சகர புத்திரர்கள் கடல் வெட்டிய வரலாறு!

மிகப் பழைமையான காலத்தில் அயோத்தியில் சகரன் என்று ஒரு மன்னன் அரசாண்டு வந்தான்.
சகர புத்திரர்கள் கடல் வெட்டிய வரலாறு!

மிகப் பழைமையான காலத்தில் அயோத்தியில் சகரன் என்று ஒரு மன்னன் அரசாண்டு வந்தான். மகாதரும சிந்தனையுடையவன். கேசினி, சுமதி என்று இரண்டு மனைவிகள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாதவன். மனைவிமாரோடு மகப்பேறு வேண்டி இமயமலைச்சாரலில் பிருகு முனிவர்முன்பாக நெடுங்காலம் தவம் செய்து முனிவரின் அருள் பெற்றான். அவர் வாக்குப்படி ஒரு மனைவிக்கு குடும்பத்தை வளர்க்கும் ஒரு பிள்ளையும் மற்றொருத்திக்கு அறுபதாயிரம் புதல்வர்களும் பிறப்பார்கள்! இவர்களில் கேசினி தனக்குக் குலத்தை விளங்க வைக்கும் ஒரு பிள்ளை போதும் என்றாள். அவளுக்கு அஸமஞ்சன் என்ற குழந்தை பிறந்தது. இன்னொரு மனைவி சுமதி ஒரு பெரிய கர்ப்பப் பிண்டத்தை ஈன்றாள்! அதிலிருந்த பல கருக்களை நெய் நிறைந்த பாத்திரங்களில் இட்டுச் செவிலித் தாய்மார் பலகாலம் காப்பாற்றினர். அவற்றினின்று அறுபதாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள்!

மூத்தவனான அஸமஞ்சன் படுதுஷ்டனாய் இருந்தான். அவன் செய்த குறும்புகளால் குடிமக்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்தனர். இந்த அழகில் அவன் வளர்ந்து, இளைஞனாகி, மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையும் ஆனான். ஆனால் அவனுக்குப் பிறந்த பிள்ளையோ அப்பனைப் போல் இல்லாமல் சிறந்த நீதிமானாகவும் பலவானாகவும் இருந்தான். அவன் பெயர் அம்சுமான். தாத்தா சகரனுக்கு அம்சுமான் மீது கொள்ளப் பிரியம். ஆனால் அவன் அப்பன் அஸமஞ்சன் செய்த அட்டுழியங்களைக் கண்டு வெகுண்டு அவனைக் காட்டிற்குத் துரத்திவிட்டான்!

இதற்கிடையே சகர மகாராஜனுக்கு என்னவோ தோன்றி திடீரென்று அசுவமேதயாகம் ஒன்றைப் பெருத்த அளவில் செய்யத்தொடங்கி விட்டான்! விந்திய மலைக்கும் இமயமலைக்கும் இடையில் அந்த யாகம் நடந்தது. யாகத்திற்குரிய குதிரை உலகை வலம்வர ஏவப்பட்டது! சகரனின்பேரன் அம்சுமான் அந்த யாகக்குதிரைக்குத் துணையாக வில்லேந்தி புறப்பட்டான். சகரன் அசுவமேதயாகம் செய்கிறான் என்று கேள்விப்பட்டதுமே இந்திரனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எங்கே அந்த அஸ்வமேத யாக பலத்தால் தன்னையும் மிஞ்சிய பலவானாக அவன் ஆகிவிடுவானோ என்று பயந்து அந்த யாகத்தைக் கெடுக்க முயன்றான். யாகத்திற்காக விடப்பட்ட அஸ்வத்தை (குதிரையை) இரவோடு இரவாகத் திருடிக் கொண்டு போய்விட்டான்!

சகரன் தன் புத்திரர்களையும் யாகக்குதிரையைத் திருடியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வரும்படி அனுப்பினான். யாகத்திற்குச் சங்கல்பம் செய்து கொண்டிருப்பதால் அவனால் யாக பூமியை விட்டு நீங்க முடியாது. தனக்குத் துணையாக பேரன் அம்சுமானை தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

அறுபதாயிரம் சகர புத்திரர்களும் தங்களுக்குள் பல குழுக்கள் அமைத்துக் கொண்டு பூமியெங்கும் குதிரையை தேடிச் சென்றார்கள். எங்கும் அது காணப்படவில்லை. எனினும் தங்கள் முயற்சியில் தளராமல் ஆளுக்கு ஒரு யோசனை தூரம் என்று கணக்கிட்டுக்கொண்டு அறுபதாயிரம் யோசனை தூரம் பூமியை வெட்டிக் குடைந்து கொண்டு போனார்கள்! இவர்கள் பூமியை வெட்டியபோது எங்கும் ஏகப்பட்ட இரைச்சல். பெரும் சப்தம். பல உயிர்கள் மடிந்தன. பாதாளலோகம் வரை போய்விட்டார்கள். சகர புத்திரர்களின் இந்த அசுர சாதனையை கண்டு தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், நாகர்கள் எல்லோரும் நடு நடுங்கிவிட்டனர். உடனே பிரம்மதேவரிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னார்கள். அவர் அவர்களை அமைதிப்படுத்தினார்.

"நீங்கள் யாரும் பயப்படவேண்டாம். இந்த பூமாதேவி அனைத்தும் அறிந்த நாராயணருடைய மனைவி. நாராயணனே கபில முனி வடிவங்கொண்டு இந்தப் பூமி முழுவதையும் எப்பொழுதும் தாங்கி வருகிறார். அவருடைய கோபாக்கினி இந்த சகரபுத்திரர்களை என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!'' என்றார்.

சகர புத்திரர்கள் பாதாளலோகம் வரை சென்று யாகக்குதிரையை காணவில்லை என்றதும் இன்னும் கீழே வெட்டிக்கொண்டு போனார்கள். அங்கு இந்த உலகைத் தன் தலைமேல் தாங்கிக் கொண்டு பெரிய மலைமேல் நிற்கும் விருபாஷம் என்ற திக்கஜத்தைக் கண்டார்கள். அதற்கு அடியிலும் தோண்டினார்கள்.

எட்டுத் திசைகளிலும் தாங்கி நிற்கும் திக்கஜவிகளையும் பார்த்தனர். யாகக்குதிரை போன இடம் தெரியவில்லை. எனினும் விடாமல் அவற்றின் அடியிலும் வெட்டிக் கொண்டே போக... ஓரிடத்தில் ஒருவர் அமர்ந்தபடி தவம் புரியக் கண்டனர். அவர்தாம் கபில முனிவர் வடிவம் கொண்ட நாராயணர். அவருக்குச் சற்று தூரத்தில் அவர்கள் தேடி வந்த யாகக்குதிரை மேய்ந்து கொண்டிருந்தது! (இந்திரன் யாகக் குதிரையை திருடி ஆழ்ந்த தியானத்தில் இருந்த கபில முனிவர் அருகில் விட்டு விட்டுப் போய் விட்டான்!)

இந்த முனிவர்தாம் தமது யாகக் குதிரையை திருடிக் கொண்டு வந்தவர் என்று நினைத்து சகர புத்திரர்கள் மிகுந்த ஆத்திரத்துடன் முனிவர் மீது பாய்ந்தனர். கண் திறந்து பார்த்த கபில முனிவர் "ஹூம்' என்று ஊங்காரம் செய்தார். அவ்வளவுதான். அவர் மூச்சில் தோன்றிய பெரு நெருப்பு அறுபதாயிரம் சகர குமாரர்களையும் நொடியில் எரித்துச் சாம்பலாக்கி விட்டது!

பிறகு சகரன் தன் பேரன் அம்சுமானை அனுப்பி யாகக்குதிரையை கொண்டு வரச் செய்து யாகத்தை முடித்தான். அதற்கு வெகுகாலம் கழித்து அம்சுமானுடைய பேரன் பகீரதன் பெரும் தவம் செய்து கங்கையை கொணர்ந்து சகர புத்திரர்களின் எலும்புகள் மீது பட வைக்க அவர்கள் நற்கதி அடைந்தார்கள் என்பது இந்தக் கதையின் நீட்சி.

இந்த நிகழ்ச்சியைத்தான் அருணகிரி நாதர் "பகர்தற்கரிதான செந்தமிழிசை' என்று துவங்கும் பழனி திருப்புகழ்ப் பாடலில் வரும் "சகரக்கடல் சூழும் புவிமிகையிப்படி' என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com