

லைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்' என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் "மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை' என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார்.
சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணவிரும்பத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு ஷேத்திரத்தின் பெருமையை எடுத்துக்கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார் சிவபெருமான். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது! அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது. அதேநேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு சிவனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் சிவன்.
இதனிடையே நிசும்பன், சும்பன் என்று இரண்டு அரக்கர்கள். இவர்களிடையே தேவர்களுக்கு அதிகம் துன்பம் விளைவிப்பர் யார் என்று ஒரு போட்டி! இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சும் விதத்தில் தேவர்களைப் போட்டு புரட்டி எடுத்து விட்டனர். அவர்கள் உடனே விழுந்தடித்துக் கொண்டு ஓடி உமாதேவியிடம் சரணடைந்தார்கள். ""உங்களைத் துன்புறுத்தும் அசுரர்களை ஒழிப்பேன். கவலை வேண்டாம்'' என்று தேவர்களுக்கு தைரியம் தந்து அந்த அசுரர்கள் வசிக்கும் மலை அடிவாரத்தில் தவவேடத்தில் வந்தமர்ந்தார். அப்போது சண்டன், முண்டன் என்ற இரு அரக்கர்கள், உமாதேவியின் தவக்கோலத்தையும் மீறி பிரகாசித்த அழகில் மயங்கி துர் எண்ணத்துடன் தேவியை அணுகினர். தேவி சிறிது சினம் காட்ட அவள் தோளிலிருந்து ஒரு சக்தியும் அனேகப் படைகளும் தோன்றி சண்டன் முண்டனை துவம்சம் செய்தனர். ""சண்டனையும் முண்டனையும் கொன்றதால் உனக்கு இன்று முதல் "சாமுண்டி' என்று பெயர். உலகோர் உன்னை வணங்குவார்கள்'' என்று தன் தோளிலிருந்து தோன்றிய சக்தி தேவதைக்கு அருள்பாலித்தாள் உமையம்மை. சண்டன் முண்டனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு வெகுண்டு தேவியுடன் நேருக்கு நேராய்ப் போராட ஏராளமான அசுர சேனைகளுடன் நிசும்பனும் சும்பனும் வந்தனர். ஆனால் தேவியின் உடலில் இருந்து வெளிக்கிளம்பிய சப்த மாதர்களும் சிவகணங்களும் அந்த அசுரர்களையும் அவர்களது சேனைகளையும் தவிடு பொடியாக்கினர்!
நிசும்ப, சும்பர்களுக்கு ஒரு தங்கை! குரோதி என்பது அவள் பெயர். அவளுக்கு ரத்தபீஜன் என்று ஒரு பிள்ளை. மகா துஷ்டன். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தான். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால் அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்! அதன்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் அசுரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்!
ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் அசுரர்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர்! இந்த அதிசயத்தை தேவியிடம் ஓடிச்சென்று சப்தமாதர் சொல்ல, அம்பிகை வெகுண்டு எழுந்தாள். உடனே தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய காளியைத் தோற்றுவித்து ""ஏ காளி! நான் இப்போது நேரில் சென்று அந்த ரத்தபீஜனை வெட்டி சாய்க்கப் போகிறேன். அப்போது அவன் உடலிலிருந்து வெளிப்படும் ரத்தம் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளை கபாலம் போல் குவித்து அதில் ஏந்திக் குடித்து
விடு!' என்று ஆணையிட்டுவிட்டுப் போர்க்களம் சென்ற அம்பிகை ரத்தபீஜனை வெட்டுகிறாள். காளி தன் எண்ணற்ற கரங்களில் அவன் ரத்தத்தை ஏந்திப் பருக அவன் மாள்கிறான். தேவர்கள் துன்பம் தொலைந்தது. காளிக்குப் பல வரங்களை அளித்து அவளுக்கு சண்டி என்னும் பெயரிட்டு அழைத்து தேவி மறைந்தாள்.
காளிக்கு இப்போது ஏக உற்சாகம். உமையிடம் பெற்ற வரங்களாலும் ஏராளமாய் அசுரன் ரத்தத்தைக் குடித்ததாலும் அவளுக்குத் தலைகால் புரியவில்லை. மோகினி, இடாகினி என்று பல பூதப் பிள்ளைகள் புடை சூழ காடு காடுகளாய் சுற்றி இறுதியில் திருவாலங்காட்டுக்கு அருகில் வந்து தங்கி அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
காளியின் இந்த துர்ச்செயல்கள் நாரதர் மூலம் திருமாலுக்கும் திருமால் மூலம் சிவனுக்கும் செல்ல, அவர் காளியின் செருக்கை அடக்கத் திருவாலங்காட்டுக்கு வருகிறார். அவரது போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சிய காளி போரைத் தவிர்த்து விட்டு சிவனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள்!
காளி நடனத்தில் மகா நிபுணி. அந்தத் தைரியத்தில் சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். நடனம் நடந்தது. இருவரும் மாற்றி மாற்றி தத்தம் திறமையை காட்டினர். சிவன் எப்படி நடனமாடினாலும் காளி அதற்கு பதிலடி கொடுப்பதுபோல் ஆடினாள். அப்பொழுதுதான் சிவபெருமான், திருமால், பிரமன் முதலியோர் வாத்தியம் வாசிக்க தனது பிரசித்திப் பெற்ற ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்! தன் காதில் இருந்த மணிக்குழைகளில் ஒன்றைக் கீழே வீழ்த்திப்பின் அதனைத் தன் இடக்கால் பெருவிரலால் எடுத்துக் காலை காதுவரை உயர்த்திக் காதில் பொருத்தினார். இப்படிக் காலை அவ்வளவு தூரம் உயர்த்தி ஆட முடியாத தன் இயலாமையை எண்ணி நாணத்தால் குனிகிறாள் காளி. சுனந்த முனிவரும் கார்கோடகனும் இந்த ஊர்த்துவ தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு சிவனை வணங்கினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.