உணவு: உடலும் மனமும் சார்ந்தது

ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி'' - "ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
உணவு: உடலும் மனமும் சார்ந்தது
Updated on
2 min read

ஆஹார சுத்தெள ஸத்வ சுத்தி'' - "ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும்' என்கிறார் சுவாமி பிரபுபாதா. அதனால், ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மிகவும் அவசியமாகிறது.

உணவும் மனமும் நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும் தொடர்புண்டு என்கின்றன நம் சமய நூல்கள். ஒருவர் உண்ணும் உணவு உடல் (வலிமை), மனம், மலம் (கழிவுப் பொருள்) ஆகிய மூன்று கூறாக ஆகும் என்பதை திருமூலர் ஒரு பாடலில் கூறியுள்ளார்.

அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்

பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்

திருந்தும் உடன்மல மாம்கூறு சேர்ந்திட்டு

இருந்தன முன்னாள் இரதம தாகுமே!

இப்பாடலின் கருத்தை அடியொற்றி, ""ஒருகூறு மலமாகும் ஒருகூறு உடம்பாகும் ஒருகூறு மனமாகும் உண்டற்ற அன்னம்'' என்கிறது "சசிவன்னபோதம்' என்கிற நூல். ஒருவர் உண்ணும் உணவு தூல உடம்பிற்கு வலிமையைத் தரும் என்பதையும், கழிவுப் பொருளாகிய மலமாகும் என்பதையும் எல்லோரும் அறிவர். ஆனால், உண்ணும் உணவின் ஒருகூறு மனமாகுமா? என்பது பலருடைய கேள்வி.

இதற்குத் தகுந்த உதாரணம், மது, அபின், கஞ்சா போன்ற போதை மருந்துகளைக் குறிப்பிடலாம். இவற்றைப் பருகியவுடன் பருகியவருக்கு மயக்கம் உண்டாகிறது. இதனால், உடலுக்குள் சென்ற ஒன்று அதன் குணத்திற்குத் தக்கவாறு அவரது உடம்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உணவிற்கும் மனதிற்கும் தொடர்புண்டு என்கின்றனர் அருளாளர்கள்.

உணவும் முக்குணமும்: ஒவ்வொருவரின் மனமும் சாத்துவிகம் அல்லது சத்துவம், இராசதம் (இராஜதம்), தாமதம் (தாமஸம்) ஆகிய மூன்று குணங்களுக்கு இடமாகத் திகழ்கிறது.

பகவத்கீதை, குணத்ரய விபாக யோகம் (14) என்ற அத்தியாயத்தில், மக்கள் உண்ணும் உணவினை வைத்து, சத்துவ குணத்தார் உணவு, இராசத குணத்தார் உணவு, தாமச குணத்தார் உணவு என்று மூன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது. அம் மூவகை உணவுகள் வருமாறு:

சத்துவகுணத்தார் உணவு: ஆயுள், அறிவு, வலிமை, உடல்நலம், இன்பம், விழுப்பம் ஆகிய இவை உண்டாக்குபவை. இன்பச்சுவையை விளைவிப்பவையும், பசையுள்ளவையும் ஆகிய இவையெல்லாம் சத்துவகுண உணவாகும்.

இராசத குணத்தார் உணவு: கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிகச்சூடானது, காரம், வறட்சி, எரிச்சல் இவற்றை உண்டாக்குபவை. காமம், சினம் முதலானவற்றை உண்டாக்குவன இவ்வுணவின் தன்மை.

தாமச குணத்தார் உணவு: காலம் கழிந்தது, சுவையற்றது, கெட்ட நாற்றத்தை உடையது, மிகப் பழைமையானது, தூய்மையற்றது, வேகாதது முதலானவை இவ்வுணவின் தன்மை. புலால், கள், சாராயம் முதலானவை இதில் அடங்கும்.

சத்துவம், ராசதம், தாமசம் என்னும் பிரகிருதியிலிருந்து உண்டாகும் குணங்கள், அழிவில்லாத தேகியான ஜீவனை (அழிகின்ற) தேகத்தோடு பிணைத்து வைக்கின்றன (கீதை-5). அவற்றில் சத்வ குணமானது

மாசற்றதும், ஒளிபொருந்தியதும், துன்பமற்றதும் ஆகும். எனவே, அது ஜீவனை சுகத்தாலும் ஞானத்தாலும் பந்தப்படுத்துகிறது (6). ரஜோகுணம் இச்சை வடிவானது. ஆசையையும் பற்றுதலையும்

உண்டாக்குவது. அது தேஹியை (ஜீவனை) கர்மப் பற்றால் பந்தப்படுத்துகிறது (7). தமோ குணமானது அறியாமையில் பிறந்ததென்றும், அது எல்லா உயிர்களுக்கும் மயக்கத்தை உண்டாக்குவது என்றும்

அறிவாய். அது கவனமின்மை, சோம்பல், உறக்கம் இவற்றால் பந்தப்பட்டது(8). எப்போது இத்தேகத்தின் எல்லா புலன்களின் வழியாக ஞானம் பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் பெருகியுள்ளது.

என்று அறிந்துகொள்வாய்(9). சத்வ குணத்தார் மேல்நோக்கிப் போகிறார்கள். ராசத குணத்தார் மத்தியில் நிற்கிறார்கள், கீழோனான தாமச குணத்தோர் கீழ்நோக்கிப் போகிறார்கள்(18). தேகத்தால் உண்டாகும்.

இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் இவைகளிலிருந்து விடுபட்ட ஜீவன் மரணமற்றப் பெருவாழ்வை அடைகிறான்(20) என்கிறது பகவத்கீதை.

இம்மூவகைக் குணங்களுள் சத்துவகுணம் மேலிட்டால் சன்மார்க்கமான தெய்வகுணம் உண்டாகும் என்றும், இராசத குணம் மேலிட்டால் உலக வாசனை (உலகப்பற்று), தேகவாசனை முதலான எண்ணங்கள் உண்டாகும் என்றும், தாமசகுணம் மேலிட்டால் துன்மார்க்கமான (தீய) எண்ணங்கள் உண்டாகும் என்றும் தாண்டவராய சுவாமிகள் இயற்றிய "கைவல்ய நவநீதம்' என்னும் வேதாந்த நூல் குறிப்பிடுகிறது (கைவல்ய நவநீதம், சந்தேகம் தெளிதற்படலம், செ.16).

நாம் உண்ணும் உணவிலிருந்து அவ்வுணவின் பண்பாக மன உணர்வு தோன்றுகிறது. அம் மனவுணர்வு நல்ல உணர்வு, தீய உணர்வு என்று இருவகைப்படும். ஆகையால் தீய உணர்வுகளைத் தரும் உணவுப் பொருள்களை விலகிவிட்டு, நல்ல உணர்வுகளைத் தரும் இயற்கை உணவுகளை- தாவர உணவுகளை மட்டுமே உட்கொண்டு நல்லுணர்வை வளர்த்துக்கொண்டு மனிதருள் தெய்வமாக உயர வேண்டும்.

இத்தகைய தெய்வ மாற்றம் நிகழ வேண்டுமானால், "எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதி அன்பு செய்து வாழும் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும். அவ்வாறு ஜீவகாருண்யத்தோடு வாழ்வோர் உள்ளத்தில் மட்டுமே இறைவன் உறைவான் என்கிறது அன்பு நெறியாகிய சைவநெறி.

- இடைமருதூர் கி.மஞ்சுளா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com