இந்துமத அற்புதங்கள் 52: எலும்பிலிருந்து எழுந்த பூம்பாவை

பழைய மயிலாப்பூர் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த செல்வமும் செல்வாக்கும் மிக்க வணிகர் சிவநேசர் என்பவர்.
இந்துமத அற்புதங்கள் 52: எலும்பிலிருந்து எழுந்த பூம்பாவை
Updated on
1 min read

பழைய மயிலாப்பூர் திருத்தலத்தில் வாழ்ந்து வந்த செல்வமும் செல்வாக்கும் மிக்க வணிகர் சிவநேசர் என்பவர். கப்பல் வாணிகம் செய்து வந்த அவருக்குப் பூம்பாவை என்னும் மகள் இருந்தாள். மிகுந்த சிவபக்தரான சிவநேசர், திருஞானசம்பந்தப் பெருமானைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார். தன் ஒரே மகள் பூம்பாவையைத் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென ஆசைப்பட்டார் சிவநேசர். அதன் பொருட்டே மகளைச் சீரும் சிறப்புமாய் வளர்த்தார்.

அழகும் அறிவுமாய் வளர்ந்த பூம்பாவை நந்தவனத்தில் ஒருநாள் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளுக்குப் பனிரெண்டு வயது. எதிர்பாராத விதமாகப் பாம்பொன்று அவளைத் தீண்டியது. கருநாகத்தின் கொடிய விஷம் தாக்கியது. பலவித சிகிச்சைகள் செய்தும் பலனின்றிப் பூம்பாவை இறந்து போனாள். தன் மகளுக்கு ஈமக்கிரியைகளைச் செய்த சிவநேசர், ""என்ன இருந்தாலும் இந்தப் பெண்ணை ஞானசம்பந்தருக்கு என்றே வளர்த்தோம்; எனவே, இவள் அஸ்தியையும் கலசத்தில் இட்டு அவருக்கே அர்ப்பணிப்போம்'' என்று கருதி, அதேபோல் செய்தார். அஸ்தியைக் குடத்திலிட்டு, விளக்கு, மாலை, சாந்தம் என்று தோழிகளைக் கொண்டு உபசாரமும் செய்து வந்தார்.

இதற்கிடையில், திருவொற்றியூருக்கு வருகை புரிந்தார் ஞானசம்பந்தப் பெருமான். திருவொற்றியூரிலிருந்து மயிலாப்பூருக்கு நடைக்காவணமும், துகில் விதானமும் அமைத்து, பலவித உபசாரங்களோடு மயிலை கபாலீஸ்வரத்துக்கு அவரை அழைத்து வந்தார் சிவநேசர். மயிலையில் கபாலியையும் கற்பகவல்லியையும் வணங்கி ஞானசம்பந்தர் இருக்கையில், தன் மகளின் கதையைச் சொன்னார்.

ஞானசம்பந்தரும் தன்முன் சிவநேசர் கொண்டு வைத்த கலசத்தைக் கண்டார். கலசத்தில் எலும்புத் தொகுப்பாயிருந்த பூம்பாவையை நோக்கிப் பாடினார் ஞானசம்பந்தர். ""கபாலீஸ்வரத்துத் திருக்கோயில் திருவிழாக்களைக் காணாமல் போய்விட்டாயே பூம்பாவாய்! எழுந்துவா!'' என்று பதிகத்தில் அழைத்தார்.

அவர் அழைப்பிற்குக் கட்டுப்பட்டு பூம்பாவையும் உயிருடன் தோன்றினாள்.

மயிலாப்பூரில் பூம்பாவைக்கு உயிர் கொடுக்க, திருஞான

சம்பந்தர் பாடிய பதிகம்

"மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை

கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்''

மயிலாப்பூர் தலத்தினைச் சென்றடையும் வழி:

தருமமிகு சென்னை மாநகரின் நடுவில் அமைந்துள்ளது மயிலாப்பூர்.

இறைவன் - கபாலீஸ்வரர், இறைவி - கற்பகாம்பாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com