

பகவான் கண்ணன் அவதரித்தத் திருத்தலம் மதுரா. இத்தலத்தை "வடமதுரை' என்றும் சொல்வர். அங்கிருந்து தென் கிழக்கில் ஐந்து கி.மீ. தொலைவில் ஓடுகிறது யமுனா நதி. அதன்மீது கட்டப்பட்ட பாலத்தைக் கடந்து சென்றால் கண்ணன் வாழ்ந்த கோகுலத்திற்குச் செல்லலாம்.
கோகுலம் சிறிய ஊர். இங்கு அமைந்துள்ள கோயிலில் "நவமோகன கிருஷ்ணன்' என்ற பெயரில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் கண்ணபிரான் அருள்புரிகிறார்.
இத்திருக்கோயிலில் பகவான் கண்ணன், பாமா- ருக்மணியும் காட்சி தருகிறார். கோயிலுக்குள் சென்றதும் குளுமையாக இருப்பதை உணரலாம். பளிங்குக்கற்களால் ஆன இக்கோயிலுக்குள் பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் பஜனை செய்வர்.
மகாகவி சூர்தாஸ் என்பவர் பிறவியிலேயே பார்வை இல்லாதவர். கோகுலத்து கண்ணபிரானின் பெருமைகளை கேள்விப்பட்டு, ஆலயத்திற்கு வந்து தரிசிக்க விரும்பினார். ஆனால் உறவினர்கள் பார்வையற்றவரான சூர்தாஸ் கோகுலத்தில் வீற்றிருக்கும் கண்ணனின் திருமேனியை எவ்வாறு தரிசிக்க இயலும் என்று போகவேண்டாம் என்று தடுத்தனர். அதற்கு சூர்தாஸ், "பகவானை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் கண்ணன் தன்னைப் பார்ப்பார்' என்று முழுநம்பிக்கையுடன் சொல்லவே, சூர்தாûஸ அழைத்துச் சென்றனர்.
பகவான் முன்நின்ற சூர்தாஸ் கவிபாட ஆரம்பித்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவர் பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஸ்ரீ கிருஷ்ணரின் திருமேனியிலிருந்து ஓர் ஒளி தோன்றி சூர்தாஸின் கண்களுக்குள் புகுந்தது. கிருஷ்ணபகவானின் அருளால் பார்வை பெற்ற சூர்தாஸ் பாடிய பாடல்கள் அவரை மகாகவியாக உயர்த்தியது.
ஆயர்பாடியில் கண்ணனுக்கு இன்னொரு கோயிலும் உண்டு. அதனை "புராணா கோகுல்' என்று போற்றுவர். இதன் வாசலை ஒட்டி யமுனை நதி ஓடுகிறது. இதன் கரையில் நந்தகோபர், யசோதை, பலராமர் ஆகியோருக்கு மரத்தால் செய்யப்பட்ட திருவுருவச்சிலைகள் உள்ளன. சிறிய மரத்தொட்டிலில் மரத்தில் செதுக்கப்பட்ட சிலையாக சின்னக்கண்ணன் அழகாகக் காட்சி தருகிறார். கண்ணனுக்குப் பிடித்தமான வெண்ணெயும் அவலும் பக்தர்களுக்கு இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கண்ணன் எழுந்தருளியிருக்கும் இந்த கோகுலத்து ஆலயத்தை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். திருமங்கையாழ்வார் ஏழு பாசுரங்களும் பெரியாழ்வார் பத்து பாசுரங்களும் ஆண்டாள் ஐந்து பாசுரங்களும் பாடியுள்ளனர்.
- டி.ஆர். பரிமளரங்கன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.