நானே வாழ்வு தரும் உணவு

விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே யோவான் 6: 51
நானே வாழ்வு தரும் உணவு
Updated on
2 min read

விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே யோவான் 6: 51

அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட ஓர் ஆய்வுக் குறிப்பு சொல்கிறது : சரியான உணவு கிடைக்காமல் நோய்வாய்ப்படுகிறவர்களைவிட அதிகமாக உணவு உண்டு நோய்வாய்ப்படுகிறவர்களே அதிகம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்த ஆய்வுக்குறிப்பின் மூலம் நமக்குத் தெரிய வரும் அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், நாம் உண்னும் உணவு மட்டும் நமக்கு நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்வைக் கொடுப்பதில்லை என்பதுதான். சில சமயங்களில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே நமது வாழ்க்கையில் பெரும் துன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றது.

அதிகமான சர்க்கரை உணவுகளால் நோய், கொழுப்புப் பொருட்களை உண்பதால் நோய் மற்றும் மிகவும் சத்து மிகுந்த உணவுகளாலும் நோய்கள் பல நம்மைத் தாக்குகின்றன.இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு மனிதனும் ஏராளமான பணத்தைச் செலவு செய்ய நேரிடுகின்றது.

பெரிய பெரிய மருத்துவமனைகளைத் தேடிச் செல்கிறோம். ஒவ்வொரு வியாதிக்குமான சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்கிறோம். அவர்களைப் பார்ப்பதற்கே மணிக்கணக்கில் தவம் கிடந்து, பிறகு சந்தித்து ஸ்கேன், எக்ஸ்ரே என்று பலவிதமான பரிசோதனகளுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இதற்காக நமது குடும்ப உறுப்பினர்கள் படும் துன்பங்கள் பற்றிச் சொல்லி மாளாது.

இத்தகைய துயரங்களிலிருந்து நிச்சயமாக நமக்கு விடுதலை உண்டு. அதற்கு இறைவனின் துணை வேண்டும். இறைவனை அன்றாடம் போற்றிப் புகழ்ந்து வாழ்ந்தாலே நம்மை எந்தத் துன்பங்களும் நெருங்காது. இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

வாழ்வு தரும் உணவு ஒன்று உண்டு என்றால், அது இயேசுதான். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இயேசுதான். அவருடைய உணவை உண்போர் என்றும் வாழ்வர்.

பலருக்கு இயேசுவை உண்ணுவது (அவருடைய போதனைகளைப் பின்பற்றுவது) ஒரு கசப்பான மருந்தாக இருக்கும். சிலருக்கு அது அஜீரணக் கோளாறுகளைக்கூட ஏற்படுத்தும். இன்னும் சிலர் இந்த உணவின் பக்கமே செல்வதில்லை. அதன் வாடையே சிலருக்குப் பிடிக்காது.

சிலர் இயேசுவை உண்பது போல நடிக்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அவரை உண்பது கிடையாது. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனில் பல அம்சங்கள் இணைந்திருப்பதைப் பார்க்கின்றோம். உடல், உயிர், உள்ளம், ஆவி, ஆத்மா, உணர்வுகள், எண்ணங்கள் எனப் பலவற்றின் கலவைதான் மனிதன். இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்கின்ற மனிதனால், ஒரு சிறப்பான வாழ்வை வாழ முடியும். சரியாகப் பயன்படுத்தாமல் தீய வழிகளில் பயன்படுத்தும் மனிதன் பலவிதத் துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.

இயேசுவைப் பின்பற்றி இறைவனை எப்போதும் மனதில் இருத்தும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர முடியும். நமது எண்ணங்களைச் சீர்படுத்தும்போதும், இறைவனின் ஆற்றல் நம்மிடம் வெளிப்படும்.

இப்படியாக தூய எண்ணங்களின் வெளிப்பாடு, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிறந்த முறையில் வாழ வைக்கும்.

இயேசு தம் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி, போதித்தது இத்தகைய தூய எண்ணங்களின் சிறப்பு பற்றித்தான். ஆகவே நாமும் தூய எண்ணங்களோடு இயேசுவை மனதில் இருத்தி சிறப்பானதொரு வாழ்வைக் கண்டு கொள்வோம்.

- அபி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com