புனித பிரான்சிஸ்கு சவேரியார்

புனித சவேரியார், 1506-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஸ்பெயின் நாட்டில் சேவியர் என்ற கோட்டையில் பிரபு குலத்தில் பிறந்தார்.
புனித பிரான்சிஸ்கு சவேரியார்

புனித சவேரியார், 1506-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஸ்பெயின் நாட்டில் சேவியர் என்ற கோட்டையில் பிரபு குலத்தில் பிறந்தார். செல்வக் குடும்பத்தில் பிறந்ததன் பயனாக நல்ல கல்வி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நல்ல முறையில் கல்வி கற்றுப் பட்டங்கள் பல பெற்றார்.

பாரீஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த புனித பார்பரா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, புனித இஞ்ஞாசியார் மூலமாக ஆண்டவர் இயேசு அவரை ஆட்கொண்டார்.

அதன் விளைவாக, சவேரியார் தனது பட்டம், பதவி, புகழ், செல்வம், குடும்பம் அனைத்தையும் துறந்துவிட்டு வெகு தூரம் பயணப்பட்டு, இந்திய நாட்டில் பணிபுரிய பேராவலுடன் வந்தார்.

கோவாவிலிருந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தொண்டு செய்தார். பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து, குமரி

முனைக் கடலோரப் பகுதிகளிலும், அருகிலிருந்த உள்நாட்டு ஊர்களிலும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து கிறிஸ்தவ விசுவாசத்தை மக்களுக்கு வழங்கினார்.

ஆன்மீகப் பணியே புனித சவேரியாரின் முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், அவர் சமூக முன்னேற்றப் பணிகளிலும் ஆர்வத்தோடு உழைத்தார்.

சமூகப் பணி செய்த காலத்தில் அவர், சாதி, மத, இன வேறுபாடு காட்டவில்லை. ஊர்கள்தோறும் பலவிதமான தீமைகளைச் செய்து மக்களைக் கொடுமைப்படுத்திய ஊர்த் தலைவர்களையும், போர்த்துக்கீசிய வீரர்களையும், கோவாவிலிருந்த போர்த்துக்கீசிய ஆளுநரின் அனுமதியோடு வன்மையாகக் கண்டித்தார். அவர்களிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தினார். இதனால் மக்களுக்கு அவர்பால் பேரன்பு உண்டாயிற்று.

கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுக்காக ஊர்கள் தோறும் சிறிய சிறிய குடிசைக் கோவில்களை அமைத்தார்.

குழந்தைகள் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொள்வதற்காகத் தமிழ்நாட்டில் முறையான பள்ளிக்கூடங்களையும் உருவாக்கினார், புனித சவேரியார்.

தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள மணப்பாடு என்ற ஊரின் கடற்கரைப் பகுதியில் பாறையை ஒட்டியிருந்த குகை ஒன்றைத் தனது உறைவிடமாகத் தேர்ந்து கொண்டு, அங்கு இரவும் பகலும் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்துகொண்டும் தியானம் செய்துகொண்டும் வாழ்ந்து வந்தார். மக்களுக்குச் சேவை செய்வதுடன் நிற்காமல் அவர்களுக்காக இறைவனிடம் அல்லும் பகலும்,செபித்தார், அவர் உண்டதும், உறங்கியதும் அந்தக் குகைக்குள்தான்.

பெரும் செல்வந்தரின் மகனான அவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார். ஆண்டவரின் கொடையால் அற்புதம் செய்யும் ஆற்றலைப் பெற்றவர் சவேரியார். தெய்வ பலத்தைப் பெற்ற, புனித சவேரியாரின் பூதவுடலும் அழியாப் பலம் பெற்று இன்றும் கோவாவில் பாம் ஜீசஸ் ஆலயத்தில் உள்ளது.

மக்களுக்காக அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்காகத் தன்னையே தியாகம் செய்து அரும் பணிகளாற்றிய இறவாப் புகழ் பெற்ற, புனித பிரான்சிஸ்கு சவேரியாரை என்றும் மறவாமல் போற்றி மகிழுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com