

கோவாவில் அமைந்துள்ள பாம் ஜீசஸ் தேவலாயம் 408 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தியாவில் நிறுவப்பட்ட முதன்மையான ஆலயங்களில் இதுவும் ஒன்று.
மிகவும் பிரமாண்டமான இந்த ஆலயம் கலையழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்குச் செல்பவர்களுக்கு ஆலயத்தை விட்டுத் திரும்பவே மனம் வராது. அவ்வளவு அழகும் அமைதியும் கொண்ட ஆலயம் இது.
இந்த ஆலயத்தில்தான் புனித பிரான்சிஸ் சேவியரின் திருவுடல், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெள்ளிப் பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
462 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இந்தப் புனிதரின் உடல் இன்றும் அழியாமல் இருக்கின்றது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களின் பார்வைக்காக இந்த உடல் ஆலயத்தில் வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் நவம்பர் மாத இறுதியிலிருந்து ஜனவரி மாதம் வரை புனித பிரான்சில் சேவியரின் உடல் பொதுமக்கள் தரிசிக்கப்பதற்காக ஆலயத்தில் வைக்கப்பட இருக்கின்றது.
இந்த தரிசனத்துக்காக கோவாவுக்கு சுமார் 50 லட்சம் பேர் வருகை புரிவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த ஆலயத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி வருபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோவா அரசும் ஆலய நிர்வாகமும் பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
புனித பிரான்சிஸ் சேவியர் (தமிழில் புனித சவேரியார் என்று அழைக்கப்படுகிறார்) 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் தேதி ஸங்குவேசா என்ற போர்ச்சுகல் நாட்டு நகரத்தில் பிறந்தார். இளமைக்காலத்தில் அங்கேயே கல்வி கற்றவர், மேற்படிப்புக்காக பாரிஸ் நகரத்துக்குச் சென்றார். அங்கு கல்வி பயிலும்போது புனித இக்னேஷியஸ் லொயோலாவைச் சந்தித்தார். அவருடன் சேர்ந்து ஒரு சபையை நிறுவி, தொண்டு செய்துவந்தார்.
அதன்பிறகு இயேசுகிறிஸ்துவின் போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஆசையால், 1541ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி லிஸ்பன் துறைமுகத்திலிருந்து ஒரு சிறிய கப்பலில் புறப்பட்டார். பல்வேறு இன்னல்களைச் சந்தித்தும் மனம் தளராமல் தனது பயணத்தைத் தொடர்ந்தவர் 1542ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி கோவா வந்தடைந்தார்.
அங்கு ஒரு சிறிய மணியைக் கையில் வைத்து ஒலி எழுப்பிக்கொண்டே தெருத் தெருவாகச் சென்று இயேசுவின் போதனைகளைப் பரப்பி வந்தார். இவரைச் சுற்றி சிறுவர்களின் கூட்டம் எப்போதும் இருக்கும்.
அதன் பிறகு இந்தியாவின் மேற்குப் பகுதியில் பல இடங்களுக்கும் தெற்கில் மணப்பாடு கிராமம் வரை பல ஊர்களுக்கும் பயணம் செய்து, இயேசுவின் போதனைகளை மக்களுக்கு ஆர்வத்துடன் கூறி வந்தார். இந்தச் சமயங்களில் இவரால் ஏராளமான சிறிய ஆலயங்கள் எழுப்பப்பட்டன.
பிறகு ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கும் சென்றார். சீனாவில் ஸன்ஸியான் என்ற தீவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுத் தனது இன்னுயிரை நீத்தார். அங்கிருந்து அவரது உடல் கோவாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
கோவாவில் இருந்த அவரது உடல் சில காலத்துக்குப் பிறகு போர்ச்சுகல் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கோவாவுக்குக் கொண்டு வரப்பட்டு, பாம் ஜீசஸ் ஆலயத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.
ஆலயத்தின் உள்ளே உள்ள உயரமான பீடம் ஒன்றில் அவரது உடல் வெள்ளிப் பெட்டியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் அழியாமல் இருக்கும் இவரது உடல் இருக்கும் இந்தப் பெட்டி பொதுமக்கள் தரிசிக்கும் பொருட்டு கீழே இறக்கி வைக்கப்பட இருக்கின்றது.
இந்தச் சமயத்தில் உலகெங்கிலுமிருந்து ஜாதி, மத பேதமில்லாமல் லட்சக்கணக்கான மக்கள், கோவா வந்து, இந்தப் புனிதரைத் தரிசித்து, தங்களது வேண்டுதல்களைச் சமர்ப்பிக்க இருக்கிறார்கள். இந்தப் புனிதர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று மக்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
- ரோஹன் பின்னி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.