
இயேசு தனது தந்தையின் (இறைவனின்) விருப்பத்துக்கேற்பவே இந்த உலகில் மனிதனாகப் பிறந்தார். உலக மக்களனைவரையும் மீட்பதற்காகவே, வேதனைகளையும் அவமானங்களையும் பட்டு, சிலுவையில் அறையப்படுவதற்குத் தம்மையே காணிக்கையாகக் கொடுத்தார். அவரது மரணத்தினாலும் அதன் பிறகு நடந்த அதிசயமான அவரது உயிர்ப்பினாலும் உலக மக்களை பாவத்திலிருந்து மீட்டு எடுத்தார். இயேசுவின் இந்தப் பாடுகளைத்தான் மக்களனைவரும் புனித வெள்ளிக்கிழமையன்று நினைவு படுத்திக் கொண்டாடுகிறார்கள்.
இயேசுகிறிஸ்து சிலுவையில் 6 மணி நேரம் அளவுக்குத் தொங்கினார் என்று விவிலியம் கூறுகிறது. அந்த நேரத்தில் இயேசு ஏழு வார்த்தைகளைப் பேசினார். அவை...
1. நான் தாகமாயிருக்கிறேன்: அவர் தான் நேசித்த மக்கள், பாவத்திலிருந்து விடுபட்டு, மனம் திரும்பி, நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற தாகத்துடன் இருந்தார் என்பதை இந்த வார்த்தைகள் பிரதி பலிக்கின்றன.
2. தந்தையே இவர்களை மன்னியும்: இயேசு, இறைவனின் திருமகன் என்பதை உணராதவர்களாக, அவர்களுக்காக அவர் செய்த பலவிதமான நன்மைகளை மறந்தனர் அந்த மக்கள். யூத மதகுருமார்களின்
பேச்சைக் கேட்டு, அவரை அடித்து, அவமானப்படுத்தி, சித்திரவதை செய்து கொல்ல முடிவெடுத்தனர். அதன்படியே எல்லாவற்றையும் நிறைவேற்றினர். ஆனாலும், இயேசு அவர்களை மன்னித்தார், தனது தந்தையாகிய இறைவனிடம் அம்மக்களை மன்னிக்க வேண்டினார்.
3. இன்றே நீ என்னோடு பரலோகத்தில் இருப்பாய்: இயேசுவுடன் சிலுவையில் தொங்கிய மற்ற இருவர்களில் ஒருவன், அவரைப் பார்த்து, நீ கடவுளின் மகன்தானே, உன்னையும் காப்பாற்றி, எங்களையும் காப்பாற்று என்று கேலி பேசினான். மற்றொருவன் அவனைப் பார்த்து, நாம் குற்றம் செய்தோம். அதற்கான தண்டனையை அனுபவிக்கிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யாதவர்... என்று கூறி மனம் வருந்தினான். தனது குற்றங்களுக்காக மனம் வருந்திய அந்த மனிதனைப் பார்த்து, இயேசு இரக்கத்துடன், இன்றே நீ என்னோடு பரலோகத்தில் இருப்பாய்... என்று கூறினார். செய்த குற்றத்திற்காக மனம் வருந்தினால் மீட்பு உண்டு என்பதை உணர்த்தவே இயேசு இப்படிக் கூறினார்.
4. இதோ உன் தாய் இதோ உன் மகன்: இயேசு சிலுவையில் தொங்கியபோது, அவரது சீடர்களில் இருவர் மட்டுமே சிலுவையினடியில் அவரது தாயாருடன் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள்தான் இவை. தனது இன்னுயிரையே மக்களுக்காகக் கொடுத்த இயேசு, தனது அன்னையையும் மக்களுக்கே கொடுத்தார். அந்தத் தாயை மக்களனைவரும் தாயாக ஏற்றுக்கொள்ள விரும்பினார் இயேசு. அதனால்தான் தேவமாதா என்றென்றும் மக்களனைவருக்கும் தாயாக இருந்து அவர்களது குறைகளைத் தீர்த்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.
5. இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்: அந்த இடத்தில் கூடியிருந்த யூதமக்கள், மதகுருமார்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் இயேசுவை ஏளனமாகப் பேசி, ஒரு குற்றமும் செய்யாத அவரை அவமானப்படுத்தினார்கள்.தான் செய்த நன்மைகள், புதுமைகள் ஆகிய அனைத்தையும் மறந்து, நன்றிகெட்டவர்களாக இந்த மக்கள் இப்படிப் பேசுகிறார்களே என்ற வேதனையில் தனது தந்தையாம்
இறைவனை நோக்கி, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனாலும் இறைவனின் சித்தப்படியே நடக்கட்டும் என்று சொல்லி, எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும் என்பதை உணர்த்தினார்.
6. எல்லாம் முடிந்தது: தீர்க்கதரிசிகள் கூறியபடி, இறைவனின் சித்தம் நிறைவேறியது. இயேசு உலகில் மனிதனாகப் பிறந்து, மக்களுக்கு நன்மைகளைச் செய்து, என்ன கஷ்டம் வந்தாலும் அதை அனுபவித்து வாழ்ந்து, சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது இறைவன் முடிவு செய்தது. அவையெல்லாம் நிறைவேறியது என்பதைத்தான் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன.
7. தந்தையே என் ஆவியை உம் கையில் ஒப்புவிக்கிறேன்: சிலுவையில் தனது இன்னுயிரை மக்களுக்காக அர்ப்பணித்த இயேசு, இறைவனின் கட்டளைகளைச் செவ்வனே செய்து முடித்தார். தூய ஆவியின் மகிமையால் கன்னி மரியாளிடம் பிறந்த இயேசு, தனது ஆவியை இறுதியில் தனது தந்தையிடம் ஒப்புவித்தார் என்பதை உணர்த்துவதுதான் இந்த வார்த்தைகள்.
- ரொசிட்டா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.