
வைணவத்தலமான ஸ்ரீ வில்லிப்புத்தூரில் வடபத்ரசாயி கோயிலில் நந்தவனம் அமைத்து மலர்களை எடுத்து மாலையாகக் கட்டி இறைவனுக்கு அணிவித்து மலர்க் கைங்கர்யம் செய்து வந்தார் வைணவ பக்தரான விஷ்ணுசித்தர்.
பூமி பிராட்டி, பக்தர்களுக்குப் பக்திப்பாதை காட்ட அவதாரம் செய்ய நினைத்தாள். அதற்கு ஏற்றதலம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று கருதி, வடபத்ரசாயி கோயிலில் உள்ள நந்தவனத்தில் துளசிச் செடியின் அருகில் ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தன்று அழகான பெண் குழந்தையாகத் தோன்றினாள். அங்கு மலர்களைப் பறித்துக் கொண்டிருந்த விஷ்ணு சித்தர் குழந்தையின் அழுகுரல் கேட்டு அதை அன்புடன் எடுத்துக் கொண்டார். வடபத்ரசாயி அசரீரியாக, ""விஷ்ணு சித்தரே, இக்குழந்தையை எடுத்துச் சென்று "கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வாரும்'' என்று கூறினார்.
விஷ்ணு சித்தரும் அக்குழந்தையை எடுத்துச் சென்று அன்புடன் வளர்த்து வந்தார். அத் தெய்வக் கொழுந்தை பக்திக் கொம்பிலே படரவிட்டார். குழந்தையை வளர்த்ததுடன் அதன் உள்ளத்தில் பக்தியையும் வளரச் செய்தார். கோதையின் கண்ணன் பக்தி காதலாக மலர்ந்தது.
விஷ்ணுசித்தர் வடபத்ரருக்கு அணிவிப்பதற்காகக் கட்டி வைத்த மாலையை கோதை தான் அணிந்து கொண்டு கண்ணனை மணப்பதற்கு ஏற்றவாறு "நான் அழகாக இருக்கிறேனா?' என்று கேட்டு ஆசையுடன் கோயிலில் உள்ள கிணற்றில் உள்ள தெளிந்த நீரில் தன் முகத்தைப் பார்த்து அழகு பார்த்தாள். கிணற்றில் உள்ள தண்ணீரைக் கண்ணாடியாகக் கொண்டு அழகு பார்த்ததால் அக்கிணறு "கண்ணாடிக் கிணறு' என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
ஒருநாள், இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய மாலையை கோதை தான் அணிந்து அழகு பார்க்கும்போது விஷ்ணு சித்தர் பார்த்துவிட்டார். ""கோதாய், இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய மாலையை மானிடப் பெண்ணான நீ அணிந்ததன் மூலம் அபசாரம் செய்துவிட்டாயே'' என்று கோபித்துக் கொண்டார். வேறு மலர்களை எடுத்து மாலையாகக் கட்டி இறைவனுக்கு அணிவித்தார்.
அன்று இரவு விஷ்ணுசித்தர் உறங்கும்போது அவர் கனவில் பெருமாள் தோன்றி, ""விஷ்ணு சித்தரே, இன்று முதல் உம் மகள் சூடிக்கொடுத்த மாலைகளையே எமக்கு அணிவிப்பீராக'' என்று கூறினார்.
கனவிலிருந்து விழித்த விஷ்ணு சித்தர் தம் மகளைப் பார்த்து, ""கோதாய், உன் பாக்கியமே பாக்கியம். நீர் சூடிக்கொடுத்த மாலைகளையே அணிவிக்க வேண்டும் என்று இறைவனே கூறியுள்ளார். நீ சூடிக் கொடுத்த சுடர்கொடி. அரங்கனையே ஆட்கொண்டதால் நீ ஆண்டாள்!'' என்று பாராட்டி மகிழ்ந்தார்.
தந்தை விஷ்ணுசித்தரும் மகள் ஆண்டாளும் அவதரித்ததால் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பெருமை பெற்றது. விஷ்ணுசித்தரின் பக்திக்கு மெச்சி திருமால் லட்சுமி சமேதராகக் காட்சித் தரும்போது அவரிடம் வரம்
கேட்காமல் திருமாலின் அழகைக் கண்டு யாருடைய கண்ணெச்சிலாவது (திருஷ்டி) பட்டுவிடுமோ என்று பரந்தாமனுக்கே பல்லாண்டு பாடி வாழ்த்தினார். அதனால் விஷ்ணு சித்தர் "பெரியாழ்வார்' என்று பெயரும் பெற்றார். அவரால் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பெருமை பெற்றது என்பதை,
"மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்''
என்று உபதேச ரத்னமாலை கூறுகிறது.
கோதையும் திருமாலுக்குப் பூமாலை சூடிக்கொடுத்ததனால் "ஆண்டாள்' என்ற பெயர் பெற்றாள். அவளால் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பெருமை பெற்றது. என்பதை,
"கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும்ஊர்''
என்ற பாடல் விளக்குகிறது.
திருமாலே வடபத்ரசாயியாகக் கோயில் கொண்டிருந்ததால் அவரால் ஸ்ரீ வில்லிப்புத்தூர் பெருமை பெற்றது என்று பாடாமல் பெரியாழ்வராலும் ஆண்டாளாலும் பெருமை பெற்றது என்பதற்குக் காரணம்
என்னவென்றால், விலை மதிப்பற்ற அணிகலன்களும் அளவற்ற செல்வங்கள் இருந்தாலும் அவை உள்ள அறை இருட்டாக இருந்தால் அவைகளின் பெருமையை காணமுடியாது. அவற்றை காண்பதற்கு விளக்கின் ஒளிதான் பயன்படும்.
திருமாலின் பெருமை அளவற்றதாக இருந்தாலும் அவற்றை அறிந்து கொள்ள பக்தர்களின் பாடல்கள் விளக்கைப்போல் பயன்பட வேண்டும். பன்னிரெண்டாழ்வார்கள் பாடிய நாலாயிரம் பாடல்களும் திருமாலின் பெருமையை காண்பதற்கு விளக்கைப்போல் உதவுகின்றன.
அந்த பன்னிரெண்டாழ்வார்களில் பெரியாழ்வார் அவதரித்தத் தலம் ஸ்ரீ வில்லிப்புத்தூர். சூடிக்கொடுத்த சுடர்கொடியாகிய ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாடல்களைப் பக்தி மணம் வீசும் பாமாலையாகப் பாடிக் கொடுத்தாள்.
தன் விருப்பப்படியே ஆண்டாள் அரங்கனையே மணந்தாள். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத் திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எட்டு நாள்களும் ஆண்டாளும் அரங்க மன்னாரும் பலவித வாகனங்களில் பவனி வருவார்கள். ஒன்பதாம் நாள் காலையில் ஆண்டாளும் அரங்கனும் பெரிய தேரில் அமர்ந்து வர, பக்தர்கள் வடம் பிடித்திழுக்க ரத வீதிகள் வழியாகத் தேர் நிலைக்கு வரும்.
திருவரங்கத்தில் திருவிழா அன்று அரங்கன் தேர் ஏறினார். அத்தேரின் வடம் பிடித்திழுத்தால் வைகுந்தத்தில் இடம் பிடிக்கலாம் என்று வீர வைஷ்ணவரான பிள்ளை பெருமாளையங்கார்,
"இன்று திருத்தேரி லேறினார்- நின்று
ஒன்று மரியாத ஊமர்காள் தென்னரங்கர்
வடம்பிடிக்க வாரீர் வைகுந்த நாட்டில்
இடம்பிடிக்க வேண்டுமென்றக் கால்''
என்று பாடியுள்ளார்.
ஐயங்கார் பாடிய அதே அரங்கன்தான் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் ஆண்டாளுடன் தேரேறி வருகிறார். பக்தியுடன் எட்டுநாள் திருவிழாவையும் கண்டு களித்து, பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் திருத்தேர் வடம் பிடித்திழுப்பவர் வைகுந்தத்தில் இடம் பிடிப்பார்கள்.
- கி. கிருஷ்ணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.