

இயேசுவின் அன்பு எப்படிப்பட்டது? பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள முழுமையான நிபந்தனையற்றதைப் போல, மாசற்ற,பரிசுத்த அன்பினால் நிபந்னையின்றி நம்மீது பொழிவதாக இருக்கிறது. ஆம் ""பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள்'' என்று யோவான் 15:9 -இல் இயேசு கூறியுள்ளார்.
பழைய ஏற்பாட்டில் கூட இயேசுவைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி கூறியுள்ளார். ஏசாயா 53:4,5 இல் ""மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' என்று வாசிக்கிறோம்.
கடவுள் அன்பாய் இருக்கிறார். நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை(இயேசு) உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நம் பாவங்களுக்காக ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார்.
இதைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் சற்றே பின்னோக்கி செல்வோம். ஏழாம் ஆண்டில் யூதச்சட்டபடி, அடிமைகள் விடுதலை செய்யப்பட வேண்டிய காலம் வரும்போது, அந்த அடிமைகள் உரிமையாளர் மேல் அன்பு வைத்து விடுதலை பெற்றுப் போக விரும்பாவிட்டால் அதற்கு அடையாளமாக அடிமையின் காதில் துளையிட்டு, உரிமையாளரோடே இருக்க விட்டுவிடுவர்.
அவ்வாறே இயேசுவும் நம் மீது வைத்த அன்பினால் தம் கைகளையும் கால்களையும் துளைக்க அனுமதித்தார். நமக்கு அடிமையும் ஆனார். அதனால் தான் தன்னை கற்றூணில் கட்டி அடிக்கவும், தாடியை பிய்க்கவும், தலையில் முள்முடி சூட்டவும், சிலுவை சுமத்தப்பட்டு அதில் அறையப்படவும் உயிர் துறக்கவும், இறந்தபின்னும் ஈட்டியால் குத்தப்படவும் அனுமதித்தார்.
அன்பினால் அடிமையின் வடிவை ஏற்றதால்தான் அத்தனை அவமானங்களையும் ஏற்றுக் கொண்டார் நம் இயேசு. பிலிப்பியர் 2:7,8 வசனங்களில் "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் (இயேசு) மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்'' என்று பார்க்கிறோம்.
எனவே இயேசு நம்மேல் கொண்ட அன்பை நினைவு கூறத்தக்கதாக நாமும் அவரின் வழியில் நடக்க வேண்டும். பிறருக்கு முன்பாக நாமும் நம்மைத் தாழ்த்தி அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.
- ஒய். டேவிட் ராஜா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.