
மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியார் மித்ராவதிக்கும் வாழ்க்கையில் பெருங்குறை! அதுதான் அவர்களுக்குப் புத்திரப்பேறு இல்லாமை. இவர்கள் இருவரும் காசிக்குச் சென்று மணிகர்ணிகையில் நீராடி, விஸ்வநாதரை நினைத்து, ஓராண்டு காலம் கடுந்தவமியற்றினர். அந்த தவத்திற்கு மகிழ்ந்து சர்வேஸ்வரன் அவர்முன் தோன்றி, ""யாது வரம் வேண்டும்?'' என வினவ, முனிவர் புத்திரப்பேறு வேண்டும் என்று வேண்டினார்.
முனிவருக்கு புத்திரப்பேறு வரத்தை அளிக்கும் முன் சிவன், ""நூறு வயது வரை வாழும் பிள்ளை வேண்டுமா, அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா? இதில் நூறு வயது வரை வாழும் பிள்ளைக்கு ஊமை, செவிடு, முடம், வியாதி, சகல தீக்குணங்களும் இருக்கும். பதினாறு வயது வரை வாழும் புதல்வனோ மகா அழகனாய் இருப்பான். சகல கலைகளிலும் வல்லவனாய் இருப்பான். என் மீது மட்டற்ற பக்தி பூண்டு வாழ்வான். இவர்களில் எந்த மாதிரி புத்திரன் உனக்கு வேணடும்?'' என்றார்.
முனிவர் எந்தப் புத்திரனை வேண்டுவார்..! நூறு வயது வரை செவிடாகவும் குருடனாகவும் வியாதியஸ்தனாகவும் இருக்கும் பிள்ளையை எவர்தான் வேண்டுவார்? குறைந்த வயது வாழும் புத்திரனையே தேர்வு செய்து வேண்டினார் அவர். ""தந்தேன்'' என்று புத்திரப்பேற்றை நல்கி விட்டு மறைந்தார் விஸ்வநாதர்.
காசியில் தவம் முடித்ததும் பத்து மாதத்தில், முனிவரின் பத்தினி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றார். இளஞ்சூரியனைப் போல ஒளி வீசினான் அவன். பிரம்ம தேவரே வந்து குழந்தைக்கு "மார்க்கண்டேயன்' என்று பெயர் சூட்டினார். குழந்தை மகா புத்திமானாக இருந்தான். ஐந்து வயது ஆவதற்குள்ளாகவே சகல கலைகளையும் கற்று வளர்ந்து விட்டான்! அதோடு, அறிவு, அடக்கம், பெரியவர்களை மதித்தல், அளவிடா சிவபக்தி ஆகியவையோடு கண்டார் வியக்கும் வண்ணம் வாழ்ந்தான். ஆயிற்று... அவனுக்கும் பதினைந்து வயது முடிந்து பதினாறு வயது பிறந்தது! இதுவரை தன் மகனைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்திருந்த மிருகண்டு முனிவருக்கும் அவர் பத்தினிக்கும் இப்போது கவலை பிறந்தது. "இன்னும் ஓராண்டுதானே நமது அருமை மகன் ஜீவித்திருப்பான்?' அதை எண்ணும்போதே தம்பதியர் விசனக்கடலில் மூழ்கினர். தமது பெற்றோரின் இந்த வருத்தத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தத்தளித்த மார்க்கண்டேயன், அதற்கான காரணம் என்ன என்று பெற்றோரைத் துளைத்து எடுத்தான். அவர்களும் வேறு வழியின்றி சிவபெருமான் அளித்த வரத்தின் விளைவாக அவன் இன்னும் ஓராண்டே வாழ முடியும் என்பதைக் கூறி வருந்தினர். இதைக்கேட்ட மார்க்கண்டேயன், ""தந்தையே! நீங்கள் இதற்காகத் துளியும் வருந்த வேண்டாம். நமசிவாய மந்திரமும் திருநீறும் நமக்குத் துணையிருக்கும். நம்மைக் காக்கும் சிவன் நம்மைக் கைவிடார். எனவே துணிவோடு இருங்கள்!'' என்றுகூறி விடைபெற்று காசிக்குச் சென்று மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கம் ஒன்றை நிறுவி அதற்கு நறுமலர் சாத்திவணங்கி தவம் செய்யலானான்.
சிவபெருமானும் அவனது தவத்தில் இன்புற்று அவன் முன் தேன்றி ""யாது வரம் வேண்டும்?'' என்று வினவ, மார்க்கண்டேயன் அவர் காலடியில் விழுந்து வணங்கி அவரைப் பலவாறு போற்றித் துதித்துத் தன்னைக் காலன் கைப்படாவண்ணம் காத்தருள வேண்டுகிறான். அவரும் ""மார்க்கண்டேயா! நீ அஞ்ச வேண்டாம். அந்தகனின் பிடியிலிருந்து நம் அருள் உன்னைக் காப்பாற்றும்!'' என்று வரமருளி மறைந்தார்.
மார்க்கண்டேயர் தன் வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாமல் சதா சிவபூஜையில் திளைத்திருந்தார். பதினாறு ஆண்டு முடிந்தது. யமதூதன் சிவபூஜையிலிருந்த மார்க்கண்டேயனை அணுக அஞ்சி மேல் உலகு சென்று யமனிடம் விஷயத்தைக் கூறுகிறான்.
யமன் தன் கணக்கரான சித்திரகுப்தனை விளித்து மார்க்கண்டேயனது கணக்கைக் கூறுமாறு கேட்கிறான்!
சித்திரகுப்தனோ, ""பிரபு! மார்க்கண்டேயனுக்கு ஈசன் தந்த பதினாறு ஆண்டுகாலம் முடிந்தது. விதியை வென்றவர் எவருமிலர். மார்க்கண்டேயரின் சிவபூஜையின் பலனாய் அவருடைய புண்ணியம் மிக அதிகரித்து விட்டது. அதனால் அவர் நமது உலகிற்கு வர நியாயமில்லை. நேராகக் கைலாயம் செல்ல தயாராய் இருக்கிறார்!'' என்றார்.
உடனே யமன் தனது அமைச்சனான காலனை அழைத்து மார்க்கண்டேயனைப் பிடித்து வரும்படி ஆணையிடுகிறான். காலன் மார்க்கண்டேயனிடம் சென்று மிகவும் நயமாகத் தன்னுடன் வந்து விடுமாறு அழைக்கிறான். தன்னுடன் வந்தால் மார்க்கண்டேயனுக்கு யமன் இந்திரப்பதவி வாங்கித் தருவார் என்றும் ஆசை காட்டுகிறான்.
ஆனால் மார்க்கண்டேயனோ, ""போம் அய்யா! சிவனடிக்கு அன்பு செய்தோர் இந்திரப் பதவி என்ன, வேறு எந்தப் பதவியையும் விரும்பார். போய் உம் எஜமானிடம் சொல்லும்!'' என்று கூறி விடுகிறான்.
இதனையறிந்த யமதர்மராஜனுக்கு கடுங்கோபம் வந்தது. அவனோ தன் வாகனமேறி பாசக்கயிற்றைச் சுழற்றியபடி மார்க்கண்டேயனை அடைந்து, ""மார்க்கண்டேயா! என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? ஈசனார் தந்தது உனக்கு பதினாறு வயதுதான் என்பதை மறந்தாயா? நீ புரியும் சிவபூஜை உன் பாவத்தை நீக்குமேயன்றி நான் வீசும் பாசக்கயிற்றைத் தடுக்காது. பிறப்பு, இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்குமுண்டு. எனக்குமுண்டு. பிறப்பு, இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர், மூவர் மற்றும் எவர் உன்னைக் காப்பாற்ற முயன்றாலும் உன் உயிரைக் கொண்டு போகாமல் நான் திரும்ப மாட்டேன்!'' என்று அனல் பறக்கக் கூறினான்.
ஆனால் மார்க்கண்டேயனோ, ""எமதர்மராஜனே! சிவனடியார் பெருமையை நீ உணரவில்லை. முடிவு ஏற்பட்டாலும் நான் சிவபதமடைவேனே தவிர உன்னுடன் வரமாட்டேன்!'' என்று கூறி ஆலயத்தினுள் சென்று சிவலிங்கத்தைத் தழுவி நின்றான். யமனும் உள்ளே சென்று மார்க்கண்டேயனை அவன் அணைத்திருந்த சிவலிங்கத்தோடு தன் பாசக்கயிற்றை வீசி இழுத்தான். உடனே சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு, ""மார்க்கண்டேயா! நீ அஞ்சாதே..!'' என்று கூறி தன் இடது பாதத்தைத் தூக்கி எமதர்மராஜனை உதைக்க அவன் தன் பரிவாரங்களுடன் உயிர் துறந்தான்.
சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அந்தமிலா ஆயுளை வழங்கி மறைந்தார். மார்க்கண்டேயர் மகிழ்வுடன் இல்லம் ஏகி தன் பெற்றோரிடம் நடந்த விஷயங்களைக் கூற, அவர்கள் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் மல்கினர்.
இது இப்படி இருக்க யமதர்மராஜன் உயிர் இழந்ததால் பூமியில் எவருக்கும் மரணமேயில்லாமல் போய்விட்டது! அதனால் மக்கள் பெருக்கம் அதிகமாகி பூமி அந்த பாரத்தால் நிலை தடுமாரியது. இதனைக்கண்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்ட, அவர் யமனை உயிர்ப்பித்து அவன் தொழிலைத் தொடருமாறு பணித்தார்!
இந்த நிகழ்ச்சியைத்தான் திருப்பரங்குன்றம் திருப்புகழ் ""கறுக்கு மஞ்சன விழியிணை அயல் கொடு'' பாடலில் ""சினத்தொடுஞ் சமனுதை பட நிறுவிய'' என்ற அடிகளில் அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.