
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய பாளையத்தம்மன் கோயிலிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது வடதில்லை கிராமம். தமிழ்நாடு ஆந்திர எல்லையில் பள்ளிகொண்ட பரமேஸ்வரன் கோயில் அமைந்துள்ள சுருட்டப்பள்ளியிலிருந்து 8 கி.மீ. தூரம்! இங்குள்ள மரகதாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் கோயில் 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது. ஆரணி ஆற்றங்கரையில் ஒரு சிவாலயத்திற்குரிய அனைத்து அம்சங்களுடன் திகழும் அழகான ஆலயம் இது.
மரகதக் கல்லினால் ஆன அழகிய தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் உள்ளது. கருவறையில் மூலவர் சிவலிங்கத்தின் மீது உள்ளங்கை அளவே உள்ள பாணலிங்கம் ஒன்றும் பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப்பற்றிய தலவரலாறாகச் சொல்லப்படுவது,
காசியம்பதியில், ஓர் அதிகாலைப் பொழுது கங்கையில் மூழ்கி எழுந்த ஒரு வைணவரின் கைகளில் உள்ளங்கை அளவே இருந்த பாணலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது, அதனை அப்படியே வெளியில் எடுத்தவர், கண்ணில் ஒற்றிக்கொண்டார். சிரசில் வைத்துக் கொண்டார். நெஞ்சில் வைத்துக்கொண்டாடினார். அந்த வைணவரின் பெயர் கோவிந்தபட்டர். ஸ்ரீ ராமானுஜரின் சகோதர உறவு முறையாவார்.
சிவவலிங்கத் திருமேனியைக் கண்டெடுத்ததால், உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார் எனப்போற்றப்பட்டார். இந்நிகழ்வுக்கு பிறகு சைவ சமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவரானார். அந்த பாணலிங்கமும் சிறிதுகாலம் காளஹஸ்தி கோயிலில் வைத்து பூஜிக்கப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு. காலப் போக்கில் கோவிந்தன் திரும்பவும் தன்னை வைணவ சம்பிரதாயத்தில் இணைத்துக்கொள்ள, ஸ்ரீராமானுஜர் கோவிந்தனைத் தனது சீடர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டு எம்பார் எனும் திருநாமத்தையும் சூட்டி அவருக்கு உபதேசித்து அருளினார்.
அந்த எம்பார் சுவாமிகள் என்கிற கோவிந்தனுக்காக ராமானுஜரின் உத்தரவுப்படி, வேங்கி தேசத்து ஒரு பகுதியான சந்திரகிரியை ஆண்ட கட்டித்தேவன் யாதவராயன் என்பவனால் கட்டப்பட்டதே வடதில்லை சிவாலயம். இந்த சிவாலயத்தில் மூலவர் பாபஹரேஸ்வரர்! ஆவுடையார் மேல் காணப்படுவது எம்பார் கையில் கிடைத்த பாணலிங்கம் எனக்கூறப்படுகிறது. தினசரி அபிஷேக ஆராதனைகள் இரண்டு மூர்த்திகளுக்கும் நடைபெறுகிறது.
பக்தர்கள் தங்கள் பாவங்கள், தோஷங்களுக்கு நிவர்த்தி வேண்டி இங்குள்ள ஈஸ்வரர்களை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
வரும் சிவராத்திரி நன்னாளில் (17.2.15) இரவு 10 மணிக்கு தொடங்கி நான்கு கால விசேட அபிஷேகங்கள் மற்றும் சங்காபிஷேகங்கள் நடைபெற உள்ளன.
பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இத்திருத்தலத்திற்கு சென்று மூலவருடன் காசியில் கிடைத்த பாணலிங்கத்தையும் தரிசித்து பாபஹரேஸ்வரரின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு : சண்முக குருக்கள்- 94452 96096/ கார்த்திகேய குருக்கள்- 90032 60725.
- எஸ். வெங்கட்ராமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.