ஆபரண அலங்காரத்துடன் அனந்த சயனம்!

அர்ச்சாவதாரமாக அன்பர்கள் மகிழ ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று நிலைகளில் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார் என்பர். அவைகள் நின்ற,
ஆபரண அலங்காரத்துடன் அனந்த சயனம்!
Published on
Updated on
2 min read

அர்ச்சாவதாரமாக அன்பர்கள் மகிழ ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று நிலைகளில் பக்தர்களுக்குச் சேவை சாதிக்கிறார் என்பர். அவைகள் நின்ற, இருந்த (அமர்ந்த), கிடந்த திருக்கோலங்கள் ஆகும். நான்காவதாக திருவிக்ரம (உலகளந்த) கோலத்தை நடந்த கோலமாக சொல்லப்படுவதுண்டு.

அனைத்து உலகங்களையும் அவ்வுலக இயக்க காரணிகளான தேவர்களையும் அதி தேவதைகளையும் படைக்க எண்ணியவுடனே எழுந்து நின்றார். அவ்வளவிலே அனைத்தும் படைக்கப்பெற்று விட்டன. இவ்வியக்கமானது தொடர்ந்து முறைவழுவாது செயல்படவே நீடுதுயில் கொண்டு அத்துயிலும் அறிதுயிலாகக் (யோகநித்திரை) கொண்டுள்ளார். இவற்றில் அவரது கிடத்தல் அல்லது சயனத் திருக்கோலமே சேவார்த்திகளை மிகவும் கவர்வது. பாம்பனைமேல் பள்ளிகொண்டான் என்ற சொல்லிற்கேற்ப பெரும்பாலான சயனஸ்தலங்களில் அவர் சயனித்திருப்பது ஆதிசேஷன் என்னும் அனந்தாழ்வான் மேல்தான். இக்கோலத்தை புஜங்க சயனம் அல்லது அனந்த சயனம் என்று போற்றுவோம். மற்ற சயனங்கள் தர்ப்ப சயனம், போக சயனம், மாணிக்க சயனம், யோக சயனம், வடபத்ர சயனம், வீர சயனம் என்பன. தரைமேல் படுத்துக் கொண்டு அனுக்கிரகிக்கும் கோலம் தல சயனம் எனப்படும். மாமல்லையில் இக்கோலத்தைக் காண முடியும்.

சிறப்புவாய்ந்த சயனத் திருக்கோலத்தில் ஆவராணி என்றழைக்கப்படும் திருத்தலத்தில் எம்பெருமான் ஏழு தலை ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார். சுதை ரூபத்தில் சுமார் 21 அடி நீளத்தில் கருவறை முழுவதும் வியாபித்து தென்திசை முடியை வைத்து வடதிசை பாதம் நீட்டி அரவணையில் அறிதுயில் கொண்டுள்ளார். ராஜநாகம், கார்கோடகன், வசுமதி, சிந்தாதரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, கருடாத்ரி என்ற ஏழு நாகங்களே அவை. பாம்பின் மேல் ஒரு கை தலையைத் தாங்க மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கன்னங்கரிய வடிவில் தைலக் காப்புக்குள்ளே இருக்கிறார். இவரை ஆபரணதாரி என்று அழைப்பதற்கேற்ப சிரசின்மேல் வைர ஜடாமுடி என்ற மணிமகுடம், கர்ணங்களில் குண்டலம், புஜங்களில் தண்டு, கடகம், மார்பில் நலங்கிளர் ஆரம், உத்தரீயம், தண்டை, கைவிரல்கள் அனைத்திலும் மோதிரமும் கால்விரல்கள் அனைத்திலும் மெட்டிபோன்ற வளையங்களும் என இவை அனைத்தும் சுதை வடிவிலேயே அணிந்து கொண்டு பல்நகை போதாதென்று புன்னகையை வதனத்தில் தவழவிட்டுக்கொண்டு சேவார்த்திகளைப் பார்த்துக்கொண்டு பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் பேரழகை கண்களால் பார்ப்பதை விடுத்து பருகவேண்டும். அவரது நாபிக் கமலத்திலிருந்த  பிரம்மா எழுந்துள்ளார். சிரசின் அருகில் ஸ்ரீதேவியும் திருவடிகளின் அருகில் பூதேவியும் அமர்ந்து பெருமாளின் அழகை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தலைப்பகுதியில் பிருகு முனிவரும் கால்பகுதியில் வேதவியாசரும் அமர்ந்து அஞ்சலி செய்கின்றனர்.

அலங்காரவல்லித்தாயார் தனி சந்நிதி கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிகின்றார். ஆழ்வார்கள் ஆச்சார்ய புருஷர்களுக்கு சந்நிதிகள் உண்டு. திருக்கோயிலின் விசாலமான திருக்குளம் அனந்த புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் பஞ்ச நாராயண úக்ஷத்திரங்கள் என அழைக்கப்படுபவை திருக் கண்ணங்குடி (திவ்யதேசம்), ஆவராணி எனப்படும் ஆபரணதாரி, வடக்காலத்தூர் (வரத நாராயணன்), தேவூர் (தேவ நாராயணன்) மற்றும் கீழ்வேளூர் (யாதவநாராயணர்). இவை ஒன்றுக்கொன்று அருகே அமைந்து ஓர் ஆரமாய் விளங்குகின்றது. திருக்கண்ணங்குடியின் அபிமானத் தலமாக விளங்குகின்றது ஆவராணி. திருமங்கையாழ்வாரின் திருக்கண்ணங்குடி மங்களாசாசன பாடல்களில் ஆவராணி அனந்தசயனப் பெருமாளையும் போற்றிப் புகழ்ந்துள்ளார் என்பது கற்றறிந்த பெரியோர்களின் ஆணித்தரமான கூற்று. இத்திருக்கோயிலில் உள்ள பதினொன்று கல்வெட்டுகளில் மிகப்பழைமையானது இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தை (1146-1173) சேர்ந்தாகும். கல்வெட்டுச் செய்திகளின்படி இவ்வூரின் இயற்பெயர் "ஆபரணதாரி சதுர்வேதிமங்கலம்' எனவும், "ஆபரணதாரி உத்தரானந்தபுரம்' எனவும் அறியப்படுகிறது.

இவ்வாலயத்தில் பிரதிவருடம் சித்திரையில் தைலக்காப்பு நடைபெற்றபின் திருக்கல்யாண உற்சவமும் ஆனியில் பவித்ரோத்சவமும், ஆடியில் திருவிளக்கு உற்சவமும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழாவும், மாசிமகத்தன்று நாகைக்கடலில் தீர்த்தவாரியும், சிறப்பாக நடைபெறுகின்றது.

தமிழக இந்து சமயஅறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இவ்வாலயத்தில் வரும் ஆங்கில புத்தாண்டில் திருப்பணி துவங்கப்பட்டு அடுத்து குடமுழுக்கு விழா நடத்த திட்டமுள்ளது.

நாகை திருவாரூர் சாலையில் சிக்கலிலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆவராணி அருள்மிகு அலங்காரவல்லி தாயார் சமேத அனந்தநாராயணப்பெருமாள் திருக்கோயில். திருக்கண்ணங்குடி திவ்ய தேசத்திலிருந்து ஒன்றரைக் கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 21 ஆம் தேதி காலை 6.00 மணிக்கு சொர்க்கவாசல் சேவையும் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் டிசம்பர் 30 வரையும்  நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 97885 17247.

- எஸ். வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com