சோதிடத்தில் முக்கிய பங்காற்றும் குரு பகவானை, "குரு பார்க்க கோடி நன்மை' என்று போற்றுவார்கள். இது குருவின் முக்கியத்தை குறிப்பிடுவதாகும். குரு எழுவர் என்று குறிப்பிடுகின்றனர். 1. தேவர்களின் குரு பிரஹஸ்பதி எனப்படும் வியாழ பகவான், 2. அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார், 3. ஞான குரு எனப்படும் பிரும்மா, 4. விஷ்ணு குரு எனப்படும் நாராயணர், 5. சக்தி குரு எனப்படும் பார்வதி, 6. சிவ குரு எனப்படும் பரமேஸ்வரன், இவர்களின் அனைத்து சக்திகளும் ஒருமித்து இணைந்த தட்சிணாமூர்த்தி ஆதி குரு எனப்படுகிறார்.
ஆதி குரு: சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முதல்வனாக இருந்து நால் வேதம், ஆறங்கம் ஆகியவற்றைக் கல்லாலின் கீழமர்ந்து உபதேசம் செய்தார் சிவ பெருமான். சிவ பெருமான் மூலம் "வேதம், வியாகரணம்' ஆகியவை உலகிற்குக் கிடைத்தது. உலகிற்கே உண்மைப் பொருளை உணர்த்திய சிவபெருமானாகிய தட்சிணாமூர்த்தி ஆதிகுரு எனப்படுகிறார்.
வியாழ குரு: ஒவ்வொருவரது வாழ்விலும் குரு முக்கியப் பங்காற்றுகிறார் என்பது அனுபவம் மற்றும் சோதிடவியல் உண்மை ஆகும். இவரே பிருஹஸ்பதி எனப்படும் வியாழ குருவாகும். சமுதாயத்தில் உயர்வு, மதிப்பு, புண்ணியம், கடமையுணர்ச்சி, பிறரிடமிருந்து பெறும் நல்ல பெயர் இவைகளுக்கெல்லாம் காரணகர்த்தாவாக திகழ்கின்றவர் குரு பகவான்! இவர் போற்றியதும் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட தலமாகவும் விளங்குகிறது சென்னையில் உள்ள திருவலிதாயம் திருத்தலம்.
சென்னையில் உள்ள "பாடி' என்ற ஊர் முன்பு திருவலிதாயம், சிந்தாமணிபுரம், முல்லைவனம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது. இங்கு, பாதிரி மரத்தின் கீழ் சுயம்புவாய் உதித்த திருவல்லீஸ்வரரை விஷ்ணு, ராமர், அனுமன், சுக்கிரீவன், லவ-குசர்கள், அகத்தியர், பிரும்மன், வாயு, மன்மதன், அக்னி, சூரிய சந்திரர், யமன் ஆகியோர் வணங்கி வழிபட்டு பலன் பெற்றுள்ளனர்.
இத்தலம், காசி, காளத்தி, காஞ்சி, ஆரூர், தில்லை போன்ற தலங்களைப் போன்று சிறந்தது என தலப் புராணம் குறிப்பிடுகிறது. இத்தலத்தில் வசித்தோர், வந்தோர், பிறந்தோர், இறந்தோர், வலம் வந்தோர் அனைவரும் முத்தி அடைவர். குரு பகவான் தான் செய்த பாவத்திற்குக் கழுவாய் தேடி பலன் பெற்று இங்கேயே தங்கி இறைவனை வணங்குவோர்க்கு அருள் வழங்குகிறார் என்பதை ஆலய வரலாறு தெரிவிக்கிறது.
பிரும்மனின் மகள்கள் கமலை, வல்லி என்னும் இருவர் திருமண வயதை அடைந்ததும் தாங்கள் தந்தையாரிடம் சுத்த சத்துவ பரம்பொருளான சிவ பெருமானை மணம் செய்து கொள்ளும் ஆவலைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களை சிவ பூஜை செய்யும்படியாக கூறினார் பிரும்மன். அவ்விருவரின் தவத்திலும் பூஜையிலும் மகிழ்ந்த சிவபெருமான், கானகத்தில் ஒரு பாதிரி மரத்தடியில் சுயம்புவாய் சிவலிங்க வடிவில் எழுந்தருளி காட்சி தந்து, ""வேண்டும் வரம் என்ன?''
எனக் கேட்டார். அவர்களோ சிவனை மணக்கும் ஆவலை வெளியிட்டனர். தான் ஏற்கெனவே உமைக்கு தன் உடலில் பாதியைத் தந்து விட்டதால் அது இயலாது எனவும் விநாயகப் பெருமான் இங்கு வந்து தன்னை பூஜை செய்யும் போது, அவரை மணக்கும்படியாகவும் அதுவரை இத்தலத்தில் பூஜை தவம் செய்து கொண்டிருக்கும்படியாகவும் கூறி அருளினார்.
அந்த பெண்கள் இருவரும் ""முதலில் தோன்றிய இத்தலம் அனைத்துத் தலத்தினும் மேன்மை பெற்று ஆதி தலமாக விளங்க வேண்டும். இத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்க வேண்டும்'' என்று வேண்டினர். அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலை ஆகிய சிவனார் அவ்வாறே பாதிரி மரத்தடியில் இருந்தபடியே பூஜை முதலியவற்றை ஏற்றுக் கொண்டு அருளினார்.
ஒருசமயம், கயமுகாசுரன் என்னும் அசுரன் அனைவருக்கும் அல்லல் தந்து வந்தான், தேவர்கள் எல்லோரும் சேர்ந்து சிவ பெருமானிடம் சென்று முறையிட, அவர்களை சமாதானம் செய்து அனுப்பினார் சிவனார். வேத ஆகமங்கள் உற்பத்தி செய்த சக்தி, சிவ பிரணவங்கள் ஒன்றாகக் கூடி சத்தி சதர்கள் ஆக ஒன்று திரண்டு வேழ முகமும் விளங்கும் ஐங்கரமுமாகத் தோன்றினார் விநாயகர்! சிவ பெருமான் வழிகாட்டுதலின் படி அசலன் என்னும் பூத கணத்தின் மீதேறி கயமுகாசுரனை அழிக்கப் புறப்பட்டார்.
இந்த சண்டையில் கயமுகாசுரன் படைகள் சின்னாபின்னமாக, அவனை வெல்ல ஆயுதம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க எண்ணினார் விநாயகர், அப்போதுதான் கயமுகன் தான் மனிதனால் வடிக்கப்பட்ட எந்த ஒரு ஆயுதங்களாலும் கொல்லப்படக் கூடாது என்ற வரத்தினைப் பெற்றிருக்கிறான் என்பது தெரிய வந்த்து. அவனை ஜெயிக்கும் உபாயத்தைக் கண்டுபிடித்த வேழமுகன், தனது தந்தம் ஒன்றை உடைத்து அவனை நோக்கி ஏவினார். அது கயமுகனை இரண்டாகப் பிளந்ததுடன் அப்படியே விண்ணில் எழுந்து, கங்கையில் மூழ்கி மீண்டும் பெருமான் கரத்தில் வந்து அமர்ந்தது. துண்டு பட்ட கயமுகாசுரனை பெருச்சாளியாக ஆக்கி அதன் மீது ஏறி அமர்ந்து தனது வாகனமாக்கிக் கொண்டார் விநாயகர்!
சிவனும் உமையும் பகடை ஆடும் சமயத்தில் மஹாவிஷ்ணு சாட்சியாக இருந்தார். அவ்விளையாட்டில் சிவன் தோற்றும் சக்தி வெற்றியும் பெற்றாள். எதிர் விளைவு என்னவாக இருக்கும் என்பதை உணராமல் சிவன் வென்றதாக தவறாகச் சொல்ல கோபம் கொண்ட உமை, விஷ்ணுவை குருட்டுப் பாம்பாகப் போகச் சபித்தார். தனக்கு பரிந்து பேசியதால் சாபத்துக்கு ஆளான மகாவிஷ்ணுவுக்கு "தங்கள் இருவரின் சக்தி' இருக்கும் வழியாக வரும்போது சாபம் விலகும் என அருளினார் சிவனார்.
கயமுகாசுரனை வென்று பெருச்சாளி வாகனத்தின் மீதேறி தன் படை பரிவாரம் சூழ பாலை வனத்தின் வழியாக வரும்போது ஒரு மரப்பொந்தில் பார்வை இழந்த மஹாவிஷ்ணு கண்பார்வை பெற்று விநாயகரை வணங்கி வாழ்த்தினார். விநாயகர், அங்கிருந்து தெற்கே முல்லை வனம் என்னும் இத் தலத்திற்கு வந்து பாடிவீடு அமைத்துத் தங்குகையில் அங்கு ஒரு பாதிரி மரத்தின் அடியில் சிவபெருமான் காட்சி தந்ததையும், அந்த லிங்க வடிவிற்கு பிரும்மனின் மகள்கள் கமலை, வல்லி ஆகியோர் பூஜைகள் செய்து கொண்டிருப்பதையும் கண்டு, ஓர் அஷ்டமியில் சுயம்பு மூர்த்தியை பூசித்து பிரும்மன் மகள்களை சிவ பெருமான் கட்டளைப்படி மணம் புரிந்து கொண்டார்.
குரு பகவான், உதத்திய முனிவரின் பத்தினியான மமதையிடம் பெற்ற சாபத்திலிருந்து விடுபட, மார்க்கண்டேய முனிவரின் ஆலோசனைப்படி திருவலிதாயம் சென்று ஈசனை வணங்கி தவமிருந்து சாப விமோசனம் பெற்றார். அதோடு இத்தலத்திற்கு வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி, அவர்களது வேண்டுதல்களை வழங்கி அருள்கிறார்.
திருவலிதாயம் ஒரு சிறந்த பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது. சிவனால் விநாயகருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட தலம் இது. குரு பகவான் தன்னைப்பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்பும் தனி சந்நிதியும் உண்டு. வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது சிறந்த குரு தலமாக விளங்குகிறது. படிக்கும் குழந்தைகள் நல்ல ஞாபக சக்தி பெறவும் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் குரு பகவானை வணங்கி வழிபடுகின்றனர். திருமணத் தடை உள்ளவர்கள், ஒன்பது வியாழக்
கிழமைகளில் இங்கு குருவிற்கு விளக்கேற்றி வழிபட்டு கடைசி வாரம் கொண்டைக் கடலை பிரசாதத்தை பக்தர்களுக்கு
வழங்குவதால் தடைபட்ட திருமணங்கள் நடந்தேறும்.
வரசித்தி விநாயகருக்கு மூன்று மாலைகள் சாற்றி வழிபட்டால் திருமண பாக்கியம் கைகூடும். மூலவருக்கு ஒவ்வொரு மாதமும் பெüர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல செüபாக்கியங்களும் கிடைக்கப்பெறுவர்.
உலக நலன் வேண்டி எதிர் வரும் 05.07.2015 அன்று வியாழ குரு பெயர்ச்சியாவதைக் கருத்தில் கொண்டு 04, 05, 06 ஆகிய தேதிகளில் லட்சம் அர்ச்சனைகளும், தொடர்ந்து குரு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 044 2654 0706/ 98848 91551.
- இரா. இரகுநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.