இந்துமத அற்புதங்கள் 52: முதலை விழுங்கிய பிள்ளை முழுதாய் மீண்டான்

அவிநாசி என்னும் நகரம். இங்கு கங்காதரன் என்பாரின் மகன் அவிநாசிலிங்கம்.
இந்துமத அற்புதங்கள் 52: முதலை விழுங்கிய பிள்ளை முழுதாய் மீண்டான்
Updated on
1 min read

அவிநாசி என்னும் நகரம். இங்கு கங்காதரன் என்பாரின் மகன் அவிநாசிலிங்கம். நெடுங்காலம் பிள்ளையின்றித் தவித்துத் தவங்கிடந்து பெற்ற பிள்ளை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இப்பிள்ளை வளர்ந்தது. ஐந்து வயதானபோது எதிர்வீட்டுச் சிறுவன் அழைக்க அவனுடன் விளையாடப் போனான் அவிநாசிலிங்கம். இரண்டு

பேரும் விளையாடிக் கொண்டே தாமரைக் குளத்தை அடைந்தார்கள். தாமரைக் குளத்தில் இறங்கி விளையாடியபோது, குளத்திலிருந்த முதலை அவிநாசிலிங்கத்தின்

காலைப் பற்றியது. கூட விளையாடிய பையன் அழுதுகொண்டே ஓடிப் போய்ச் சொல்ல, பெரியவர்கள் ஓடி வந்தார்கள். நீருக்கு வெளியே எந்தச் சுவடும் இல்லை.

உள்ளிறங்கிப் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. பிள்ளையைப் பறி கொடுத்த பெற்றோர் கலங்கினார்கள்; கதறினார்கள்; ஆயின், வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அவிநாசிலிங்கத்தோடு விளையாடிய பையனுக்கு உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்ய அவனுடைய பெற்றோர் முடிவு செய்து, நாள் குறித்து உபநயனமும் நடந்தது.

தெருவின் ஒரு வீட்டில் உபநயனம். எதிர் வீட்டில் கங்காதரனுக்கும் அவர் மனைவிக்கும் தங்கள் மகனும் உயிருடன் இருந்திருந்தால் இப்படி ஒரு மங்கலம் தங்கள் இல்லத்திலும் நடந்திருக்குமே என்னும் ஆதங்கம். தங்கள் மகனை எண்ணி எண்ணி அழுதார்கள் அவர்கள். அப்போது அவிநாசியில் எழுந்தருளியிருந்தார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள். ஒரே தெருவில் ஒரு வீட்டில் மங்கல ஒலி; எதிர்வீட்டில் அமங்கல அழுகை. ஊராரிடம் என்னவென்று சுந்தரர் விசாரித்தார். ஊரார் செய்தியைச் சொன்னார்கள்.

"தாமரைக்குளம் எங்கே?' எனக் கேட்டார் சுந்தரர். இதற்குள்ளாக அவிநாசிலிங்கத்தின் பெற்றோரும் விவரமறிந்து அங்கு வர, அவர்களையும் அழைத்துக்கொண்டு தாமரைக்குளம் சென்றார் சுந்தரர். "அவிநாசி அப்பனே! எமனிடம், இந்தக் குளத்தில் குளித்த குழந்தையைத் தரச் சொல்!'' என்று வேண்டிக் குளக்கரையில் நின்று அவர் பாட, திரும்பி வந்தது முதலை!! என்ன அதிசயம்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விழுங்கிய பாலகனைக் கரையில் உமிழ்ந்தது முதலை. சிறுவன் வளர்ந்திருந்தான். பூமியில் வாழ்ந்திருந்தால் எவ்வளவு வளர்ந்திருப்பானோ, அவ்வளவு வளர்ந்திருந்தான்.

முதலை வாய்ப் பிள்ளையை மீட்டுத் தர வேண்டி சுந்தரர் அருளிய பதிகம்

"எற்றான் மறக்கேன் எழுமைக்கும்

எம்பெரு மானையே

உற்றாய்என்று உன்னையே உள்குகின்

றேன்உணர்ந்து உள்ளத்தால்

புற்றாடு அரவா புக்கொளி

யூர்அவி நாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதி

யேபர மேட்டியே.''

அவிநாசி தலத்தினைச் சென்றடையும் வழி:

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையிலிருந்து 40 கி.மீ; திருப்பூரிலிருந்து 14 கி.மீ; திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. பழைய பெயர் திருப்புக்கொளியூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com