கர்ப்பிணிப் பெண்களின் காவல் தெய்வம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருவோத்தூர் திருத்தலம்.
கர்ப்பிணிப் பெண்களின் காவல் தெய்வம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற திருவோத்தூர் திருத்தலம். தற்போது திருவத்திபுரம் என்றும் செய்யாறு என்றும் அழைக்கப்படுகின்றது. பழமை வாய்ந்த இத்திருத்தலத்தின்கண் அமைந்துள்ளது அன்னை காங்கியம்மன் திருக்கோயில்.

சிவபெருமானின் ஆணையை மீறி தனது தந்தை தட்சனின் யாகத்திற்கு சென்ற பார்வதி தேவி அங்கு அவமதிக்கப்பட்டு திரும்புகையில், அப்பழி நீங்கும் பொருட்டு பூமியில் சென்று தவம் புரியுமாறு அம்பிகைக்கு கட்டளையிடுகிறார் ஈசன். அவ்வருளாணைப்படியே அம்பிகை சப்த மாதர்களுடன் பூமியில் வந்து தொண்டை நாட்டில் சேயாற்றின் கரைக்கண் உள்ள திருவோத்தூர் எனும் திருப்பதிக்கு வடகீழ்பால் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து தவச்சாலையமைத்து கடுந்தவம் புரிந்து ஈசன் அருள்பெற்று தாட்சாயிணி என்ற குலப்பெயர் நீங்கி இறைவனின் இடப்பாகத்தில் பழையபடி அமரும் பேறு பெற்றாளாம். அம்பிகையுடன் வந்த சப்தமாதர்கள் தங்கிய அந்த புனித இடமே தற்போது காங்கியம்மன் திருக்கோயில் என அடியார்களால் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. சப்த மாதர்களின் புராதனச் சிலைகளும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

இவ்வன்னையின் ஆற்றல்கள், நடத்திவரும் அற்புதங்கள் ஏராளம். முக்கியமாக இவ்வூரில் பிறந்த மற்றும் புகுந்த பெண்கள் கருவுற்ற ஏழாம் மாதம் அவர்கள் எங்கிருந்தாலும் அன்னையின் திருக்கோயிலுக்குப் பெற்றோர் உற்றார் உறவினர்களுடன் வந்து அன்னைக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து மகப்பேறு சிறப்பாக அமைய வேண்டி அவளின் அருள்பிரசாதத்தை மடிப்பிச்சை பெற்று வருதல் பல பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பிரதாயமாகும். அதனால் மகப்பேறும் சிறப்பாக அமைவது கண்கூடு. இவ்வழிபாட்டிற்கு "பச்சை படைத்தல்' என்று கூறப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. திருக்குடமுழுக்கு விழா பிப்ரவரி- 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திண்டிவனம், காஞ்சிபுரம், சென்னை பகுதியிலிருந்து திருவோத்தூர் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com