திருமண தடை நீக்கும் கல்யாண நரசிங்கப் பெருமாள்!

மகாவிஷ்ணுவின் ஆறு அவதாரங்கள் க்ருதயுகத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் நான்காவதாக நடைபெற்ற நரசிம்ம அவதாரம் பல்வேறு சிறப்புகள் பெற்றது.
திருமண தடை நீக்கும் கல்யாண நரசிங்கப் பெருமாள்!
Updated on
2 min read

மகாவிஷ்ணுவின் ஆறு அவதாரங்கள் க்ருதயுகத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதில் நான்காவதாக நடைபெற்ற நரசிம்ம அவதாரம் பல்வேறு சிறப்புகள் பெற்றது.பிரகலாதனை கொல்ல முயன்ற இரணியனை வதம் செய்ய பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்தார் என்பது தெரிந்ததுதான். ஆனால் நரசிம்ம அவதாரத்தின்போது, பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் ஸ்ரீ ராமகிரி. திண்டுக்கல் மாவட்டம், குஜிலிம்பாறை அருகே உள்ளது இத்திருத்தலம்.

ஆந்திர மாநிலம், குத்திபல்லாரி என்ற இடத்தில் நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரணியனை வதம் செய்தார். இதனால் கைகளில் ஏற்பட்ட ரத்த கறைகளை, அஹோபிலத்தில் சுத்தம் செய்தார். பின்னர் மிகுந்த கோபத்துடன் காட்சியளித்த நரசிம்மர் தெற்குநோக்கி பயணித்து, திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்துள்ள தீண்டாக்கல் வந்தபோது, சிவபெருமானும் தேவர்களும் வழிமறித்து கோபம் தணிக்க முயற்சித்தனர். அதில் சாந்தமடையாத நரசிம்மர், தென்கிழக்கு நோக்கிச் சென்று தேவர்மலையை (கரூர் மாவட்டம்) அடைந்தபோது பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று கோபம் தணிந்தார். பின்னர் தேவர்மலை தீர்த்தத்தில், அங்கங்களை சுத்தம் செய்து சாந்தமடைந்தார் என்றாலும் இத்தலத்தில் சுவாமி உக்கிரநரசிம்மராக கோயில் கொண்டுள்ளார். சாந்தமடைந்த நரசிம்மர், திண்டுக்கல் மாவட்டம் பழைய அய்யலூருக்குச் சென்று கருணாகிரி நரசிங்கப் பெருமாளாக எழுந்தருளியுள்ளார். கோபம் தணிந்த பெருமாளுக்கு, ஸ்ரீதேவி - பூதேவியுடன் ஸ்ரீ ராமகிரி தலத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதன் பின்னர், க்ருதயுகம் முழுமையடைந்தது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், 72 பாளையங்களாக பிரித்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்துள்ளனர். அப்போது ஸ்ரீ ராமகிரி அமைந்துள்ள பகுதியை, சாமநாயக்கர்கள் சிற்றரசார்களாக ஆட்சி புரிந்து வந்துள்ளனர். லண்டகதிர் அழகு சாமய நாயக்கர் என்ற மன்னன், ராமகிரி காட்டிற்கு வேட்டையாட சென்றபோது, நாமம் போட்ட கீரி ஒன்றை வேட்டை நாய்கள் துரத்திச் சென்றுள்ளன. தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்குச் சென்றதும் கீரி, நாய்களை எதிர்த்துள்ளது. மேலும் அந்த பகுதியில் ராமணாம் பிள்ளையின் (மைனா) அசிரிரீ ஒலித்துள்ளது. இதை கவனித்த நாயக்க மன்னன், அந்த இடத்தில் தெய்வ கடாட்சம் இருப்பதை உணர்ந்துள்ளார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய இறைவன், தனக்கு ஆலயம் எழுப்பும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பின் ஆட்சிக்கு வந்த அவரது மகன் குமர அழகு சாமய நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் முடிவுற்றதாக ஓலைச்சுவடிகள் மூலம் அறியப்படுகிறது.

கோயில் அமைந்துள்ள இடத்திற்கு தென்கிழக்கில் சக்கரகிரி மலை அமைந்துள்ளதாலும், நாமம்போட்ட கீரி, ராமணாம்பிள்ளை தோன்றி மறைந்ததாலும், இந்த பகுதி ராமகிரி என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. திருக்கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய் சுவாமி ஸ்ரீ கல்யாண நரசிங்கப்பெருமாள் அருள்பாலித்து வருகிறார். அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமிக்கு இட வலமாக, இரு தேவியரும் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றனர். திருக்கல்யாண கோலத்தில் அமர்ந்துள்ள நரசிம்மரை வழிபடுவதன் மூலம், திருமண தடை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் ஸ்ரீ கமலவல்லி தாயார், விஷ்ணு துர்க்கை ஆகியோருக்கும் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு எதிர் திசையில், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் தன்னாட்சி பெற்றவர்களாக அருள்பாலித்து வருகின்றனர். வேதநாயகனாக காட்சியளிக்கும் கருடாழ்வாரை, பிரதி வெள்ளிக்கிழமை கொழுக்கட்டை மற்றும் தயிர்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால், நாக தோஷம் மற்றும் கருட தோஷம் விலகும் என்பது ஐதீகம். அதேபோல் தென்திசை நோக்கி வாலில் மணி கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சுவாமியை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் சகல காரியங்களிலும் வெற்றி, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்திருக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி திருவிழா (பதினோரு நாள்கள்) மற்றும் நவராத்திரிவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தின்போது தேரோட்டம் நடைபெறுகிறது.

சிதிலமடைந்து காணப்பட்ட, ராமகிரி அருள்மிகு கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் திருப்பணிகள் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இத்திருக்கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக திருப்பணிகள் இன்னும் முடிவு பெறவில்லை. பக்தர்கள் இந்தத் திருப்பணியில் பங்குபெற்று ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாளின் அருளைப் பெறலாம்.

திண்டுக்கல்லிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில், குஜிலிம்பாறை செல்லும் சாலையில் உள்ள ராமகிரியில் இறங்கி சுமார் 2 கி.மீ தொலைவு சென்றால், அருள்மிகு கல்யாண நரசிங்கப்பெருமாள் ஆலயத்தை அடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com