குழந்தைப் பாக்கியம் அருளும் சிவசுப்பிரமணிய சுவாமி!

தொண்டை நாட்டின் சிறப்பு மிக்க காஞ்சி மாநகருக்கு வடமேற்கில் உள்ள மேலபுலம்புதூரில் வேண்டுவோருக்கு வேண்டுவன
Updated on
1 min read

தொண்டை நாட்டின் சிறப்பு மிக்க காஞ்சி மாநகருக்கு வடமேற்கில் உள்ள மேலபுலம்புதூரில் வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வள்ளலாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திருத்தலம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது இத்திருக்கோயில். முதலில் கருவறை சார்ந்த சிறுமண்டபம் அமைத்து வழிபட்டு வந்தனர். அதன்பிறகு, கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் செங்குந்தர் மரபினர்களால் பதினாறு கால் மண்டபம், முகப்பு மண்டபம் முதலானவை அமைக்கப்பட்டு இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

குழந்தைப்பேறு வேண்டி பிரார்த்திப்பவர்கள், கந்தசஷ்டி விரதமிருந்து, சூரசம்ஹாரத்தன்று விடியற்காலை திருக்கோயில் பிரகாரத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிரதிமாதம் சஷ்டிதோறும் விரதம் மேற்கொண்டு ஆலய முருகனை வழிபட்டு வந்தால், திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

ஸ்ரீ முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தன்று சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்ததும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தேறும். அச்சமயம், சிறந்த நாதஸ்வர கலைஞர்களின் இசையுடன் ஊஞ்சல் சேவை நடைபெறும். பின்னர் சுமார் 1000 அன்பர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது. விருந்து முடிந்த பின்னர் பக்தர்கள் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவத்திற்கு மொய் வைக்கும் வழக்கமும் இருக்கின்றது. கடந்த 12 ஆண்டுகளாக இந்நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

மேலும் ஆலயத்தில், விநாயகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், சேனாதிபதி ஈசனார், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, வீரபாகு, பிரம்மன், நவவீரர்கள், சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் ஆகிய தெய்வத்திருமேனிகள் பாங்குற அமைந்திருப்பதுடன் நவகிரகச் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் மாத கிருத்திகை, சஷ்டி தினங்களில் காலை, மாலை இருவேளையும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. கார்த்திகை தீபவிழா, மார்கழி திருவாதிரை, பஞ்சமூர்த்திகள் உற்சவம், தைப்பூசம், மாசிமகா உற்சவம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி போன்ற விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

சிறப்பு மிக்க இத்திருக்கோயில், 1964 ஆம் ஆண்டு முதல் இந்து

சமய அறநிலையத்துறையின்கீழ் இயங்கி வருகின்றது. வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒச்சேரி எனும் இடத்தில் இறங்கி அங்கிருந்து 5 கி.மீ. தூரப் பயணத்தில் மேலபுலம்புதூர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை சென்றடையலாம்.

நீங்களும் ஒருமுறை இவ்வாலயத்திற்கு சென்று முருகனின் அருளைப் பெற்றுவாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com