சகலமும் அருளும் சகலகலாவல்லி!

சரஸ்வதி தேவியானவள் ஆதிபராசக்தியின் அம்சம். ஒளி மிகுந்தவள். சப்த மாதாக்களில் ஒருவள்!
சகலமும் அருளும் சகலகலாவல்லி!

சரஸ்வதி தேவியானவள் ஆதிபராசக்தியின் அம்சம். ஒளி மிகுந்தவள். சப்த மாதாக்களில் ஒருவள்! இவளே நதியாகவும் வழிபடப்படுகிறாள். புராணங்களில் சரஸ்வதியின் பிறப்பு பலவிதமாகக் கூறப்படுகிறது. பிரம்ம வைவர்த்வம் இவளை ஸ்ரீ கிருஷ்ணன் முகத்திலிருந்து தோன்றியவள் என்கிறது. பிரம்மாவுக்கு வலது புறமும், சப்த மாதர்களில் ஆறாவது இடத்திலும், கணபதி ஆலயங்களில் கணபதிக்கு வலப்புறமும் இவளுக்கு ஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னை பராசக்தி இவளை நாவிலிருந்து சிருஷ்டித்ததாகப் பிரம்ம புராணம் கூறுகிறது. விஷ்ணு ஆலயங்களிலும் இவளுக்கு சந்நிதி உண்டு. சிவபெருமானின் சந்தியா தாண்டவத்தில் இவள் வீணை வாசிக்கிறாள். வேதங்களில் புகழப்படும் பல தெய்வங்களில் முக்கியமான தெய்வம் சரஸ்வதி தேவியாவாள். அவள் யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்கு அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தரும் தேவதையாகவும் புகழப் படுகிறாள். அறிவுப் பிரவாகம் ஐந்து நதிகளாக சரஸ்வதி தேவியை அடைந்தன. அவள் பூமியில் நதிகளாக ஓடுகிறாள் என்றும் வேதங்கள் கூறுகின்றன.

கல்விக்கு அதிபதி சரஸ்வதி! அனைத்து கலைகளுக்கும் தலைவி! "வித்யா' என்றாலே ஆத்மாவை மெய்ஞானத்துக்கு இழுத்துச் செல்லும் வழி என்று பொருள். அவள் தருகின்ற ஞானம் பிரம்ம ஞானமாகும். சரஸ்வதியின் இரு கைகளிலும் வேதப் புத்தகம், ஸ்படிக மணி மாலை இருக்கின்றன. கூடவே வீணையும் இருக்கிறது. வெள்ளைத் தாமரையில் அமர்ந்து வெண்ணிற உடையும் அணிந்துள்ளாள். கல்வி கற்பதற்குத் தூய்மையான மனம் வேண்டும் என்பதைத்தான் வெள்ளைத் தாமரையும் வெள்ளை உடையும் குறிக்கின்றன. சரஸ்வதியின் நான்கு கைகளும் மனிதனுடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறிக்கிறது.சரஸ்வதியைப் பூஜிக்கிற பக்தன் தேடுவது ஆத்ம ஞானம்! தன்னடக்கம், ஆழ்ந்த கல்வி, சிந்திக்கும் ஆற்றல், தியானம் ஆகியவை இருந்தால், "தான்' என்ற அகங்காரம் அழிந்துவிடுகிறது. ஆத்ம ஞானம் பிறக்கிறது. அதுவே மோட்சம் என்று கூறப்படுகிறது.

சரஸ்வதி அறிவை உயிர்களுக்கு அருளும் தாயாக இருப்பதால் அவள் ஞான சக்தி, ஞானேஸ்வரி, ஞானாம்பிகை என்று பலவாறு அழைக்கப்படுகிறாள். சரஸ்வதி தேவி, உலக உயிர்களின் வாழ்விற்குத் தேவையான அடிப்படை ஞானத்தை அருள்கிறாள். இவள் கல்விக் கடவுளாகப் போற்றப்படுகிறாள். வாகீஸ்வரி, வித்யா, சாரதா, நீல சரஸ்வதி போன்ற பல வடிவங்களைத் தாங்கி அருள் புரிகின்றாள். பராசக்தியின் அருளால் தோன்றியவள்! சரஸ்வதி சிவனருள் பெறவும், தடையில்லா ஞானம் பெறவும் பல தலங்களில் சிவபூஜை செய்தாள். சீர்காழி, காளத்தி, திருமறைக்காடு, இராமேசுவரம், திருவீழிமலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

சிருஷ்டித் தொழிலை நடத்துபவர் பிரம்மா! ஞான சக்தி அல்லது அறிவு சக்தி இல்லாவிட்டால் சிருஷ்டித் தொழிலை நடத்த முடியாது. அதனால்தான் அறிவு சக்தியை பிரம்மா தன் மனைவியாக ஏற்றார் என்றும் சாரதா என்ற பெயரும் அந்த அறிவு சக்திக்கு உண்டு என்றும் சாமவேதம் கூறுகிறது. வேதாந்தங்களின் தத்துவ ஸ்வரூபமாகவும், நாம ரூப பேதங்களுடன் உலகில் காட்சி அளிப்பவளாகவும், பிரம்மத்தின் அத்வைத சக்தியாகவும், பிரம்ம ஸ்வரூபிணியாகவும் விளங்குகிறாள். தேவியின் மூச்சிலிருந்து வேதங்களும், அவளுடைய தொண்டையிலிருந்து மீமாம்ûஸயும், நாக்கிலிருந்து 64 கலைகளும் தோளிலிருந்து காமக்கலையும், உடம்பின் இதர உறுப்புகளிலிருந்து இதர தந்திர சாஸ்திரங்களும் வெளிப்பட்டன என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

மனிதன் அவனுக்கு ஈசனால் அளிக்கப்பட்ட வாக் சக்தியை அவருக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். மனதிலுள்ளதை வெளிப்படுத்தும் சக்தி உள்ளதால் வாக்கை துர்விநியோகப் படுத்துதல் கூடாது. பாபமும், துக்கமும், பயமும் நீங்க வாக்கைப் பயன்படுத்த வேண்டும். இதயத்திலுள்ள வாக்வாதினியான சரஸ்வதி நெருப்புடன் கூடிய பிராணனால் ஏவப்பட்டவளாய் மெல்ல மெல்ல ஓரெழுத்து, இரண்டெழுத்து, மூன்றெழுத்து பதங்கள் வாக்கியங்கள் எனக் கூறும்படி வாக்காக வெளிப்படுத்துகிறாள். எவன் இந்த வாக்தேவியை உபாசித்து அறிகிறானோ, அவன் சொல்வன்மையைப் பெறுகிறான். சரஸ்வதி பிணி தீர்ப்பவளும் கூட. ரிக்வேதம் 10வது மண்டலம், 131வது பாடலில், அஸ்வினி தேவர்களும்,சரஸ்வதியும் இந்திரனுக்குப் புத்துணர்வு அளித்ததாகச் சொல்லப்படுகிறது. அன்னையின் அருளால் ஐந்து வயது வரை ஊமையாய் இருந்த குமரகுருபரர் முருகன் அருள் பெற்று கந்தர்கலி வெண்பா பாடினார்.

அன்னையின் அருள் இல்லையேல் உலகமே அறிவு இல்லாத சூன்யமாக ஆகிவிடும். கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் கண்கண்ட தெய்வம் கலைவாணிதான். கலைமகள் அருள்பெற்ற கவிகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். ரிஷிக்கவி, அனுக்கிரகக் கவி, அப்பியாஸக் கவி. வியாஸர், வால்மீகி ஆகியோர் ரிஷிக்கவிகள். காளிதாஸன், காளமேகம், அபிராமிபட்டர் ஆகியோர் அனுக்கிரகக் கவிகள். குருகுலம் செய்து யாப்பிலக்கணம், அணியிலக்கணம் முதலியவைகளைப் பயின்று கவிபாடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பியாசக் கவிகள். கவியரசர் கம்பர் நன்றி மறக்காமல் இவளுக்கு ஓர் அந்தாதியே பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் வாக்தேவியின் பூரண அருளைப் பெற்றவர். இவர் இயற்றிய தக்கயாகப்பரணி மிகவும் பிரசித்தி பெற்றது. கலைமகள் கூத்தருக்கு, "கலாதேவி சகலகலா நிலையம்' என்ற தெய்வீக நூலைக் கொடுத்து அருளினாள்.

புருஷோத்தமன் என்கிற சிறுவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்குத் தண்டணையாக ஒரு காகிதத்தை குல்லாப் போலச் செய்து அவன் தலையில் மாட்டினார் பள்ளி ஆசிரியர். "தான் சரியாகப் படிக்காததால் தந்தைக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறதே' என்று மனம் வருந்தினான் சிறுவன். அப்போது, வைணவப் பெரியவர் ஒருவர் அவனைத் தேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமத்தை பத்து நாட்கள் சொல்லிவரச் சொன்னார். கூத்தனூர் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வந்தான் அந்த சிறுவன். சாதாரணபெண் வடிவில் வந்த அன்னை, பையன் வாயில் வெற்றிலைச் சுருளை அளித்தாள். வந்தவள் சரஸ்வதி தேவியே என்றுணர்ந்து தேவியை அங்கேயே நிரந்தர வாசம் செய்யும்படிக் கேட்டுக் கொள்ள, தேவியும் கூத்தனூரில் கோவில் கொண்டாள். இச்சிறுவனே ஒட்டக்கூத்தர். இவர் வழிபட்ட தலம் கூத்தனூர் என்றாயிற்று.

பிரம்மன் கூட சரஸ்வதியைத் துதித்த பின்னரே பதிஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது. பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்து வரம் பெற்ற பின்னரே "சப்த சாஸ்திரம்' என்ற நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். மகாபாரதம், பிரம்ம சூத்திரம், பதினெண் புராணங்கள் முதலானவற்றை தேவியின் கடாக்ஷத்தைப் பெற்று இயற்றினார் வியாசர். புகழ்பெற்ற காளிதாசர் சரஸ்வதி தேவியைப் போற்றி சியாமளா தண்டகம், ரகுவம்சம், மேகதூதம், சாகுந்தலம், குமாரசம்பவம், சியாமளா தந்திரம் போன்ற நூல்களைப் படைத்துள்ளார்.

நாம் நதிகளை அம்பாள் ஸ்வரூபமாக நினைத்து வழிபடுகின்றோம். வேத காலத்தில் சரஸ்வதி தேவி நதியாக வணங்கப்பட்டிருக்கிறாள். ஆனால் சரஸ்வதி நதி தற்போது மறைந்து விட்டது

இசைக் கருவிகளை சரஸ்வதி பூஜையன்று வாக்தேவியாக நினைத்து வழிபடுகிறோமே ஏன்?

ஒரு சமயம் லக்ஷ்மிக்கும், சரஸ்வதிக்கும் இடையே யார் உயர்ந்தவள் என்கின்ற சர்ச்சை ஏற்பட்டது. பிரம்மன் சரஸ்வதியிடம் லக்ஷ்மியே சிறந்தவள் என்கிறார். இதனால் அவமானப்பட்ட சரஸ்வதி, பிரம்மனின் கையிலிருந்த ஸ்ருஷ்டி தண்டத்தைப் பிடுங்கிக் கொண்டு மறைந்தாள். பிரம்ம தண்டம் பறிபோனதால் ஸ்ருஷ்டி தொழில் செய்ய முடியாமல் மகாவிஷ்ணுவை நாடினார் பிரம்மன், அவர் சொற்படி அசுவமேத யாகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, தான் இல்லாமல் யாகம் செய்வதை நினைத்து கோபப்பட்ட சரஸ்வதி தேவி, யாகச் சாலையை எரிக்கும்படி அனலை உண்டாக்கிவிட்டு, ஆக்ரோஷத்துடன் பூமிக்கு வந்து மரங்களிலும், மூங்கில் மற்றும் நீர் நிலைகளிலும் மறைந்து இருந்தாளாம். இதன் காரணமாகவே மரத்தால் செய்யப்பட்ட இசைக் கருவிகளை வாக்தேவியாக மனதில் நிறுத்தி வழிபடுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com