

திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசம் சோழநாட்டு வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களில் (பெரிய திருமொழி 4 ஆம் பத்து 10 ஆவது திருமொழி) இங்கு அருள்செய்யும் எம்பெருமானின் புகழும் விசேஷமாக பாடப்பட்டுள்ளது.
மூலவரது திருநாமம் க்ஷீராப்தி நாதன். தாயாரின் திருநாமம் மரகதவல்லி தாயார். திருமங்கையாழ்வாருக்கு ராமனாக காட்சியளித்ததால் கோலவில்லி ராமன் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது. நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அருள்புரியும் சதுர்புஜ கருடனை இந்த திவ்யதேசம் ஒன்றில் மட்டுமே தரிசிக்க முடியும்.
இந்த கோயிலானது இந்து சமயஅறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது வைணவ சுக்ர தலம் என்றும் போற்றப்படுகிறது. கண் சம்பந்தப்பட்ட குறைகளுக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது. மேலும், பல்லவ, சோழ, விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் மற்றும் தஞ்சை மராட்டிய மன்னர்கள் இத்திவ்யதேசத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
திருவெள்ளியங்குடி, அஹோபில மடத்தின் 17 ஆவது பட்ட அழகியசிங்க ஜீயர் சுவாமிகளின் அவதாரத் திருத்தலமாகும். இவர், அஹோபில மடாதிபதியாய் கி.பி. 1698- 1734 ஆம் ஆண்டு வரை பட்டம் வகித்தவர். இந்த திருத்தலம், திருக்குடந்தை ஸ்ரீ ஆண்டவன் சுவாமிகள், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர், 45 ஆவது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர், ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ ஆண்டவன் சுவாமிகள் மற்றும் 46 ஆம் பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் சுவாமிகளால் வழிபடப் பெற்றது.
தற்போது இக்கோயிலின் மதில் சுவரை வலுப்படுத்தவும் பழுதான சந்நிதிகளை புனரமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தாயார் மண்டபம், புராதன வெளவானத்தி மண்டபம் என்ற வகையை சார்ந்ததாகும். இந்த மண்டபம் மர வேர்களால் பிளவுபட்டு காணப்படுகிறது. இதை சீரமைத்து அதன் பழைய அமைப்பை மாற்றாமல் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஸ்ரீ ரங்கம் கோயிலின் மதில்சுவரை போன்றது திருவெள்ளியங்குடி மதில் சுவர். ஆனாலும் ஆங்காங்கே சாய்ந்து பலமிழந்து கிடக்கிறது. இதை புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
விமானம், மகாமண்டபம், மதில் சுவர் மற்றும் ராஜகோபுர திருப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. மீதமுள்ள செப்பனிடும் பணிகளும் நடைபெறுகின்றன. பக்தர்கள் இந்த திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 98410 16079.
- எஸ். ஸ்ரீராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.