சுகம் தரும் சுத்தம் பேணி இகத்தில் இந்தியாவை முன்னிறுத்த மத்திய அரசின் மாபெரும் இயக்கமே தூய்மை இந்தியா. வாய்மை பேணும் இந்திய மக்களாகிய நாம் தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து பணிபுரிந்து பாரில் பாரதத்தின் பெருமையை உயர்த்துவோம்.
அகிலத்திற்கு வழி காட்ட அல்லாஹ்வால் நபித்துவம் (இறைதூது) கொடுக்கப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மறைவழியில் மாசகற்றி மனமொழி, மெய்களால் தூய்மை பேணி துயரின்றி வாழ அயராது அரும்பணியாற்றி வீட்டையும் நாட்டையும் வீதியையும் ஊரையும் சுத்தமாய் வைத்து நித்தமும் நித்திலத்தில் நிம்மதியாய் வாழ வழிவகுத்து தந்ததை விழி திறந்து பார்த்து விழிப்புணர்வு பெற்று பழிப்புக்குள்ளாக்காமல் பாரத தேசத்தை பாரெல்லாம் நேசிக்கும் வண்ணம் பளிச்சிட வைப்போம்; களிப்புடன் வாழ்வோம்.
""அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்'' என்று அருமறை குர்ஆனின் 74-5 ஆவது வசனத்தில் எக்காலமும் எவ்விடங்களிலும் அசுத்தம் அகற்றி சுத்தம் பேணி சுகமாய் வாழ இகத்தாருக்கு இனிய போதனை புரிகிறான்.
இதனை அடியொற்றி புனிதநபி (ஸல்) அவர்கள் ""சுத்தம் ஈமானில் (ஏகத்துவ கொள்கையில்) பாதி'' என்று பகர்ந்ததை முஸ்லிம் நூலில் பதிவு செய்கிறார் அபூமாலிக் அல் அஷ்அரீ(ரலி).
""தேங்கி கிடக்கும் நீங்கள் குளிக்கும் நீரில் (குளம், குட்டை முதலியன). உங்களில் எவரும் சிறுநீர் கழிக்க வேண்டாம்'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்தியம்புகிறார் அபூஹீரைரா (ரலி).
நூல் -புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸஈ.
மக்கள் நடமாடும் இடங்களிலும் மக்களுக்கு நிழல் தரும் இடங்களிலும் நீர் நிலைகளிலும் மலம் கழிப்பதை தாஹா நபி (ஸல்) அவர்கள் தடுத்ததைத் தொடுத்து சொல்பவர்கள் - அபூஹீரைரா (ரலி) மற்றும் முஆது (ரலி) நூல்- முஸ்லிம், அபூதாவூத்.
பொந்துகளில் சிறுநீர் கழிப்பதும் பொருந்தாதது என்று அருமை நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை ஸீனன் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அப்துல்லாஹ் இப்னு முஅஃப்பல் (ரலி).
பொது கழிப்பிடமில்லாத அக்காலத்திலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பொதுவிடங்களில் சிறுநீர், மலம் கழிப்பதைக் கண்டித்து தடுத்து பொது சுகாதாரம் பேணியதை நாமும் பின்பற்றி தூய்மை காக்க வேண்டும்.
தெருவில், தெரு ஓரங்களில் பாதைகளில் உட்காருவதையும் உட்கார்ந்து உல்லாசமாய் உரையாடுவதையும் உத்தம நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை அபூஸயீதில் குத்ரி (ரலி) அவர்கள் தொகுத்து சொல்வதை புகாரி, முஸ்லிம் நூற்களில் காணலாம்.
வீதிகள், பாதைகள், பாதைசாரிகளுக்கும் பயணிகளுக்கும் உரிமை உடையவை. எனவே அவர்களுக்கு இடையூறாக பாதையை வேறு செயல்களுக்குப் பயன்படுத்துவது உரிமை மீறல், அத்துமீறல், அபகரிப்பு என்பதை உபகாரியான உத்தம நபி (ஸல்) அவர்களின் உரையால் உணரலாம்.
இமாம் அஹமதுப்னு ஹன்பல் ஒருநாள் வெளியில் சென்றார்கள். அவர்களிடம் பொதுகல்வி பயின்று உயர்கல்வி கற்க இருந்த மாணவர் தெருவில் குப்பைக் கொட்டுவதைக் கண்டார்கள். அம் மாணவரை கண்டித்து கசடற கற்ற கல்வியைக் கற்றபடி ஒழுகாத அம்மாணவருக்கு உயர்கல்வி கற்பிப்பதில் பயனில்லை என்று பகர்ந்தார்கள் இமாம்.
""செல்லும் வழியில் தீமை பயக்கும்'' என்ற நபிமொழியை அபூபர்வத் (ரலி) அறிவித்ததாக முஸ்லிம் நூலில் பதியப்பட்டுள்ளதையும் ""எவரேனும் ஒரு சாண் அளவு நிலத்தை அபகரிப்பாராயின் (மறுமை நாளில்) ஏழடுக்கு பூமியை வளையமாக அணிவிப்பான் அல்லாஹ்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அறிவித்ததை அபூஸல்மா இப்னு அப்துற்றஹ்மான் (ரலி) அறிவிப்பது புகாரி.
முஸ்லிம் நூற்களில் குறிப்பிடப்படுவதையும் மாணவரின் நினைவிற்குக் கொண்டு வந்தார் ஆசிரியர். தூய்மைப்படுத்தும் தொண்டுள்ளத்தோடு ஆசிரியர் கண்டித்ததும் அம்மாணவர் கொட்டிய குப்பையை அப்புறப்படுத்தி அள்ளி எடுத்து வெகு தொலைவில் மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் கொட்டினார்.
இறைமறை திருக்குர்ஆன் திருத்தமாய் கூறியவாறு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பொருத்தமாய் முன் மாதிரியாய் நடந்து காட்டிய வழியில் நாமும் வீட்டில் வீதியில் ஊரில் நாட்டில் சுத்தம் பேணும் தூய்மை இந்தியா இயக்கத்தில் சேர்ந்து சோர்ந்திடாது பணியாற்றி பாங்கான தூய்மையில் இந்தியா ஓங்கி ஒளிர ஓயாது உழைக்க உறுதி பூணுவோம். நன்மைக்கு நற்கூலி வழங்கும் அல்லாஹ் நம்மை இம்மை மறுமையில் பொற்புடையவர்களாக வாழ அருள்புரிவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.