நல்லறிவு நல்கும் ஞானமூர்த்தி!

அறிவோடு பிறக்கும் அனைவரும் நல்லறிவோடு வளர வேண்டும் என்பதற்காக
நல்லறிவு நல்கும் ஞானமூர்த்தி!
Updated on
1 min read

அறிவோடு பிறக்கும் அனைவரும் நல்லறிவோடு வளர வேண்டும் என்பதற்காக கும்பகோணம் அருகே முதல்கட்டளையில் மெய்ஞானமூர்த்தியாக அமர்ந்து மெய்யறிவு வழங்கிக் கொண்டிருக்கிறான் ஈசன்.

கும்பகோணத்திற்கு பக்தியும் பலமும் சேர்க்கும் திருநாகேஸ்வரம் ராகுஸ்தலத்தில் இருந்து கிழக்கே 6கி.மீ. தொலைவில் இருக்கிறது முதல்கட்டளை என்ற ஊர். முதல்கட்டளையைத் தொடர்ந்து 7 கட்டளைகள் வரை 7 ஊர்கள் இருக்கின்றன. இந்த 7 கட்டளைகளுள் அருள்மிகு துர்க்கையம்மன் அமர்ந்து அருள் பாலிக்கும் புகழ்பெற்ற அம்மன்குடி ஆறாம்கட்டளை. இந்த ஏழு கட்டளைகளும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரே ஜமீன்தாரின் கட்டளையாக (உரிமையாக) இருந்திருக்கின்றன. இந்த ஜமீன்தார் கட்டளைக்கு ஒன்றாக ஏழு கட்டளைகளிலும் ஏழு சிவன் கோயிலை எழுப்பியிருக்கிறார்.

ஏழு கட்டளைகளின் தொடக்கமாக உள்ளது முதல்கட்டளை. முதல்கட்டளை சிறப்படைந்தால் ஏழு கட்டளைகளும் சிறப்படையும். முதல்கட்டளை செழிப்பானால் ஏழு கட்டளைகளும் செழிப்பாகும் என்பது 7 கட்டளை மக்களின் நம்பிக்கை.

கும்பகோணம் அருகே உள்ள சீர்காழியில் ஞானப்பால் உண்டு ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் இங்கு வந்து ஈசனை வழிபட்டதாலேயே மெய்ஞானமூர்த்தி என்று ஈசன் அழைக்கப்படுகிறார். அம்பாள் ஞானாம்பிகை. அறிவு பெறவும், நல்லறிவு பெறவும், தெளிந்த நல்லறிவு பெறவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஈசனை வழிபட்டுச் செல்கின்றனர்.

முதல்கட்டளைக்கு இன்னொரு பெருமை சேர்க்கும் ஆலயம் சப்த மாதர்கள் ஆலயம். முன்னொரு காலத்தில் இந்த கிராமத்தில் வராட்டி தட்டி விற்கும் ஏழு பெண்கள் வயல் வெளியில் மாட்டுச்சாணம் பொறுக்க சென்றுள்ளனர். சாணம் பொறுக்கி களைப்படைந்தபோது அருகில் இருந்த சக்தி மிக்க வேப்ப மரத்தை கும்பிட்டு வணங்கியிருக்கிறார்கள். களைப்படைந்த போது கூட கடவுளை நினைத்து

வணங்கிய அந்த ஏழு பெண்கள் அதே இடத்தில் சிலையாக மாறிவிட்டார்களாம். அவர்களுக்கு அங்கேயே கோயில் கட்டி இன்றளவும் சப்த மாதர்களாக வழிபட்டு வருகிறார்கள் முதல்கட்டளை கிராமவாசிகள்.

இந்த இரண்டு ஆலயங்களையும் மிகுந்த சிரமங்களுக்கு இடையே புதிதாக கட்டி வருகிறார்கள் இவ்வூர் எளிய விவசாய பெருமக்கள். அன்பர்கள் ஆலயப் பணியில் பங்கு கொண்டு அருள் பெறலாம்.

தொடர்புக்கு: 9487031796.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com