சிவபெருமான் வளையல் விற்ற வரலாறு!

முன்னொரு காலத்தில் தாருகா வனத்து முனிவர்களது செருக்கை அடக்குவதற்கு சிவபெருமான் பிக்ஷாடனராக அந்த முனிவர்களது
சிவபெருமான் வளையல் விற்ற வரலாறு!
Updated on
2 min read

முன்னொரு காலத்தில் தாருகா வனத்து முனிவர்களது செருக்கை அடக்குவதற்கு சிவபெருமான் பிக்ஷாடனராக அந்த முனிவர்களது இல்லங்களுக்கு சென்று பிட்சை ஏற்றபோது, அவர்களது மனைவிமார்கள் சிவனின் அளப்பரிய அழகைக் கண்டு தம் நிலை குலைந்து தம் வசம் இழந்தனர். அவரைக் கண்களால் பருகியபடி அன்னமிட்டனர். அன்னமிடும்போது தம் கைவளையல்களையும் கழற்றி அவர் கையில் போட்டனர்! எல்லாம் நீண்ட நேரம் அவருடன் பேசிக் களிப்பதற்குத்தான்! இப்படி ஒவ்வொருத்தியும் அவருடன் விளையாட்டாகப் பேசிக் களித்திருந்தபோது நேரம் அதிகமாக ஆகிவிட்டதால் அவரவர் வளையல்களை மீண்டும் போட்டு விடுமாறு கண்களில் காதல் பொங்க சிவனை வேண்டினார்கள். சிவனும் தனக்கு காலதாமதமாகிவிட்டதால் மறுநாள் வந்து வளையல்களை போடுவதாகச் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

வீடு திரும்பிய முனிவர்கள் தம் மனைவிமார்களின் நிலை கண்டு சந்தேகித்துத் தன் ஞான திருஷ்டியால் இப்படி மாறுவேடத்தில் வந்து தம் மனைவியரை மயக்கியவர் சிவனே என்று அறிந்து அபிசார வேள்வி ஒன்றைத் துவக்கி சிவனை அழிக்க முயன்று தோற்றக்கதையை முன்பே பார்த்திருக்கிறோம். முனிவர்கள் அபிசார வேள்வி துவக்கியபோது தத்தம் மனைவிமார்களுக்கும் சாபமிட்டனர்.

""நீவிர் மதுரையில் தூய்மைமிக்க வணிகர் குலத்தில் பிறந்து சோமசுந்தரக் கடவுள் வந்து உம் கைகளைத் தீண்டும்போது இச்சாபம் விமோசனம் பெறும்!'' என்பதே அந்த சாபம்! அதன்படி அம்மடந்தையர் அனைவரும் மதுரையில் சிறந்த வணிகக் குலத்தில் பிறந்து மட்டற்ற எழிலும் ஒழுக்கமும் கொண்டு வளர்ந்து மங்கைப் பருவமெய்தி ஜொலித்தார்கள். அவ்வணிகர்களுக்கும் வேறு ஆண் சந்ததி ஏதும் தோன்றாததால் தம் புதல்வியரை அருமையாகப் போற்றி வளர்த்தார்கள்.

மதுரையை குலபூஷண பாண்டியன் சிறப்புற ஆண்டுவந்த காலத்தில் இந்நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகிறது. சோமசுந்தரக் கடவுள் தம் சடையில் விளங்கும் கங்கை, பாதிபாகத்தில் விளங்கும் பெண்வடிவம், மான், மழு, நெற்றிக்கண், புலித்தோல், நாகம் இவை எதுவும் புலப்படாதபடி ஒளித்து, வளையல் விற்கும் வணிகராய் வேடம் பூண்டு மதுரை நகர் வீதிகளில் வலம் வந்தார். முற்பிறவியில் ரிஷிபத்தினிகள் அணிந்திருந்த வளையல்களையே அவரவர்க்குத் திருப்பி இடுவோம் என்ற நோக்கோடு பட்டுநூல் கொண்டு கோர்த்துத் தோளில் பல்வேறு வகைப்பட்ட வளையல்கள் விளங்க, ""வளையல் வாங்கலியோ வளையல்!'' என்று இனிமையாகக் கூவியபடி வணிகத் தெருவினுள் நுழைந்தார்.

மன்மதனைப் பழிக்கும் உருவுடன் விளங்கிய அந்த வளையல் வியாபாரியைக் கண்ட வணிக குல மங்கையர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அவரைச் சுற்றி மொய்த்தனர். "" எனக்கு முதலில் போட்டு விடும்'' ""எனக்குத்தான் முதலில்'' என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரியின் வளையல் வளையங்களை இழுத்தனர்.

வளையல் வியாபாரியின் உருவிலிருந்த சோமசுந்தரக் கடவுள் அம்மங்கையரின் கரங்களைப் பிடித்து வளையல் இடுபவரைப் போல பிசைந்தும் வருடியும் அவர்களது உள்ளங்களைக் கவர்ந்தார். அவர் தன்னை மீண்டும் மீண்டும் தீண்டவேண்டும் என்ற அவாவில் ஒவ்வொருத்தியும் செய்த சாகசங்கள் அளவிட முடியாதவை. ஒருத்தி, ""நீங்கள் இட்ட வளையல்கள் உடைந்து விட்டன, வேறு போட்டு விடும்'' என்பாள். இன்னொருத்தி ""இவ்வளவு சிறிய வளையல்களை அழுத்தி போட்டு விட்டீர்களே... கை வலிக்கிறது. இதை எடுத்துவிட்டு வேறு வளையல் போட்டுவிடும்'' என்பாள். மற்றொருத்தி "" இவ்வளவு பெரிய வளையல்கள் வேண்டாம். வேறு போட்டு விடும்'' என்று அவர் முன், கையை நீட்டுவாள். இப்படி அந்த வணிக குல மங்கையர் பெருமானுடன் வளையல் இட்டுக் கொள்ளும் சாக்கில் வார்த்தையாடி மகிழ்ந்தனர்.

நேரமோ கடந்து விட்டது. எல்லா மங்கையருக்கும் அவரவர் விரும்பிய வண்ணம் வளையலும் இட்டாகி விட்டது. பெருமானிடம், ""வளையல்களுக்கு என்ன விலை சொல்லும் தந்து விடுகிறோம்'' என்றனர். பெருமானோ ""நான் நாளை வந்து வாங்கிக் கொள்கிறேன். இன்று மிகவும் நேரம் கடந்து விட்டது'' என்று கூறிக் கிளம்பி விட்டார். என்ன ஆச்சரியம்! மறுநாள் சோமசுந்தரக் கடவுளின் கரம் பட்ட மங்கையர் கருவுற்றிருப்பதை உணர்ந்தனர். அதற்குக் காரணம் தெரியாது திகைத்தனர்!

அது கண்ட வணிகர்கள் தங்கள் புதல்வியர் திருமணம் ஆகாமலேயே கருக் கொண்டிருப்பதைச் சகிக்காமல், ""எமது குலம் இத்துடன் முடிந்தது. இனி நாங்கள் வாழ்வதில் அர்த்தமில்லை'' என்று வருந்தி தீ மூட்டி அதில் விழுந்து இறக்க முயற்சித்தனர். அப்போது விண்ணிலிருந்து பார்வதி பரமேஸ்வரர் ஆக அவர்களுக்குக் காட்சி தந்து, ""வணிகர்களே...! நீங்கள் வருந்த வேண்டாம். உங்கள் புதல்வியர் முற்பிறப்பில் ரிஷிகளின் மனைவிமார்களாக இருந்தவர்கள். ஒரு சாபத்தால் உங்களுக்கு மகளாகப் பிறந்தனர். அப்போது கழன்ற வளையல்களை யாமே வந்து மீண்டும் அவர்களுக்கு அணிவித்தோம். எம் ஸ்பரிசத்தாலும் உமது ஒப்பற்ற தவத்தாலுமே அவர்கள் கருவுற்றனர். உமது குலம் அப்பழுக்கற்றது. இப்பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சத்புத்திரர்களாக விளங்கி உமது குலத்தை மேலும் சிறக்கச் செய்வார்கள்!'' என்று அருளினார்.

வணிகர்கள் "தங்கள் குலம் செய்த பாக்கியமே பாக்கியம்' என்று மகிழ்ந்தனர். இந்த வரலாற்றைத்தான் "கட்டி முண்டகர பாலி யங்கிதனை' என்று தொடங்கும் சிதம்பரம் திருப்புகழ் பாடலில் ""செட்டி யென்று சிவகாமி தன்பதியில் கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட'' என்ற வரிகளில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com