திருஞான சம்பந்தர் முயலகன் நோய் தீர்த்த வரலாறு!

திருத்தணி முருகன் மீது பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள் அறுபத்து நான்கில் இரண்டு பாடல்களில் முயலகன் என்னும்....
திருஞான சம்பந்தர் முயலகன் நோய் தீர்த்த வரலாறு!
Published on
Updated on
2 min read

திருத்தணி முருகன் மீது பாடப்பட்ட திருப்புகழ் பாடல்கள் அறுபத்து நான்கில் இரண்டு பாடல்களில் முயலகன் என்னும் கொடிய நோயைப்பற்றி குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

முயலகன் என்பது ஒரு வகையான இழுப்பு நோய். முசல்வலிப்பு என்றும் சொல்வார்கள். கைகால் இழுத்துக் கொண்டு துடிதுடிக்கச் செய்யும்.

திருப்பாச்சிலாச்சிராமம் என்று ஒரு புண்ணிய ஷேத்திரம். அத்தலத்தில் கொல்லி மழவன் என்பவர் மிகுந்த சிவபக்தியுடையவராய் தினந்தோறும் தவறாது சிவபூஜை செய்து வாழ்ந்து வந்தார். நெடு நாட்கள் மக்கட்பேறு இல்லாதிருந்து பிறகு அத்தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சி அவருக்கு சில நாள்கள்கூட இல்லை. அந்தக் குழந்தைக்கு முயலகன் என்ற இழுப்பு நோய் இருப்பது தெரிந்து இடிந்து போனார் கொல்லி மழவன். பின்பு ஆவேசம் வந்தவர்போல் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு சிவாலயத்திற்குச் சென்றார். நெடுங்காலம் கழித்து பிள்ளைப்பேற்றை நல்கிய அந்த சிவனே இந்தக் குழந்தையின் வியாதிக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று சிவன் சந்நிதியின் முன் குழந்தையை கிடத்தி அழுது புரண்டு புலம்பினார்.

அப்போது ஆலய வழிபாட்டிற்காக அங்கு வந்த திருஞான சம்பந்தர் சிவன் சந்நிதியில் குழந்தை ஒன்று கிடக்க, ஒருவர் சிவனின் முன்பு அழுது புரள்வதைக் கண்டு விஷயத்தை விசாரித்தார். அந்தப் பச்சிளம் குழந்தை முயலகன் நோயால் துடிப்பதைப் பார்த்து மனம் பதைத்தார். உடனே சிவபெருமானை உளமாரத் துதித்து ஒரு திருப்பதிகம் பாடியருளினார். குழந்தையின் முயலகன் நோய் உடனே மறைந்தது! அத்துடன் அந்தத் தலத்திலுள்ள நடராஜப் பெருமானின் திருவடியின் கீழேயிருந்த முயலகனும் மறைந்து விட்டது!

"எனையடைந்த குட்டம் வினைமிகுந்த'' என்று துவங்கும் திருப்புகழ் பாடலிலும் ""இருமலு ரோக முயலகன் வாதமெரி குண நாசி'' என்ற திருப்புகழ் பாடலிலும் இந்த முயலகன் நோயைப் பற்றி குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். இந்த இரு பாடல்களில் "இருமலு ரோக முயலகன்'' என்று துவங்கும் பாடலின் நோய் தீர்க்கும் அற்புதத்தைப் பற்றிக் காஞ்சிப்பெரியவரே குறிப்பிட்டிருக்கிறார்.

தேவராயரின் "சஷ்டிக்கவசம்', பாம்பன் சுவாமிகளின் "சண்முக கவசம்' ஆகியவற்றில் பலவித நோய்களைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து தம்மைக் காக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இருக்கும். அவற்றைப் போலவே இந்தப் பாடலிலும் அருணகிரிநாதர் பலவித நோய்களைக் குறிப்பிட்டு அவை தம்மை அணுகாமல் காக்க வேண்டும் என்று முருகனிடம் வேண்டுகிறார். பிரசித்தி பெற்ற இத்திருப்புகழ் பாடலை நாள்தோறும் மனம் ஒன்றி பக்தி சிரத்தையுடன் தவறாது ஓதிவரும் அன்பர்கள் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்பது உறுதி.

அன்பர்கள்பால் எல்லையற்ற கருணையுடன் அருணகிரியார் ஆக்கித்தந்துள்ள இத்திருப்புகழ் பாடல், காஞ்சி முனிவர் மிகவும் போற்றிப் பரிந்துரை செய்த அப்பாடலை வாசக அன்பர்கள் நலன் பொருட்டுக் கீழே தருகிறோம்.

இருமலு ரோக முயலகன் வாத

மெரி குண நாசி விடமே நீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை

எழுகள மாலை இவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறு முளநோய்கள்

பிறவிக டோறு மெனைநலி யாத

படியுன தாள்க ளருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி

மடியஅ நேக இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட

வடிசுடர் வேலை விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

திருதிரு மாதின் மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு

தணி மலை மேவு பெருமாளே.

(இருமல், முயலகன், வாதநோய், வெப்பு நோய், மூக்குப் பீனிசம், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, புதிது புதிதாக கழுத்தைச் சுற்றிப் புற்றுபோல் எழுகின்ற கண்டமாலை இவைகளுடன் பெருவயிறு, ஈளை, சூலையெரிச்சல், சூலை, பெருநோய் என்ற தொழுநோய் ஆகிய பல நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறார்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com