குர்ஆனை ஓதி ஒழுகு!

குர்ஆன் ஒரு வேதம். வேதங்கள் பொழுது போக்கிற்காக அழுது கொண்டே படிப்பதற்கல்ல. வேதங்களை ஓத வேண்டும்
Updated on
2 min read

குர்ஆன் ஒரு வேதம். வேதங்கள் பொழுது போக்கிற்காக அழுது கொண்டே படிப்பதற்கல்ல. வேதங்களை ஓத வேண்டும். வேதங்களை ஓதுவதற்கு ஒழுங்குண்டு. அல்குர்ஆன் இறைமறை. இறைமறையை ஒழுங்காக ஓதி உணர்ந்து ஒழுகினால் பழுதிலாது வழுவிலாது வாழலாம். வானுறை தெய்வத்தின் மெய்யடியானாக மேதினியில் மேன்மையோடு வாழலாம்.

குர்ஆனைக் குறையின்றி நிறைவாய் ஓதும் முறையை குர்ஆனின் 73 -4 ஆவது வசனம், ""இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள்'' என்று போதிக்கிறது.

"ஜிப்ரயீல் மூலம் நாம் உங்களுக்கு ஓதி காண்பிப்பதுபோல் நீங்களும் ஓத வேண்டும்'' என்று 75 -18 ஆவது வசனத்தில் அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துவதை அணுவளவும் பிசகாது பேணுதலோடு நாமும் ஓதவேண்டும். குர்ஆனை ஓத தெரிந்தவரிடம் ஓழுங்காய் ஓத கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஓதுவதை உற்றறிந்து அவ்வாறே ஓதி பயிற்சி பெற வேண்டும்.

"இனிய குரலில் கவனமாய் ஓதும் குர்ஆனை இறைவனும் வேறெதெனினும் விரும்பி செவியுறுகிறான்.'' அறிவிப்பவர் - அபூஹீரைரா (ரலி); நூல் -புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸஈ.

இனிமையாக ஓதும் இறைமறை குர்ஆனின் வசனங்கள் இயல்பிலேயே முரட்டு குணமுடைய மூர்க்கர்களையும் ஈர்த்து இஸ்லாத்தில் இணைய வைத்த நிகழ்ச்சி.

முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொன்று அபூஜஹல் அறிவித்த நூறு செந்நிற ஓட்டகங்களைப் பரிசாக பெற உருவிய வாளுடன் துருதுருவென்று துடித்து ஓடிய 33 வயது இளங்காளை உமர் (ரலி) அவரின் தங்கை பாத்திமா (ரலி) அவர்கள் இனிமையாக ஓதிய கனிவான குர்ஆனின் வசனத்தை மீண்டும் ஓதி உணர்ந்து உத்தம நபி(ஸல்) அவர்களின் சத்திய சன்மார்க்கத்தை பெற்றார்; அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அணுக்கத் தோழரானார்; நுணுக்கமான போர்களிலும் கணக்கில்லா வெற்றிகளை ஈட்டினார்; வணக்க வழிபாடுகளில் வாகை சூடினார்; தனக்கென வாழாது பிறர்க்குதவும் பெருந்தகையாளராய் பேராட்சி புரிந்தார். இத்தகு சிறப்புற்ற உமர் (ரலி) அவர்கள் அறிவித்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குர்ஆனால் பெறும் சிறப்பு குறித்த செய்தியை முஸ்லிம் நூல் குறிப்பிடுகிறது. அல்லாஹ் குர்ஆன் மூலம் சிலரை உயர்வுற செய்கிறான்;சிலரை தாழ்த்துகிறான்.

"குர்ஆனைப் பிறர் கேட்க இரைந்து ஓதுபவர் வெளியில் தெரிய தர்மம் செய்தவர் போன்றவர்; மெதுவாக ஓதுபவர் மறைவாக தர்மம் செய்தவர் போன்றவர்'' அறிவிப்பவர் - இப்னு ஆமிர் (ரலி). நூல் - ஸீனன். குர்ஆனை மெல்லிய அல்லது உரத்த குரலில் விருப்பம் போல் ஓதுவது பொருத்தமானதே.

"குர்ஆனை ஓதி அதன் ஏவல்களை ஏற்று நடந்து விலக்கலைத் தவிர்த்திடுபவரை அல்லாஹ் சொர்க்கம் புக வைப்பான்'' அறிவிப்பவர் - அலி(ரலி) நூல்- திர்மிதீ. ""குர்ஆனை ஏற்று நடப்பவர் சொர்க்கம் புகும்பொழுது குர்ஆனை வெறுமனே படித்து விலக்கலை விலக்காதவர் விசுவாசியாக மாட்டார்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழியை ஜீஹைப் (ரலி) அவர்கள் அறிவிப்பது திர்மிதீயில் காணப்படுகிறது. குர்ஆனில் தவிர்க்கப்பட்டதைத் தக்கதென எண்ணுபவர் குர்ஆனை விசுவாசிக்காதவர்.

தலகான் என்ற ஊரில் தமீம் கிளையில் தோன்றிய புலைல் இப்னு ரியால் தொழுவார், நோன்பு நோற்பார். அவர் கொள்ளை கூட்ட தலைவர். ஒருமுறை இவர் குர்ஆனின் 57- 16 ஆவது வசனம் "விசுவாசிகளே! உங்களின் இதயங்கள் அல்லாஹ்வை நினைத்து அவன் இறக்கிய வேதத்தின் சத்தியங்களைக் கேட்டு அஞ்சும் நேரம் வரவில்லையா?'' என்ற எழில் மறை குர்ஆனின் 57- 16 ஆவது வசனம் ஓதப்படுவதைக் கேட்டு திருந்தினார்; திருட்டு தொழிலை விட்டார்; இறை நேச செல்வரானார்.

குர்ஆனை ஏற்று நடப்பவரால் அவரின் பெற்றோர்களுக்கும் பெரும்பயன் கிட்டுகிறது. ""குர்ஆன் கூறும் வழியில் வாழ்பவரின் பெற்றோருக்கு மறுமையில் சூட்டப்படும் மணிமகுடம் பிறை நிலவை மிகைக்கும் பேரொளியும் அழகும் உடையதாயிருக்கும்.'' அறிவிப்பவர் - ஸஹ்னுப்னு முஆத் (ரலி) நூல் - அபூதாவூத்.

குர்ஆன் முறையாக ஓதி நெறியாக நடப்பவருக்கு மறுமையில் அவருக்குச் சாதகமாக பரிந்துரைக்கும்; மாறாக நடப்பவருக்குப் பாதகமாக சாட்சி கூறும்'' அறிவிப்பவர் -அபூஉமாமா (ரலி) நூல் -முஸ்லிம், மிஷ்காத். இப் பரிந்துரையால் பெறும்பலனை அலி(ரலி) அவர்கள் அறிவிப்பது தப்ரானி நூலில் குறிப்பிடப்படுகிறது. ""குர்ஆனை ஓதி நெஞ்சில் பதித்தவர்கள் நிழலில்லா மறுமை நாளில் அர்ஷின் நிழலில் நிற்பார்கள்.''

நாமும் குர்ஆனைத் திருத்தமாய் ஓதி பொருத்தமாய் வருத்தமின்றி வளமாய் நலமாய் இம்மை மறுமை ஈருலகிலும் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com