மன்றலங் கொந்து மிசை'' எனத் துவங்கும் திருப்பரங்குன்றத் திருப்புகழ்ப் பாடலில் ""பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டையென்பு அங்கம் அணிபவர் சேயே!'' என்று வரும் அடிகளில் மூன்று புராண நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.
இரணியாக்கன் என்ற அசுரன் பிரம்மனை நோக்கிக் கடும்தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்று விட்டான். அந்தக் கர்வத்தில் தனக்கு மிஞ்சிய வல்லமை படைத்தவன் மூவுலகிலும் இல்லை என்று கொக்கரித்து இந்தப் பரந்த உலகை ஒரு பாயைச் சுருட்டுவதுபோல் சுருட்டி கடலின் அடியில் மறைத்து விட்டான்! இதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் திருமாலிடம் சென்று உலகை மீட்டுத் தர வேண்டினார்கள். திருமால் அப்போதுதான் வராக (பன்றி) அவதாரம் எடுக்கிறார்.
மகா பயங்கரமான உருவம். இரண்டு மலை உயரமும், இரு கால்களுக்கு இடையே ஆயிரம் காதம் விசாலம் வடவா முகாக்கனி போன்ற கொடும் பார்வை (வடவா முகாக்கினி என்பது கடல்நீர் அதிகமாகாமலும், குறையாமலும் வைத்திருக்கும் கடலின் உள்ளேயே இருக்கும் ஒரு நெருப்பு என்பது புராணங்களின் கூற்று) இவற்றோடு உறுமியபடி ஏழு கடல்களையும் ஒரு குட்டையைக் கலக்குவதுபோல் கலக்கிச் சேறாக்கி அதனுள் முழுகி உள்ளே இருந்த இரணியனைத் தனது கூரிய தந்தத்தால் கிழித்துக் கொன்று, தனது கொம்பின் நுனியில் பூமியைத் தாங்கி மேல் எழுந்து வந்து ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனின் உச்சியில் நிலை நிறுத்தினார் திருமால்!
உலகை மீட்டு வந்த உற்சாகத்தில் வராகத்திற்குத் தலைகால் புரியவில்லை! போதாதற்கு இரணியாக்கனைக் கொன்று அவன் ரத்தத்தைப் பருகிய வெறி எல்லாம் சேர்ந்து தனக்கு மிஞ்சியவர் எவருமில்லை என்ற மமதையில் பெரும் பெரும் மலைகளையெல்லாம் கால்பந்து விளையாடுவதுபோல் எட்டி உதைத்து அனைத்து உயிரினமும் அஞ்சி நடுங்கும் வண்ணம் பெரும் உருமலோடு பூமியைத் தோண்டி ஆட்டம் போட்டது! தேவர்களுக்கு பெருத்த சங்கடம்... இரணியாக்கனின் கொடுமையிலிருந்து மீண்டு இந்த வராகத்திடம் மாட்டிக் கொண்டோமே என்று அழுது புலம்பி சிவபெருமானிடம் போய் முறையிட்டனர்.
தேவர்களின் குறைத் தீர்க்க திருவுளம் கொண்ட சிவபெருமான் அந்தப் பொறுப்பை குமாரக் கடவுளிடம் ஒப்படைக்கிறார். ஆறுமுகப் பெருமான் உடனே விரைந்து வராக மூர்த்தியை அணுகி தன் வேலால் அதன் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தினார். வராக மூர்த்தியின் ஆவேசம் அடங்கியது.
ஆறுமுகப் பெருமான் வராகத்தின் இரு கொம்புகளில் ஒன்றைப் பறித்துக் கொண்டு போய்ச் சிவபெருமான் முன்பு வைத்தார். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் அப்பன்றிக் கொம்பை தம் திருமார்பில் அணிந்து கொண்டார். சில நூல்களில் சிவனே நேரே சென்று வராக மூர்த்தியின் ஆவேசத்தை அடக்கிக் கொம்பைப் பறித்து வந்து அணிந்து கொண்டார் என்றும் காணப்படுகிறது. அதனால் சிவனுக்கு, "வராக சம்ஹார மூர்த்தி' என்ற பெயரும் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.