
ராமர் அவதரித்த நவமி திதியை ராம நவமி என்றும் கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியை கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடி வருகிறோம். அவதாரப் புருஷர்கள் அவதரித்ததால் நாட்டிற்கும் உலகிற்கும் அளப்பரிய நன்மைகள் உண்டானதால் அவர்களின் அவதார தினங்களைக் கொண்டாடி வருகிறோம். நாட்டிற்குத் தீமை செய்யும் கொடியவர்கள் இறந்த தினங்கள் நன்மை தரும் நாட்கள் என்றாலும் அவர்கள் அழிந்த தினங்களை நாம் கொண்டாடுவதில்லை.
நரகாசுரன் இறந்த நாளை நாம் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுவதற்குக் காரணம் நரகாசுரனே! தான் இறக்கும்போது, தான் மறைந்த தினத்தில் ஆண்டுதோறும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றி இறைவனை வணங்கிக் கொண்டாட வேண்டும் என்று திருமாலின் அவதாரமான கண்ணபிரானிடம் வரம் கேட்டுக் கொண்டு இறந்தான். அதனால்தான் நரகாசுரன் இறந்த தினம் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
திரேதாயுகத்தில் பிரளய காலத்தில் பூமி கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. அப்பொழுது திருமால் பூமியைக் காப்பதற்காக வராகமாக அவதரித்தார். பூமியைத் தன் கொம்பினால் தாங்கி நின்றார். அப்பொழுது திருமாலுக்கும் பூமி பிராட்டிக்கும் உண்டான அன்பினால் ஒரு குழந்தை தோன்றியது. திருமால் வராக (பன்றி) உருவத்தில் இருந்தபோது பிறந்ததால் அக்குழந்தை அசுரத்தன்மையுடன் பிறந்து விட்டது.
அசுரத்தன்மையுடன் பிறந்த தன் குழந்தையை கண்டு பூமிதேவி வருந்தி அழுதாள். அந்தக் குழந்தை திருமாலையும் பூமிபிராட்டியையும் துதித்து, ""நான் என் தாயின் கையாலேயே சாக வேண்டும் என்ற வரம் கொடுங்கள்'' என்று கேட்டது.
பூமி பிராட்டி முதலில் வருந்தினாலும் ஒருவாறு மனம் தேறினாள். திருமாலும் அக்குழந்தை கேட்டுக்கொண்டபடி வரம் அளித்தார். அக்குழந்தையே பின்னாளில் நரகாசுரன் என்ற பெயருடன் வாழ்ந்தான்.
துவாபர யுகத்தில், திருமால் கிருஷ்ணராக அவதாரம் செய்து துவாரகையிலிருந்து ஆட்சி செய்து வந்தார். பூமி பிராட்டி சத்யபாமாவாக அவதாரம் செய்தாள். இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
முன்பு திருமாலுக்கும் பூமிபிராட்டிக்கும் பிறந்த குழந்தையான நரகாசுரன் ஜோதிஷபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் பல தவங்கள் செய்து பெற்ற வரங்களால் தேவர்கள் முனிவர்கள், மனிதர்கள் உள்ளிட்ட பலரையும் கொடுமை படுத்தினான். அவர்கள் கிருஷ்ணரிடம் வந்து நரகாசுரனின் கொடுமையிலிருந்து காப்பாற்றும்படி முறையிட்டனர்.
அவர்களைக் காப்பாற்றி கிருஷ்ணர் நரகாசுரனுடன் போருக்குப் புறப்பட்டார். அவர் மனைவியான வீராங்கனை சத்தியபாமா கண்ணபிரானுக்குத் தேரோட்டினாள். கண்ணபிரானுக்கும் நரகாசுரனுக்கும் கடும் போர் நடந்தது. நரகாசுரனுக்கு முன்பு கொடுத்த வரத்தினால் அவன் தன் கையால் சாகமாட்டான். பூமி பிராட்டியின் அவதாரமான சத்தியபாமாவினால்தான் சாவான் என்பது கண்ணபிரானுக்குத் தெரியும். அதனால் அவர் நரசாசுரனுடன் போர் புரிவதுபோல் பாவனை செய்து அவன் அம்புபட்டு வீழ்வதுபோல் தேர்த்தட்டில் வீழ்ந்து விட்டார். அதனால் பதற்றமடைந்த சத்யபாமா கிருஷ்ணரின் கையிலிருந்த வில்லை எடுத்து நரசாசுரன் மேல் அம்பு தொடுத்தாள். அந்த
அம்புபட்டு நரகாசுரன் சாய்ந்து விட்டான். நரகாசுரனுக்கு, தான் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வந்தது. தன் தாயாகிய பூமி பிராட்டியே சத்யபாமாவாக அவதரித்துத் தன்மேல் அம்பெய்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.
"அம்மா! என்னைப்பெற்ற தாயே'' என்று கைகூப்பி வணங்கினான். அசுரன் தன்னை, பெற்ற தாயே என்று அழைத்தது ஏன் என்று புரியாமல் திகைத்தாள் சத்யபாமா. அப்போது, தான் பிறந்ததையும் மரணத்தைப் பற்றிய தனது வரத்தையும் நினைவூட்டினான் அசுரன். பின்னர் அவன், ""தாயே தந்தையே என்னைப் போன்ற தீய சக்திகள் அழிந்தால்தான் உலகம் தீமைகள் இன்றி வாழ முடியும். அதனால் நான் இறந்த நாளை புண்ணியமான நாளாகக் கருத வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து தீப ஒளியேற்றி இறைவனை வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்'' என்று வரம் கேட்டான். அவர்களும் அவ்வாறே வரம் அளித்தனர். நரகாசுரன் இறந்தான். அவன் இறந்த நாளையே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம் என்று பாகவத புராணம் விளக்குகிறது.
பாகவதபுராணம் விளக்கும் இந்தக் கதை, படித்து பொழுதுபோக்குவதற்காக மட்டும் சுவையுடன் எழுதப்பட்டதல்ல. மனித வாழ்க்கையின் தத்துவமே இக்கதையில் அடங்கியுள்ளது.
தீபாவளியன்று நம் வீட்டில் ஏற்றி வைக்கும் தீப ஒளி வீட்டில் உள்ள புற இருளை மட்டும் போக்குவது போல் தெரியும்.
ஆனால் நம் புராணங்கள் கூறுவதை உண்மை என்று நம்பிக் கொண்டாடினால் நம் உள்ளத்தில் சத்துவ குணம் என்னும் ஒளி தோன்றி ரஜோகுணம், தமோ குணம் என்னும் இருளை நீக்கி பக்தி என்னும் ஒளி வீசச் செய்யும்.
ரஜோ குணத்தின் பிரதிநிதியான நரகாசுரனை சத்துவ குணத்தின் பிரதிநிதியான சத்தியபாமா வென்று தீமை என்னும் இருளை நீக்கி நன்மை என்னும் தீப ஒளியை ஏற்றிய நாளே தீபாவளித்திருநாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.