இந்துமத அற்புதங்கள் 52: வெப்பம் தணித்த முத்துப் பந்தல்

கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு திருத்தலம் பட்டீஸ்வரம். அருகாமையிலுள்ள சத்திமுற்றத்தில்
இந்துமத அற்புதங்கள் 52: வெப்பம் தணித்த முத்துப் பந்தல்
Updated on
1 min read

கும்பகோணத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு திருத்தலம் பட்டீஸ்வரம். அருகாமையிலுள்ள சத்திமுற்றத்தில் வழிபட்டு விட்டுப் பட்டீஸ்வரம் அடைந்தார் திருஞானசம்பந்தர். கோடை காலம். சின்ன பாலகனாய், தன் பிஞ்சுப் பாதங்கள் நோக நடந்தார். ஆலயவாயில் வரை முத்துச்சிவிகையில் வந்தாலும் உள்ளே நடந்துதானே வரவேண்டும். திருக்கோயிலின் பிராகாரங்களும் வழிகளும் வெயிலில் வெப்பமேறிக் கிடந்தன.

பிள்ளை தவிப்பதை தந்தை பொறுப்பாரா? குழந்தைக்குக் குளிர்ச்சி தரும் வழி என்ன என்று எண்ணினார் அப்பன்; அப்பனாய் அம்மையாய் ஆனந்தமாய் உள்ள அகில நாயகன்.

வெப்பத்திற்குக் குளிர்ச்சி தருவது முத்து. தன் பூதகணங்களை ஏவினார் சிவபெருமான். திருஞானசம்பந்தருக்கு முத்துப் பந்தல் பிடிக்கச் சொன்னார்.

பூதகணங்கள் பந்தல் பிடிக்க அதன் கீழ் சம்பந்தர் நடந்து வரும் அழகைக் காண சிவபெருமானுக்கும் ஆசை வந்தது. கருவறைக்குள்ளிருந்து கண் சுருக்கிப் பார்த்தார் முக்கண்ணப்பர். நந்தி லேசாக மறைத்தது. மறைத்த நந்தியைச் சற்றே விலகச் சொன்னார். மறைப்பு நீங்கியதும் கண் குளிர பிள்ளை அழகை அள்ளிப் பருகினார். இன்றும் பட்டீஸ்வரம் திருக்கோயிலில் ஐந்து நந்திகள் சந்நிதியை நேராக நோக்கியிராமல் லேசாக நகர்ந்திருக்கின்றன.

முத்துப்பந்தல் கீழ் நடந்து வந்து இறையருள் வியந்து திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

"பாடன் மறை சூடன்மதி பல்வளையொர்

பாகம் மதில் மூன்றொர் கணையால்

கூடஎரி யூட்டிஎழில் காட்டிநிழல்

கூட்டுபொழில் சூழ்பழைசையுள்

மாடமழ பாடியுறை பட்டிசர

மேயகடி கட்டரவினார்

வேடநிலை கொண்டவரை வீடுநெறி

காட்டி வினை வீடுமவரே.''

பட்டீஸ்வரம் தலத்தினைச் சென்றடையும் வழி:

கும்பகோணம் - ஆவூர் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். சத்திமுற்றமும் பட்டீஸ்வரமும் ஒன்றுக்கொன்று அருகில் உள்ள தலங்கள். இடையில் வீதிதான் உள்ளது.

இறைவன் - பட்டீச்சுரர், தேனுபுரீஸ்வரர்,

இறைவி - ஞானாம்பிகை, பல்வளை நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com