஹ். (இறைவனுக்கு நன்றி) அச்சிட்டது போல் அழகாக எழுதியுள்ளார் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.

மன்னன் ஹாரூன் ரசீதின் ஆணைப்படி அரச மரியாதைகளுடன் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களை முஅத்தா நூலுடன் அழைத்து வர அதிகாரிகள் சென்றனர்.

நான் தொகுத்த முஅத்தா கல்விப் பொருள். கல்வியைக் காண கல்வியின் இருப்பிடத்திற்கு வரவேண்டும். கல்வி யாரையும் சென்று பார்க்காது என்று செப்பினார் செம்மல் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.

மன்னரைச் சுற்றி இருந்த தன்னலத்திற்காக தாளம் போட்டு ஆலோலம் பாடும் அரசவையினர் அரசரை அவமதித்த அறிஞரைத் தண்டிக்க வேண்டும். அவரின் ஊரையும் சூறையாட வேண்டும் என்று சூளுரைத்தனர்.

முடி சூடிய மன்னனால் குடியிருக்கும் ஊருக்கு ஊறு நேராது காக்க விரும்பிய ஊர் தலைவர்கள் இமாம் மாலிக் அவர்கள் மன்னரைச் சென்று பார்க்கும்படி மன்றாடினர். ஊர் நலம் கருதி பேரரசனைப் பார்க்க சென்றார் பேரறிஞர் இமாம் மாலிக் (ரஹ்). பொற்போடு பொருந்தி அழைத்தும் வராத காரணத்தைத் திருந்த உரைக்குமாறு நிமிர்ந்து கேட்டார் நிலம் ஆளும் மன்னர்.

முறை செய்தாளும் முடிசூடிய மன்னனைவிட இறைவழியில் உழைப்பவன் உயர்ந்தவன். கல்வியைத் தேடி செல்பவன் இறைவழியில் போராடுபவனைவிட மேலானவன் என்ற மேதினி புகழ் நபிகள் நாயகத்தின் போதனைகளைச் சேர்த்து தொகுத்திருக்கும் என் நூலின் மேன்மையை மேதினி போற்றும். உங்களுக்குப் பேரரசை ஆளும் ஆற்றலை அருளி அல்லாஹ் உங்களை உயர்த்தியிருக்கிறார். கல்வியைத் தாழ்த்தி நீங்கள் தாழ்ந்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தினார் மாலிக் (ரஹ்).

ஹாரூன் ரசீது புறப்பட குழலூதி கட்டியங் கூறும் கட்டியக்காரர்கள் முன்னிற்க பணியாளர்கள் அணிவகுத்து வரிசையாய் வலம் இடமிருக்க குதிரைகள் தயாராயின.

எவர் கல்வி கற்க நடந்து செல்கிறாரோ அவரை அல்லாஹ் சுவன வழியில் நடக்க செய்வான். கல்வியை நாடி நடப்பவருக்கு வானவர்கள் இறக்கைகளை விரித்து நிழல் பரப்புகின்றனர் என்ற நீதர் நபி (ஸல்) அவர்களின் போதனையை மேதினி ஆளும் அரசருக்கு நினைவு படுத்தினார் மேதை இமாம் மாலிக் (ரஹ்).

பவனிக்குத் தயாரான அவனி ஆளும் அரசர் ஹாரூன் ரசீது அந்த ஏழை எழுத்தாளரோடு அவரின் இல்லத்திற்கு நடந்தே சென்று நந்நூலாம் முஅத்தாவைப் படித்தறிந்தார்.

நாமும் நல்லறிஞர்களை நாடி சென்று நற்கல்வி பயின்று நல்ல நூல்களைத் தேடி வாங்கி படித்து தெளிவு பெற்று தேர்ந்து நல்லன செய்து வல்லோன் அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com